தீண்டத்தகாத மக்களை இந்திய அரசியல் அரங்கிற்கு கொண்டு வருவதிலும் - இந்திய ஜனநாயகத்திற்கு அடித்தளமிடுவதிலும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு

1919 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தில், ஒரு முக்கியமான பிரிவு இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை ஆராய்வதற்கும், அவசியமான மாற்றங்கள் செய்வது குறித்து அறிக்கை அளிப்பதற்கும் - பத்தாண்டுகால இறுதியில், ஓர் அரசு ஆணையத்தை மாட்சிமை தாங்கிய மன்னர் அரசு அமைப்பதற்குக் கடமைப்பட்டுள்ளது என்று இந்தப் பிரிவு கூறுகிறது. இதன்படி சர் ஜான் சைமன் தலைமையில் 1928 இல் ஓர் அரசு ஆணையம் நிறுவப் பட்டது. இந்த ஆணையம் அனைத்துத் தரப்பினரையும் கொண்டதாக இருக்கும் என்று இந்தியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்பொழுது இந்தியாவுக்கான அமைச்சராக இருந்த பர்கென்ஹெட் பிரபு, அப்பொழுது இந்த ஆணையத்தில் இந்தியர்களைச் சேர்ப்பதை எதிர்த்தார். அது முற்றிலும் ஒரு நாடாளுமன்ற ஆணையமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

காங்கிரசும் முற்போக்காளர்களும் இதனை ஒரு பெரும் குற்றமாக எடுத்துக் கொண்டனர்; ஓர் அவமதிப்பாகக் கருதினர். அதனால் அவர்கள் ஆணையத்தைப் புறக்கணித்தனர்; அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இந்த எதிர்ப்பு உணர்வை மட்டுப்படுத்தும் வகையில் மன்னர் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, ஆணையத்தின் பணி நிறைவடைந்ததும் இந்தியாவுக்கான புதிய அரசமைப்புச் சட்டம் குறித்து முடிவு செய்வதற்கு முன்னர், அது குறித்து விவாதிப்பதற்கு பிரதிநிதித்துவம் வாய்ந்த இந்தியர்களின் கூட்டம் ஒன்று நடைபெறும் என்று அது தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு இணங்க, நாடாளுமன்ற மற்றும் மன்னர் அரசு, இந்தியப் பிரதிநிதிகளை மாநாட்டுக்கு வருமாறு லண்டனுக்கு அழைத்தது.”

“இந்தியாவில் நிலவும் பதற்ற நிலையைத் தணிக்கும் பொருட்டு, 1919 ஆம் ஆண்டு சட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், மாற்றியமைக்கவும் பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. எனவே, அது இந்திய சட்ட ஆணையத்தை நியமித்தது. சர்ஜான் சைமன் அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். இதன் காரணமாக, அது ‘சைமன் கமிஷன்' எனப் பெயர் பெற்றது. சைமன் - புகழ் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராவார். இந்த ஆணையத்தில் பிரபுக்கள் அவை உறுப்பினர்கள் இருவரும் ‘காமன்ஸ்' அவை உறுப்பினர்கள் நால்வரும் இடம் பெற்றிருந்தனர். இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின்படி வகுக்கப்படும் முன்மொழிவுகள், வெஸ்ட் மினிஸ்டரிலுள்ள ஓர் கூட்டு பொறுக்குக் குழுவிடம் அளிக்கப்படும். அதற்கு முன்னர் இந்தியப் பார்வையாளர்கள் விசாரிக்கப்படுவார்கள்.

