புதிய அரசியல் சாசனத்தில் சாத்தியமானவரையில் அம்மக்களுக்கு அதிக அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தருவதற்கு, தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் விரும்புபவர் உறுதியாகப் போராடுவார் என்று நான் நினைத்திருக்க வேண்டும். ஆனால், மகாத்மாவின் சிந்தனைப் போக்குகள் நிச்சயமாக என்னால் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. வகுப்புவாரி தீர்ப்பின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றுள்ள மிகவும் குறைவான அரசியல் அதிகாரத்தை அதிகரிப்பதற்கு – அவர் முயற்சி செய்யவில்லை என்பது மட்டுமின்றி, அதற்கு மாறாக, அவர்கள் பெற்றுள்ள குறைவான அதிகாரத்தையும் பறிப்பதற்காக, அவர் தன்னுடைய உயிரையே பணயம் வைத்துள்ளார்.

ambedkar_330இது, தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் வாழ்விலிருந்தே முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு மகாத்மாவின் முதலாவது முயற்சி அல்ல. சிறுபான்மையினர் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை முறியடிப்பதற்காக மகாத்மா, முஸ்லிம்களுடன் ஓர் உடன்பாடு காண்பதற்கு முயன்றார். முஸ்லிம்கள் முன் வைத்த 14 கோரிக்கைகள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொண்டார். அதற்கு கைமாறாக, தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பில் நான் முன்வைத்த சமூகப் பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கைகளை எதிர்ப்பதில் தன்னுடன் சேர்ந்து நிற்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

அத்தகைய ஒரு கொடுஞ்செயலுக்கு தாங்கள் பங்காளியாக இருக்க மாட்டோம் என்று மறுத்ததற்காக, முஸ்லிம் பிரதிநிதிகளைப் பாராட்ட வேண்டும்; மற்றும் முகமதியர்களும் திரு. காந்தியும் ஒன்றிணைந்து எதிர்த்திருந்தால், அதன் விளைவாக ஒரு பேராபத்தே விளைந்திருக்கும். அவ்வாறு ஏற்படாமல் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக் காப்பாற்றியுள்ளனர்.

வகுப்புவாரி தீர்ப்புக்கு திரு. காந்தியின் எதிர்ப்புக்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வகுப்புவாரி தீர்ப்பு இந்து சமூகத்தைப் பிரித்துவிட்டது என்று அவர் கூறுகிறார். ஆனால் அதற்கு மாறாக, இந்து லட்சியத்தின் மிகவும் வலுவான ஆதாரவாளரும், அதனுடைய நலன்களுக்காக தீவிரமாக வாதாடுகின்றவருமாகிய டாக்டர் மூஞ்சே, இது தொடர்பாக முற்றிலும் வேறுபட்ட ஒரு பார்வையைக் கொண்டிருக்கிறார். லண்டனிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து அவர் நிகழ்த்திவரும் உரைகளில் டாக்டர் மூஞ்சே, வகுப்புவாரி தீர்ப்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், இந்துக்களுக்கும் இடையில் எத்தகைய பிரிவினையையும் ஏற்படுத்தவில்லை என்று வலியுறுத்தி வருகிறார்.

உண்மையில் அவர், தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்களிடமிருந்து அரசியல் ரீதியில் பிரிப்பதற்கான என்னுடைய முயற்சியில் என்னை அவர் தோற்கடித்துவிட்டதாகப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். வகுப்புவாரி தீர்ப்பு பற்றிய தனது விளக்கத்தில் டாக்டர் மூஞ்சே சரியாகவே கூறியிருக்கிறார் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். ஆனால் அதே நேரத்தில், அதற்கான பெருமை நியாயமாக டாக்டர் மூஞ்சேவுக்கு போய்ச் சேரும் என்று நான் நிச்சயமாகக் கூறமாட்டேன். எனவே, ஒரு வகுப்புவாதி என்று அறியப்படாத, தேசியவாதியாக உள்ள மகாத்மா, வகுப்புவாரி தீர்ப்பை தாழ்த்தப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட வரையில் டாக்டர் மூஞ்சே போன்ற வகுப்புவாதிகள் பார்ப்பதற்கு, நேர்முரணான முறையில் பார்ப்பது மிகவும் வியக்கத்தக்கதாயிருக்கிறது. வகுப்புவாரி தீர்ப்பில் தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்களிடமிருந்து பிரிப்பதாக எதையும் டாக்டர் மூஞ்சே உணராத நிலைமையில், அது தொடர்பாக மகாத்மா மிகவும் நிறைவான உணர்வைப் பெற வேண்டும்.

