ஒரு குடிமைச் சமூகத்திற்கான கல்விக் கண்ணை குத்தி ஊனமாக்க முனைந்துள்ள அ.தி.மு.க. அரசு, ஒரு மாபெரும் அநீதியை மாணவர் சமூகத்திற்கு இழைத்துள்ளது. முடக்கி வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை திரும்பப் பெற முடியாமல், நீதிமன்றத்தை நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். இச்சூழலில் "சமச்சீர் கல்விக்கான கல்வியாளர்கள் குழு' எழும்பூர் இக்சா அரங்கத்தில் 5.7.2011 அன்று, சமச்சீர் கல்வி குறித்த கருத்தரங்கை ஒருங்கிணைத்தது.

kalvi_600

இக்கருத்தரங்கில் பேசிய கல்வியாளர் வசந்தி தேவி, “தமிழ் நாட்டில் கல்வி ஆண்டு தொடங்கும் நேரத்தில், குழந்தைகள் பகடைக் காய்களாக ஆக்கப்பட்டு அல்லல்பட்டு கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதையும் சமச்சீர் கல்வி பிரச்சனை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் – என்ன செய்வதென்றே தெரியாமல் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய ஆளும் கட்சி, ஏதோ தி.மு.க.வின் மீதுள்ள காழ்ப்புணர்வு காரணமாகத்தான் சமச்சீர் கல்வி முறையை ஒத்தி வைக்கிறார்கள் என நினைக்காமல், அதன் பின் உள்ள தீய சக்திகள் எவை எவை, யார் யார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“முந்தைய அரசு தானாக விரும்பி இந்த சமச்சீர் கல்வி முறையை கொண்டு வரவில்லை. பல போராட்டங்களின் விளைவாகவே இது சாத்தியப்பட்டது. அதுவும் தி.மு.க. அரசு கொண்டு வந்தது சமச்சீர் கல்வி கிடையாது; அது பொதுப்பாடத் திட்டம் மட்டும்தான். ஆனால், சமச்சீர் கல்விக்கான முதல் படி. அதுவே இப்போது இடிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வியில் உள்ள பாடத்திட்டங்கள் தரமற்றவை என்றால், சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்து அடுத்த ஆண்டு மாற்றிக் கொள்ளலாம். அதற்கு மாறாக, அதனை நிறுத்தி வைப்பது என்பது வன்ம அரசியலின் வெளிப்பாடு. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் என பல தரப்பினரிடமும் விவாதித்து ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கியது, தமிழக வரலாற்றில் இதுதான் முதன்முறை. ஆனால், தரமில்லை என்று கூறி ஒத்தி வைப்பது என்பது நம்மைப் பின்னோக்கி இட்டுச் செல்லும் செயலாகும்.

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்டுள்ள குழுவில் உள்ளவர்கள் அப்பட்டமாக மிக, மிக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள். இவர்களால் சமத்துவம் என்பதையே ஏற்க முடியாது. மத்திய அரசு கொண்டு வந்த அனைவருக்கும் இலவசக் கல்வி சட்டத்தின் கீழ் – ஒவ்வொரு தனியார் பள்ளியும் 25 சதவிகித ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்பதை கடுமையாக எதிர்த்தவர்கள், இந்த தனியார் கல்வி நிர்வாகிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

“தரமான கல்வி என்பதின் அளவுகோல் என்ன? உலகமயமாக்கலுக்கு பின்னர் கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்த உலகை அவர்களின் காலாட் படையாக உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. தரமானது அல்லது தரமற்றது என்பதை அவர்கள்தான் உபதேசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிறுவனங்கள் எதை உயர்ந்த கல்வி என்று சொல்கிறதோ அல்லது எந்த கல்வி படித்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்று சொல்கிறதோ, அதுதான் இங்கே தரமான கல்வி என அறிவுறுத்தப்படுகிறது.

“இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் பொதுப்பள்ளிக்கு மிகக் குறைவாக செலவழிக்கும் மாநிலமாக இருந்து வருகிறது. ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 606 ரூபாய் மட்டும்தான் தமிழ்நாடு செலவழிக்கிறது. இதுவே இமாச்சல பிரதேசத்தில் 1,700 ரூபாயாகவும், கேரளாவில் 1,500 ரூபாயுமாக உள்ளது. இதுபோன்ற விஷயங்களை மாற்றவோ, செயல்படுத்தவோ யோசிக்காமல் புதிய அரசு சமவாய்ப்பை மறுத்து, சமச்சீர் கல்வியை ஒத்தி வைப்பது வன்ம அரசியலாகும்'' என்றார்.

கவிஞர் இன்குலாப் : “ஆட்சியாளர்கள் அதிகாரத்தை நேசிக்கும் அளவிற்கு மக்களை நேசிப்பதில்லை. ஒரு குலத்திற்கு ஒரு நீதி என குலக் கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்தபோது அதை எதிர்த்தவர் பெரியார். அப்போது அந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்த காமராஜர் கடுமையாக எதிர்த்தார். வெளியே பெரியார் நடத்திய போராட்டம் ராஜாஜியை பதவியில் இருந்து இறக்கச் செய்தது. ஆனால், இன்று ஜெயலலிதா கொண்டு வரும் திட்டத்திற்கு ஆளும் கட்சிக்குள்ளும் எதிர்ப்பில்லை. மாறாக இதன் பின்னணியில் சோ, ராமகோபாலன் போன்றோர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணிக் கட்சியினரும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, தமிழ் உணர்வாளர்களின் வாயை அடைத்துவிட்டு, உடனடி வேலையாக சமச்சீர் கல்வியை தள்ளி வைக்கும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். அவர் இவ்வாறு செய்வது, ஈழப்படுகொலைக்கு நிகரான கல்விப் படுகொலையாகும்.''

பேராசிரியர் சிவக்குமார் : “பாடத்தில் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு மாணவர்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஆசிரியர் கழகங்கள், சங்கங்கள் ஏன் வாய் திறக்காமல் மவுனமாக இருந்து கொண்டிருக்கின்றன? ஊதிய உயற்விற்கெல்லாம் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சமச்சீர் கல்வியை தடை செய்யும் போது ஏன் வாய் மூடிக் கிடக்கிறார்கள்?''

தோழர் செல்வி, மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சி : “சமச்சீர் கல்வியை நிறுத்த முற்படுபவர்கள் யார் என்றால், சமம் என்ற வார்த்தையே தெரியாத பார்ப்பனர்களும், முதலாளிகளும்தான். அவர்கள் மட்டுமல்ல, பேப்பர் முதலாளிகள், மெட்ரிகுலேஷன் கல்வி வியாபாரிகள், பதிப்பகத்தார், கைடு உற்பத்தியாளர்கள் எனப் பலரும் எதிர்த்து வருகின்றனர்.''

சமச்சீர் கல்வி பாடநூல் உருவாக்கத்தில் பங்குபெற்ற பேராசிரியர் கருணானந்தம் : “ஏறக்குறைய 100 பக்கங்களைக் கொண்ட 80 புத்தகங்களை, அதாவது 8000 பக்கங்களை விடிய விடிய படித்தால்கூட, மூன்று அமர்வில் படிக்க முடியாது. அப்படி இருக்க, உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி அமைக்கப்பட்ட குழு – எப்படி சமச்சீர் கல்வி தரமற்றது என்று கூறி, 500 பக்கங்களுக்கு அறிக்கை வழங்கி இருக்கிறது என்பது பெரிய கேள்வி. இந்த அறிக்கையை இந்த குழுவினர் எங்கு, யாரிடம் வாங்கினார்கள்?

“சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தை ஆய்வு செய்தவர்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பாடங்களை ஆய்வு செய்தார்களா? அவற்றை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றால், அவை தர மானது என்பதற்கு என்ன அளவுகோல்? தரம் என்பது தனியாக இல்லை. வேறொன்றோடு ஒப்பிடும்போதுதான் தரமானதா, இல்லையா என்பதை சொல்ல முடியும். ஆனால், இவர்கள் எதனோடும் ஒப்பிடாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை இங்கே அறிக்கையாகக் கொடுக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, இவர்கள் எடுத்த முன் முடிவிற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல ஒரு குழு ஆய்வு செய்யும்போது, பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிய வேண்டும். ஆனால், இவர்களின் சாதி, வர்க்க, கொள்ளை அரசியலுக்கு சமச்சீர் கல்வியை பலியாக்கி விட்டனர்.