சைமன் ஆணையம் தனது முதல் வருகையை மேற்கொண்டு, 1928 பிப்ரவரி 3 அன்று பம்பாய் வந்து சேர்ந்தது. 1919 ஆம் ஆண்டு சட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தபடி, இந்தியப் பிரச்சினையை மறு ஆய்வு செய்யும் பணியைத் தொடங்குவதே அதன் நோக்கம். இந்தியர்கள் எவரும் இடம் பெறாத அந்த ஆணையத்தை, தங்களுக்கு இழைக்கப்பட்ட ஓர் அவமதிப்பாக ஏறத்தாழ எல்லா இந்தியக் கட்சிகளுமே கருதின. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வடிவத்திலும் ஆணையத்தைப் புறக்கணிப்பது என்று காங்கிரஸ் கட்சி தீர்மானித்தது. எனவே, சைமன் ஆணையம் வந்தபோது, கருப்புக் கொடிகள் காட்டியும், வசை மொழிகள் பொழிந்தும், ‘சைமனே திரும்பிபோ' என்ற முழக்கம் எழுதப்பட்ட விளம்பர அட்டைகளைக் காண்பித்தும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். சில இடங்களில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1928 - 29 இல் சைமன் ஆணையம் இரண்டாவது முறை வந்தபோதும், இதே போன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிகள் மாநாடு 1928 பிப்ரவரி மாதமும், அதன் பின்னர் மே மாதமும் நடைபெற்றன. இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு ஒரு சுயராஜ்ய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக, மோதிலால் நேரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 1928 ஆம் ஆண்டு சூன் முதல் ஆகஸ்டு வரை பணியாற்றி, ஓர் அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளித்தது.

முஸ்லிம் பிரிவினையை செய்வதே அதன் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பாக நேரு அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது : “அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக, நாங்கள் அளித்துள்ள அறிவிக்கைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சட்ட மன்றங்களில் பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு, நாங்கள் எத்தகைய சிறப்புப் பிரிவையும் பரிந்துரைக்கவில்லை. சிறப்பு வாக்காளர் தொகுதிகள் மூலமோ, அல்லது நியமனத்தின் மூலமோதான் இதனைச் செய்ய முடியும்.” ஆனால், இந்த இரண்டு வகையும் தீங்கு விளைவிக்கக் கூடியவை, தவறானவை என்று கருதப்பட்டதால், இவற்றில் எந்தக் கோட்பாட்டையும் பின்பற்றப் போவதில்லை என்று ஆணையம் தெரிவித்தது.

தாங்கள் வெளியிட்டுள்ள உரிமைகள் பிரகடனம், தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவுகட்டும் சர்வரோக நிவாரணியாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.தீண்டத்தகாதவர்களின் பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் பார்வை என்ன? அனைத்து பிரபல முஸ்லிம், பார்சி, கிறித்துவ, சீக்கிய, ஆங்கிலோ - இந்திய அமைப்புகளுக்கும், இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனர் அல்லாத அமைப்புக்கும், திராவிட மகாஜன சபைக்கும்கூட அழைப்புகள் அனுப்பிய காங்கிரஸ் காரியக் கமிட்டி, டாக்டர் அம்பேத்கரைத் தலைவராகக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்புக்கு அழைப்பு அனுப்பவில்லை. இதிலிருந்தே இந்தப் பிரச்சினையில் காங்கிரசின் நிலை என்ன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்து கொள்ளலாம். இதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர், சவுத்பரோ குழு முன்னர் டாக்டர் அம்பேத்கர் சாட்சியம் அளித்திருக்கிறார் என்பதை இந்நேரத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

சைமன் ஆணையத்துடன் ஒத்துழைப்பதற்காக, அனைத்து பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. அது மட்டுமல்ல, சைமன் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஒவ்வெரு சட்டமன்றமும் தனது மாகாணக் குழுவை தேர்ந்தெடுத்தது. 1928 ஆகஸ்டு 3 அன்று பம்பாய் சட்டமன்றம், மற்றவர்களுடன் சேர்ந்து, டாக்டர் அம்பேத்கரை பம்பாய் மாகாணக் குழுவுக்குத் தேர்ந்தெடுத்தது.

சைமன் ஆணையத்தின் செயல்பாடுகளும் சுற்றுப்பயணங்களும் இந்திய அரசியல் வானை ஒளிரச் செய்தன. இது, டாக்டர் அம்பேத்கரின் ஆற்றலையும், அறிவுத்திறனையும், உள்ளுரத்தையும் ஊர், உலகறியச் செய்தது.