வகுப்புவாரி தீர்ப்பு இந்துக்களை திருப்திப் படுத்த வேண்டும் என்பது மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட மக்களிடையில் உள்ள கூட்டுத் தொகுதிகளுக்கு ஆதரவாக உள்ள ராவ் பகதூர் ராஜா, திரு. பாலு அல்லது திரு. கவாய் போன்ற தனி நபர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். சட்டப் பேரவையில் திரு. ராஜாவின் உரத்த கண்டனம் எனக்கு பெருமளவு வேடிக்கையாக இருந்தது. தனித்தொகுதிகளின் தீவிர ஆதரவாளரும், சாதி இந்து கொடுங்கோன்மையை மிகக்கடுமையாகவும் தீவிரமாகவும் எதிர்ப்பவருமான இவர், தற்பொழுது கூட்டுத் தொகுதிகளில் நம்பிக்கை வைத்து இந்துக்களின்பால் நேசம் பாராட்டுகிறார். வட்டமேசை மாநாட்டிற்கு அழைக்கப்படாததால், மிகவும் மறக்கப்பட்டுப் போன நிலையிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்ளும் அவரது இயல்பான விருப்பத்தின் விளைவாக, எந்த அளவு இந்த மனமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும், எந்த அளவு அவர் நேர்மையாக இவ்வாறு மாறியுள்ளார் என்பதையும் நான் விவாதிக்க விரும்பவில்லை.

வகுப்புவாரி தீர்ப்பு தொடர்பாக அவருடைய விமர்சனம் என்ற வகையில் திரு. ராஜா இரண்டு அம்சங்களைக் கூறுகிறார். ஒன்று, தாழ்த்தப்பட்ட சாதியினர், மக்கள் தொகை அடிப்படையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை விடவும் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களையே பெற்றுள்ளனர். மற்றொன்று, தாழ்த்தப்பட்ட சாதியினர் இந்து அரவணைப்பிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்.

அவருடைய முதலாவது ஆவலாதியை நான் ஒப்புக் கொள்கிறேன்; ஆனால், வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் தமது உரிமைகளை விற்று விட்டார்கள் என்று ராவ் பகதூர் குற்றம் சாட்டத் தொடங்கும்போது, இந்திய மத்தியக் குழுவின் ஓர் உறுப்பினர் என்ற வகையில் திரு. ராஜா என்ன செய்தார் என்பதை நான் சுட்டிக் காட்டுவதற்கு கடமைப்பட்டுள்ளேன். அக்குழுவின் அறிக்கையில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சென்னையில் 10 இடங்கள் (மொத்தம் 150); பம்பாயில் மொத்தம் உள்ள 114 இல் 8 இடங்கள்; வங்காளத்தில் மொத்தம் உள்ள 200 இல் 8 இடங்கள்; உத்திரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 182 இல் 8 இடங்கள்; பஞ்சாபில் மொத்தம் உள்ள 150 இல் 6 இடங்கள்; மத்திய மாகாணங்களில் மொத்தம் உள்ள 125 இல் 8 இடங்கள்; அஸ்ஸாமில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் உள்நாட்டு மற்றும் பழங்குடி இனங்களுக்கு மொத்தம் உள்ள 75இல் 9 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இடங்கள் விநியோகிக்கப்பட்டது, மக்கள் தொகையில் எந்த வகையில் பொருந்துகிறது என்பதை சுட்டிக்காட்டுவதன் மூலம் இந்த அறிக்கையில் மேலும் சுமையேற்றுவதற்கு நான் விரும்பவில்லை. ஆனால், இது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மிகமிகக் குறைவான பிரதிநிதித்துவம்தான் என்பதில் எத்தகைய அய்யமும் இருக்க முடியாது. இந்த இடங்கள் விநியோகத்தை திரு. ராஜா ஒப்புக் கொண்டுள்ளார். நிச்சயமாக திரு. ராஜா, வகுப்புவாரித் தீர்ப்பை விமர்சனம் செய்வதற்கும், மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன்னதாக, அவர் இந்திய மத்திய குழுவின் உறுப்பினர் என்ற வகையில், தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பில், எத்தகைய எதிர்ப்பும் இன்றி என்னை ஏற்றுக் கொண்டார் என்பதை மீண்டும் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். பிரதிநிதித்துவத்தின் மக்கள் தொகையுடனான தகவு, தாழ்த்தப்பட்ட மக்களின் இயற்கையான உரிமை என்றும், அவர்களின் பாதுகாப்புக்கு இது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கருதியிருந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைத்த போது திரு. ராஜா மத்தியக் குழுவில் இதை ஏன் வற்புறுத்தவில்லை?