“சங்கரர், மத்துவாச்சாரி, விவேகானந்தர், காந்தி என யாரையும் விலக்கி வைக்காமல்தான் சமச்சீர் பாடத்திட்டத்தை நாங்கள் உருவாக் கினோம். ஆனால், இவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட பெரியார் உள்ளிட்டவர்களை பாடத்திட்டத்தில் கொண்டு வந்ததைதான் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் சமச்சீர் கல்வியை ஒதுக்கி வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.''

பேராசிரியர் பிரபா. கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம் : “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டமான தீர்ப்பு. சமச்சீர் கல்வியை ஒத்தி வைக்க ஆணையிட்ட மனுதாரரிடமே அப்பொறுப்பை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது. உச்ச நீதிமன்றம் கருதியிருந்தால், அதுவே என்.சி.ஈ.ஆர்.டி.யில் உள்ள 15 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்க வேண்டும். ஆனால், எதிர்த்தவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்தது அயோக்கியத்தனமான விஷயம். இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தமிழக அரசு, ஒன்பது பேர் கொண்ட குழுவை ஜெயலலிதா வின் கருத்திற்கு ஆதரவானவர்களைக் கொண்டே நிறுவி அறிக்கையை பெற்றுள்ளது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., தனியார் பள்ளி முதலாளிகளுக்கெல்லாம் கல்வி பற்றி என்ன தெரியும்?

“மருத்துவப் படிப்பிற்கான "ரேங்க் பட்டியல்' ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படுகிறது. அதில் உள்ளவர்கள் எல்லாம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படித்தவர்களாக உள்ளனர். மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த ஆண்டு நடத்த வேண்டிய பாடங்களை நடத்துவதில்லை. மாறாக, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த ஆண்டிற்குரிய பாடத்தை நடத்தாமல் 12 ஆம் வகுப்புக்குரிய பாடத்தை நடத்தி, அதாவது ஓர் ஆண்டுப் படிப்பை இரண்டு ஆண்டுகளுக்கு படிக்க வைத்து தேர்ச்சி விகிதத்தை அதிகப் படுத்தி, பணம் சம்பாதிக்க வியாபாரம் செய்ய கத்து வைத்திருக்கிறார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தருவது தரமற்ற கல்வியைதான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

“2008 ஆம் ஆண்டு கணக்குப்படி, அய்.அய்.டி.யில் சேர ஆந்திராவில் இருந்து 1697 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து வெறும் 200 பேர்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதிகம் இயங்கி வரும் நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் இருந்து ஒருவர்கூட தேர்வாகவில்லை என்பதுதான் உண்மை. சமச்சீர் கல்வியைப் பொருத்தவரை, சி.பி.எம்., சி.பி.அய்., ஏன் நடிகர் சரத்குமார் கட்சிகூட சமச்சீர் கல்வியை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என கோரி வந்தது. ஆனால், அதே கல்வியை நிறுத்தி வைக்க சட்டமன்றத்தில் சட்டவரைவு தாக்கல் செய்தபோது, அதனை எதிர்க்காமல் வரவேற்றவர்கள் இந்த கட்சியினர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.''

இந்நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தைச் சேர்ந்த கன். மோகன் வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமை வகித்து தொகுத்து வழங்கினார். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் சார்பில் தமிழ் நேயன், வழக்குரைஞர் ரஜினி, பேராசிரியர் திருமாவளவன், இனியன் சம்பத், மக்கள் சக்தி இயக்கத்தை சேர்ந்த சிவசங்கரன், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், பேராசிரியர் அரணமுறுவல், கீ.த. பச்சையப்பன் ஆகியோர் பங்கேற்று, தங்களுடைய கருத்துகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். 

– அநாத்மா

Pin It