தாழ்த்தப்பட்ட மக்களின் பதினெட்டு அமைப்புகள் ஆணையத்தின் முன்பு சாட்சியம் அளித்தன. இவற்றில் பதினாறு அமைப்புகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டன. பகிஷ்கரித் ஹிதகரினி சபை சார்பில் சைமன் கமிஷனிடம் டாக்டர் அம்பேத்கர் ஒரு விண்ணப்பத்தை அளித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடுடன் கூடிய கூட்டு வாக்காளர் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அதில் அவர் வலியுறுத்தி இருந்தார்.

நியமனம் செய்யப்படும் உரிமை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ‘மெட்ராஸ் மத்திய ஆதி-திராவிட மகாஜன சபை' கோரிக்கை வைத்தது. பம்பாய் மாகாண பார்ப்பனரல்லாத கட்சி அளித்த விண்ணப்பத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதிகளையும் இட ஒதுக்கீட்டையும் கோரியிருந்தது. சிந்து மாகாணத்தை தனியாகப் பிரிக்க வேண்டும், வடமேற்கு எல்லைப் புறத்தில் ஒரு தனி மாகாணம் அமைக்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும், சமஷ்டி அரசமைப்பில் மாகாணங்களுக்கு எஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கைகளை முஸ்லிம் லீக் மீண்டும் வலியுறுத்தியது.

1926 அக்டோபர் 23 அன்று சைமன் ஆணையம், மத்தியக் குழு, பம்பாய் மாகாணக் குழு ஆகியவை பூனாவில் டாக்டர் அம்பேத்கரை விசாரணை செய்தன. பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர் மேஜர் அட்லி, சைமன் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். இவர் பின்னர் பிரிட்டிஷ் பிரதமராகப் பணிபுரிந்தார். டாக்டர் அம்பேத்கரை விசாரித்தபோது, அவரிடம் அட்லி பல முக்கிய கேள்விகளைக் கேட்டார்.

சைமன் ஆணையத்தின் பணி, குளிர்காலம் வரை தொடர்ந்தது. மாகாணக் குழுக்களும் அவற்றின் சொந்த அறிக்கைகளைத் தயாரித்து வந்தன. சைமன் ஆணையத்துடன் ஒத்துழைப்பதற்காக பம்பாய் சட்ட மேலவையால் நியமிக்கப்பட்ட குழு, அரசமைப்புப் பிரச்சினை குறித்து அதிகாரப் பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற விசாரணை நடத்திய பிறகு, 1929 மே 7 அன்று தனது அறிக்கையை அளித்தது.

இந்தக் குழுவுடன் அடிப்படையிலேயே வேறுபட்ட கருத்து கொண்டிருந்த டாக்டர் அம்பேத்கர், அதன் அறிக்கையில் கையொப்பமிடவில்லை. மாறாக, தனது சொந்தக் கருத்துகளையும் பரிந்துரைகளையும் கொண்ட ஒரு தனி அறிக்கையை 1929 மே 17 அன்று அளித்தார். கர்நாடகாவின் பிரிவினை கோரிக்கை குறித்து குறிப்பிட்டுக் கூறும்போது, பம்பாய் ராஜதானியிலிருந்து கர்நாடகாவைப் பிரிப்பதைத் தாம் எதிர்ப்பதாகக் கூறினார்; “ஒரு மொழி, ஒரு மாகாணம் என்னும் கோட்பாடு, நடைமுறைப்படுத்த இயலாத மிகப்பெரிய கோட்பாடு” என்று இதற்கு அவர் காரணம் கூறினார்.