வகுப்புவாரி தீர்ப்பில், தாழ்த்தப்பட்ட சாதியினர் சாதி இந்துக்களிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர் என்ற அவருடைய கூற்றை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. தனித் தொகுதிமீது திரு. ராஜாவுக்கு மனசாட்சி பூர்வமான ஆட்சேபனை ஏதும் இருக்குமேயானால், தனித்தொகுதியில் ஒரு வேட்பாளராக அவர் நிற்க வேண்டுமென்று எவரும் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. பொதுத் தொகுதியில் ஒரு வேட்பாளராக நிற்பதற்குள்ள வாய்ப்பும், அதிலேயே அவர் வாக்களிப்பதற்கான உரிமையும் இருக்கவே செய்கின்றன. திரு. ராஜா அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு எவ்விதத் தடையு மில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினரின்பால் சாதி இந்துக்களிடம் முழு மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உறுதியளிப்பதற்கு திரு. ராஜா உரத்த குரலில் முழக்கமிடுகிறார். அந்த பிரச்சனையை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு நிறைவளிக்கும் வகையில் நிரூபணம் செய்வதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். பொதுத் தொகுதியில் அவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம், அவருடைய வார்த்தையை நம்புவதற்கு அம்மக்கள் தயாராக இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின்பால் அன்பும் அனுதாபமும் கொண்டுள்ள இந்துக்களும் திரு. ராஜாவை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் தமது நேர்மையை நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள்.

எனவே, வகுப்புவாரி தீர்ப்பு, தனித்தொகுதிகள் கேட்போரையும் கூட்டுக் தொகுதிகளை விரும்புவோரையும் நிறைவு செய்துள்ளது என்று கருதுகிறேன். இந்தப் பொருளில், இது ஏற்கனவே ஒரு சமரசத்திட்டமேயாகும். அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மகாத்மாவைப் பொருத்தமட்டிலும், அவர் என்ன விரும்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. தனித்தொகுதிகள் முறையை மகாத்மா எதிர்த்த போதிலும், ஒதுக்கப்பட்ட (ரிசர்வ்) இடங்களுடன் கூடிய கூட்டுத் தொகுதிகள் முறையை அவர் எதிர்க்கவில்லை என்று கருதப்படுகிறது. இது முற்றிலும் தவறானதாகும். இன்று அவருடைய கருத்துகள் என்னவாக இருந்தபோதிலும், லண்டனிலிருக்கும்போது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எந்த முறையிலான சிறப்புப் பிரதிநிதித்துவத்தையும் – கூட்டுத் தொகுதிகளாயினும் அல்லது தனித் தொகுதிகளாயினும் சரி – அவர் முற்றாக எதிர்த்தார்.

ஒரு பொதுத் தேர்தலில், வயது வந்தோருக்கு வாக்குரிமை அடிப்படையில் வாக்களிக்கும் உரிமைக்கு அப்பால், சட்டப் பேரவைகளில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும் வகையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவும் வழங்குவதற்கு அவர் தயாராக இல்லை. தொடக்கத்தில் இந்த நிலையைத்தான் அவர் மேற்கொண்டார். வட்டமேசை மாநாட்டின் முடிவில் அவர் ஒரு திட்டத்தை எனக்கு யோசனையாகக் கூறினார். அதைப் பரிசீலனை செய்வதற்கு தான் தயாராயிருப்பதாகவும் கூறினார். அத்திட்டம் முற்றிலும் மரபு சார்ந்ததேயாகும். அதற்கு அரசியல் சட்டம் சார்ந்த அனுமதி எதுவும் தேர்தல் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியொரு இடம்கூட அதன்படி ஒதுக்கப்படவில்லை. 

