இந்தியாவின் எதிர்கால அரசமைப்பு குறித்து விவாதிப்பதற்கு, லண்டனில் ஒரு வட்டமேசை மாநாட்டை நடத்துவது என்று அரசாங்கம் தீர்மானித்தது. இத்தகைய நெருக்கடியான நேரத்தில், தங்களது குடி உரிமைகளை நிலைநாட்டுவதற்கு - இந்தியாவின் எதிர்கால அரசமைப்புச் சட்டத்தில் எத்தகைய பாதுகாப்புகளும் உத்திரவாதங்களும் இடம் பெற வேண்டும் என்பதைத் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் கூறுவது, வெளிப்படுத்துவது அவசியமாக இருந்தது. இதனைக் கருத்திற்கொண்டு டாக்டர் அம்பேத்கருடன் கலந்து பேசி, இது குறித்து விவாதிப்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்தவர்களையும் அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, 1930 ஆகஸ்டு 8, 9 ஆகிய நாட்களில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் நாகபுரியில் அகில இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் காங்கிரஸ் கூட்டப்பட்டது. 1930 ஆகஸ்டு 8 அன்று இந்தக் கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் பேசினார். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வரவிருக்கிற இந்திய அரசமைப்புச் சட்டத்தில், எத்தகைய பாதுகாப்புகளும் உத்தரவாதங்களும் அளிக்கப்பட வேண்டும் என்பதை அம்பேத்கர் தமது உரையில் எடுத்துரைத்தார்:

“ஏற்கனவே அறிவித்தபடி, ஒரு வட்ட மேசை மாநாட்டை பிரிட்டிஷ் அரசாங்கம் லண்டனில் கூட்டியது. இந்திய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு, இந்தியாவுக்கு ஓர் அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளிப்பதற்காக நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதிகளும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மற்றும் பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் மொத்தம் 89 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் 16 பேர் மூன்று பிரிட்டிஷ் கட்சிகளின் பிரதிநிதிகள். 53 இந்தியப் பிரதிநிதிகள், இது விஷயத்தில் ஒத்துழைக்காத காங்கிரசைத் தவிர பல்வேறு நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அவர்கள். இருபது பேர் இந்திய சமஸ்தானங்களின் பிரதிநிதிகள். சிறப்பு அழைப்பாளர்களில் 13 பேர் இந்து மிதவாதத் தலைவர்கள்; சர் தேஜ் பகதூர் சாப்ரூ, சி. ஒய். சிந்தாமணி ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள், மாட்சிமை தாங்கிய ஆகாகான், சர் முகமது ஷாபி, முகமது அலி ஜின்னா, பஸ்லுல் ஹக் ஆகியோர் முஸ்லிம்களையும், சர்தார் உஜ்ஜல் சிங் சீக்கியர்களையும், டாக்டர் பி. எஸ். மூஞ்சே இந்து மகா சபையையும், கே.டி.பால் இந்தியக் கிறித்துவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

மேலும் ஆல்வார், பரோடா, போபால், பிகானீர் காஷ்மீர், பாட்டியாலா மன்னர்களும், மற்றும் சர் அக்பர் ஹைதாரி, சர் சி.பி. ராமசாமி அய்யர், சர். மிர்ஸா இஸ்மாயில் ஆகியோர் இந்திய சமஸ்தானங்கள் சார்பில் வந்திருந்தனர். இவர்களைத் தவிர ஏ.பி.பத்ரோ, பாஸ்கரராவ், வி.ஜாதவ் ஆகியோர் ஏனைய நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். டாக்டர் அம்பேத்கரும், ராவ் பகதூர் சீனிவாசனும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகளாக வந்திருந்தனர். வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் அழைப்பிதழை, 1930 செப்டம்பர் 6 அன்று வைசிராய் மூலம் டாக்டர் அம்பேத்கர் பெற்றார். இந்த வட்டமேசை மாநாடு, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளின் வரலாற்றில் ஒரு மாபெரும் நிகழ்வு என்பதில் அய்யமில்லை.

அதிலும் குறிப்பாக, தீண்டத்தகாதவர்களைப் பொருத்தவரையில் இது அவர்களுடைய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். ஏனென்றால், இந்தியாவுக்கான அரசமைப்பை வகுப்பதில் பிற இந்தியர்களுடன் சேர்ந்து கலந்தாலோசிக்கப்படும் உரிமை, இந்த மாநாட்டில்தான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தங்கள் தாயகத்தை ஆளும் விஷயத்தில் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றில், இந்த மாநாட்டில்தான் அவர்களுடைய குரல் முதன் முறையாக ஒலிப்பதாக இருந்தது.

1930 அக்டோபர் 4 அன்று ‘வைசிராய் ஆப் இந்தியா' என்ற கப்பலில், டாக்டர் அம்பேத்கர் பம்பாயிலிருந்து லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது நாட்டில் நிலவிய சூழ்நிலை அவரது பயணதுக்கு உகந்ததாக, இசைந்ததாக இல்லை. நாடு முழுவதுமே பெரும் குழப்பத்தில் மூழ்கிப் போயிருந்தது. இந்தியாவின் பிரச்சினைக்கு தமக்கே உரிய நேர்மையான, நியாயமான முறையில் தீர்வு காணும் விஷயத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைத்த இந்தத் தலைவர்களை காங்கிரசார் வெறுத்தனர், பழிதூற்றினர், வசை மாரி பொழிந்தனர். நிலைமை மிகவும் பரபரப்பானதாகவும் ஆபத்தானதாகவும் இருந்தது.