சிந்துவைப் பிரிக்க வேண்டும் என்று அந்நாட்களில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்த கோரிக்கையைப் பொருத்தவரையில், இது வகுப்பு உணர்ச்சி சார்ந்த கோரிக்கை. அய்ந்து மாகாணங்களில் முஸ்லிம்களின் வகுப்பு ரீதியான பெரும்பான்மையை, அரசியல் ரீதியான பெரும்பான்மையாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதி இது என்று அவர் கூறினார். “இந்தத் திட்டம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது தோன்றுவது போல் மாசற்றதோ, அபாயமற்றதோ அல்ல” என்பதை அவர் எச்சரித்தார். இந்தத் திட்டத்திற்குப் பின்னணியில் உள்ள நோக்கம் அய்யத்துக்கிடமின்றிப் பயங்கரமானது. அடிக்கு அடி, பதிலுக்குப் பதில் கொடுப்பதன் மூலமே நீதியை, நியாயத்தை நிலை நாட்ட முடியும் என்ற கோட்பாட்டை இது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அமைதியை நிலை நாட்டுவதற்கு மிகச் சிறந்த மார்க்கம், போருக்குத் தயாராக இருப்பதே என்று இந்த தத்துவம் கூறுகிறது.

அம்பேத்கர் தமது கருத்தை நிலைநாட்டுவதற்கு, கல்கத்தாவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் காந்திய தேசியவாத முஸ்லிம் தலைவரான மவுலானா ஆசாத் நிகழ்த்திய சொற்பொழிவை ஆதாரமாகக் காட்டினார். அந்த முஸ்லிம் தலைவர் கூறியதாவது: “ஒருபுறம் ஒன்பது இந்து மாகாணங்களும், இன்னொருபுறம் அய்ந்து முஸ்லிம் மாகாணங்களும் இருந்துவரும் சூழலில். இந்துக்கள் ‘தங்களது ஒன்பது மாகாணங்களில் முஸ்லிம்களை எவ்வாறு நடத்துகிறார்களோ, அவ்வாறே முஸ்லிம்கள் தங்களது அய்ந்து மாகாணங்களில் இந்துக்களை நடத்துவார்கள். இரு ஒரு நல்ல ஏற்பாடு அல்லவா? முஸ்லிம்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்குக் கிடைத்துள்ள ஒரு புதிய ஆயுதமல்லவா?” காந்திய தேசிய முஸ்லிம் தலைவர்கள் பற்றிய ஒரு படப்பிடிப்பு என இதனைக் கூறலாம்.

தங்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் வேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கை பற்றி அடுத்தபடியாக டாக்டர் அம்பேத்கர் பேசினார். பொது வாக்காளர் தொகுதிகள் பற்றி எவ்வகையிலும் ஆட்சேபிக்காமல் அய்ரோப்பாவில் பல்வேறு இன மக்களும் ஒரு பொதுவான அரசாங்கத்தின் கீழ் எவ்வாறு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதை எடுத்துரைத்தார். அம்பேத்கர் கூறினார் : “முகமதியர்கள் சிறுபான்øமயினராக உள்ள நாடு இந்தியா மட்டுமே அல்ல என்பது, போதுமான அளவு தெரிந்திருப்பதாகத் தோன்றவில்லை. அவர்கள் இதே நிலையில் இருக்கும் வேறு பல நாடுகளும் உள்ளன. அல்பேனியாவில் முகமதியர்கள் ஒரு மிகப் பெரிய சமூகமாக உள்ளனர். பல்கேரியா, கிரீஸ், ருமேனியா ஆகிய நாடுகளில் அவர்கள் சிறுபான்மை சமூகமாக உள்ளனர். ஆனால் அதே நேரம், யுகோஸ்லாவியாவிலும் ரஷ்யாவிலும் ஒரு பெரிய சமூகமாக அவர்கள் இருக்கின்றனர்.

இந்நாடுகளிலுள்ள முகமதிய சமூகத்தினர், தங்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் வேண்டுமென்று கோருகிறார்களா? இந்த நாடுகளிலுள்ள முகமதியர்கள் தங்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் இல்லாமலேயே சமாளித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், திட்டவட்டமான பிரதிநிதித்துவ விகிதாசாரம் தங்களுக்கு உத்தரவாதம் செய்யப்படாமலேயே - அங்கு அவர்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவ்வாறிருக்கும் போது என் பார்வையில், இந்தியாவிலுள்ள முகமதியர்கள் வரம்பு மீறி செயல்படுகின்றனர் என்றே தோன்றுகிறது. அரசியல் வரலாறு படிக்கும் மாணவர்கள் அனைவருக்குமே இது நன்கு தெரியும்.” வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அடிப்படையிலேயே தவறானது. உணர்ச்சி வசப்பட்டு அதனை ஆதரிப்பது, ஒரு தீமையை நிரந்தரப்படுத்துவதாகும் என்று அவர் கூறினார்.