– வளரும்

ஆதாரம் : பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1)

என் மீது பழி சுமத்த அவர்களுக்கு உரிமை இல்லை''

"தி டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேட்டுக்கு டாக்டர் அம்பேத்கர் எழுதிய கடிதம் :

அய்யா,

தாழ்த்தப்பட்ட மக்களை பாதிக்கும் வகையில் உள்ள வகுப்புவாரி தீர்ப்பு தொடர்பாக, தங்களுடைய கொள்கையை மாற்றிக் கொள்ளும்படி பிரிட்டிஷ் அரசை பொதுமக்கள் நிர்பந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, மாநகரின் பல்வேறு பகுதிகளில் அவசரநிலைக் குழுவின் சார்பில் சுமார் எட்டு பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன என்ற செய்தியை இன்றைய நாளேட்டில் கண்டு நான் வியப்புற்றேன். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்திற்காக பிரதமரின் தீர்ப்பில் வகை செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாட்டுக்கு எதிராக, பொதுமக்கள் கருத்தை திரட்டுவதே இத்தீர்மானத்தின் நோக்கம் என்பது வெளிப்படை.

இப்பிரச்சினை தொடர்பாக உயிர்த் தியாகம் செய்யும் தனது முடிவை மகாத்மா காந்தி அறிவித்ததிலிருந்து, சில புகழ்பெற்ற இந்து தலைவர்களுக்கும் எனக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலையில் அவசரநிலைக் குழுவின் ஒரு கூட்டத்தில் பங்கேற்கும் படி எனக்கு அழைப்பு வந்தது. நான் அக்கூட்டத்தில் பங்கேற்றேன். நான் அக்கூட்டத்தில் இருந்த வரையிலும் அத்தகைய நிகழ்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை; அல்லது பொதுக் கூட்டத்தில் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அத்தகைய எந்தத் தீர்மானம் பற்றியும் எதுவும் பேசப்படவில்லை. நேற்றைய கூட்டத்தில் அத்தகைய தீர்மானத்தின் நகல் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தால், நான் அத்தீர்மானத்தின் வாசகத்திற்கு ஆட்சேபம் தெரிவித்திருப்பேன் என்பது மட்டுமின்றி, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் எத்தகைய பொதுகூட்டங்கள் நடத்தும் யோசனையையும் நான் எதிர்த்திருப்பேன்.

உண்மையில் எந்தக் கட்சியினாலும் எத்தகைய பிரச்சாரமும் நடத்தப்படக் கூடாது என்று புரிந்து கொள்ளப்பட்டிருந்தது.

எனவே இந்த நோக்கமானது, எனது கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து நிறைய நிர்பந்தம் வந்தபோதிலும் வகுப்புவாரித் தீர்ப்புக்கு ஆதரவாக நிர்பந்தம் வந்தபோதிலும், வகுப்புவாரி தீர்ப்புக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்துவதினின்றும் அல்லது பிரச்சாரம் தொடங்குவதினின்றும் என்னைத் தடுத்தது.

அவசர நிலைக் குழு நடத்துவதாக உத்தேசித்துள்ள இந்தப் பொதுக் கூட்டங்களும், நிறைவேற்றப்படவுள்ள தீர்மானமும் என்னையும் எனது கட்சியையும் ஆத்திரமூட்டும் ஒரு சவாலேயாகும். என்னுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருபவர்கள் எனக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்த முடியாது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தைகளின் பயனாக, இணக்கமான தீர்வு காண்பதை எதிர்பார்க்கவும் முடியாது. இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் அல்லது நேரடியான மோதல்தான். இரண்டும் ஒரு சேரச் செல்ல முடியாது. பிற தரப்பு பிரச்சாரம் நடத்துவதற்கு தங்களுக்கு உரிமையிருக்கிறது என்று பிடிவாதம் செய்வார்களேயானால், என்னுடைய கட்சியும் அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்துவதற்கு முடிவு செய்தால், என் மீது பழிசுமத்துவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

பம்பாய் செப்டம்பர் 18,1932

Pin It