டாக்டர் அம்பேத்கர் தொடர்ந்து கூறியதாவது: “சில வகுப்பினருக்கு சிறப்புப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆதரித்தாலும், தனி வாக்காளர் தொகுதிகள் மூலம் அவர்கள் பிரதிநிதித்துவம் பெறுவதை நான் எதிர்க்கிறேன். பிரதேச வாரி வாக்காளர் தொகுதிகளும், தனி வாக்காளர் தொகுதிகளும் இரண்டு கடைக்கோடிகள். ஜனநாயகமற்ற இந்த நாட்டில் ஒரு ஜனநாயக அரசாங்கத்தைத் தோற்றுவிப்பதற்கு உருவாக்கப்படும் எந்தப் பிரதிநிதித்துவத் திட்டத்திலும் இவை தவிர்க்கப்பட வேண்டும். ஒதுக்கப்பட்ட இடங்களுடன் கூடிய கூட்டு வாக்காளர் தொகுதிகள் முறைதான் மிகச் சிறந்ததாகும். இதற்குக் குறைந்த எதுவும் ஏற்புடையதாகாது. நல்ல அரசாங்கத்தின் லட்சியங்களையே அது சீர்குலைத்துவிடும்.”

அன்று நடைமுறையில் இருந்த கோட்பாடுகள், தத்துவங்கள், கருத்துகள் முதலியவற்றின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, இந்த அறிக்கை பகுத்தறிவுப் பூர்வமானதாகவும், தேசியத் தன்மை கொண்டதாகவும் திகழ்ந்தது. அது எந்தப் பிரச்சினையையும் சரியாக எடைபோடுவதாகவும், எத்தகைய தயக்க மயக்கமின்றி உண்மையை உண்மையென அறுதியிட்டு உறுதி கூறுவதாகவும் அமைந்திருந்தது. அது வெளியிடப்பட்டபோது எங்கெங்கிருந்து எல்லாமோ பாராட்டுகள் வந்து குவிந்தன. கடைந்தெடுத்த, மூர்க்கத்தனமான அவரது பகைவர்கள் கூட புகழ்ந்து தள்ளினர். இதுவரை அவரை எதிர்த்து வந்த பத்திரிகைகளும் அவரை வானளாவப் பாராட்டின.

டாக்டர் அம்பேத்கர் திடீரெனப் புகழ் ஏணியின் உச்சிக்கு ஏற்றப்பட்டார். ஒரு மாபெரும் அரசியல்வாதியாக, ஒப்பற்ற தேசப் பற்றாளராக, தீண்டத்தகாதவர்கள் எனும் நிலக்கரிச் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட விலை மதிப்பற்ற வைரமாக, அரிய ஆற்றல் கொண்ட அரசியல் அறிவுக் கூர்மையுடையவராகப் போற்றிப் புகழப்பட்டார். நல்ல நம்பகமான ஆலோசகராக, அவரது தலைமுறையின் மிகச் சிறந்த அரசியல் அறிஞராக அவர் திகழ்ந்தார். இவ்வாறு அவரது இந்த அறிக்கை, அவரது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதாக இருந்தது.

வரலாற்றாசிரியர்களுக்கு இது ஒரு சிறந்த வழி காட்டியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

“கடைசியில் சைமன் ஆணையத்தின் அறிக்கை 1930 மே மாதம் வெளியிடப்பட்டது. இந்திய தேசியத்தின், அதன் சக்திகளின் முக்கியத்துவத்தையும் குறிக்கோளையும் அறிக்கை அலட்சியப்படுத்தி இருந்தது. இந்திய அரசியல் கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படாததால், இந்தியத் தேர்தல்களில் தனித்தொகுதி முறை தொடரலாம் என்று அது பரிந்துரைத்தது. நேருவின் அறிக்கை அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வாக இருக்க முடியாது என்று அது கருதியது.”

Pin It