அக்டோபர் 8 அன்று ஏடனிலிருந்து தமது செயலாளரும், நம்பிக்கையான உதவியாளருமான சிவ்தர்கருக்கு எழுதிய கடிதத்தில், அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பாக மிகவும் கவலையடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் தங்கள் நடைமுறைகளிலும் பேச்சுகளிலும் கவனமாக இருக்கும்படியும், இரவில் பணியாற்றுவதைத் தவிர்க்கும்படியும் வலியுறுத்தி இருந்தார். கட்சி அலுவலகத்தைப் பூட்டி, குறுக்கே ஓர் இரும்பு கம்பியை பொருத்தும்படி யோசனை தெரிவித்திருந்தார். பம்பாயில் தங்கள் அமைப்புடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட தலைவரின் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கும்படியும் யோசனை தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்தில் உள்ள அரசியல் சூழல், தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினைக்கு ஆதரவாக இருப்பதை டாக்டர் அம்பேத்கர் கண்டார். அவர் இங்கிலாந்து வந்து சேர்ந்ததுமே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை தொடர்பாக, பிரிட்டனின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களைத் தொடர்புக் கொள்ளத் தொடங்கினார். பம்பாய் சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் புதிய பட்டியலைப் பற்றியும், சவுதார் குளப் போராட்ட வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு பற்றியும், தந்தி மூலம் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலோடு இருந்தார்.

1930 டிசம்பர் 12 இல் திரை விலகியது. வட்ட மேசை மாநாடு தொடங்கும் விஷயத்தில் பிரிட்டிஷ் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். மாநாடு நடைபெறும் பிரபுக்கள் சபைக்குச் செல்லும் வழியெங்கிலும் கூட்டம் அலைமோதிற்று. மாட்சிமை தாங்கிய மன்னர் அங்கு வந்தார். மாநாட்டைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:

“பிரிட்டிஷ் மன்னர் இந்திய மண்ணில் எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டங்களைக் கூட்டியிருக்கிறார். ஆனால் இந்தியாவுக்கான எதிர்கால அரசாங்க அமைப்பு முறை பற்றி விவாதிப்பதற்கும், அது எந்த அடித்தளங்களின் மீது அமைய வேண்டும் என்று நமது நாடாளுமன்றத்தின் வழிகாட்டுதலைப் பெறுவதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கும் இப்போது போல் என்றுமே பிரிட்டிஷ், இந்திய அரசியல்வாதிகளும் இந்திய சமஸ்தான மன்னர்களும் ஒரே இடத்தில் ஒரே மேசை முன்னர் கூடியதில்லை எனலாம்.”

பின்னர் பிரிட்டிஷ் சக்கரவர்த்தி பின்கண்ட நம்பிக்கையை வெளியிட்டார்: “இந்தியாவுக்குச் சிறப்புப் பணியாற்றியவர்கள் என்று உங்கள் பெயர்கள் வரலாற்றில் இடம் பெறட்டும்.” அவையிலிருந்து சக்கரவர்த்தி சென்றபிறகு வட்டமேசை மாநாட்டின் தலைவராக ராம்சே மெக்டொனால்டு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பிரிட்டன் உறுதி கொண்டுள்ளது என ‘தொழிற்கட்சித் தலைவரும் இந்திய அரசாங்கமும்' என்னும் நூலின் ஆசிரியருமான அவர் கூறினார். நாம் ஒரு புதிய வரலாற்றின் உதய காலத்தில் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வட்டமேசை மாநாடு ஓர் அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளிக்கும் அரசியல் நிர்ணயசபை அல்ல. இது, இந்திய - பிரிட்டிஷ் ராஜதந்திரிகளின் கூட்டம். வாக்கெடுப்பு மூலம் எந்த முடிவுகளையும் அவர்கள் எடுக்க முடியாது. முக்கியப் பிரச்சினைகள் குறித்து மாநாட்டின் உணர்வைப் புரிந்து கொள்வதே இதன் நோக்கம்.

புதிய அரசமைப்புச் சட்டத்தில் தொழிலாளர்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று என்.எம்.ஜோஷி வலியுறுத்தினார். எதிர்கால அரசமைப்பானது, சமஷ்டி அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்று சர் மிர்ஸா கருத்துத் தெரிவித்தார். எதிர்கால அரசமைப்பு மக்கள் இன்புற்று வாழக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும் என்று சர்.சி.பி.ராமசாமி கூறினார்.

இரண்டு அல்லது மூன்று பேர் பேசிய பிறகு ஒருவர் எழுந்தார். அவருக்கு கம்பீரமான உடல். அவர் தன்னம்பிக்கையின், உறுதியின் சொந்தக்காரர். தமது மன வலிமையால், தார்மீக சக்தியால் படுபாதாளத்திலிருந்து கொடுமுடிக்கு விண்ணெட்ட உயர்ந்தவர். கண்களை மின்வெட்டும் ஆடை அணிகள் அணிந்த முடி மன்னர்களுக்கும், மாபெரும் அறிவுலக மேதைகளுக்கும் எத்திக்கும் ஏற்றிப் போற்றும் சட்ட வல்லுநர்களுக்கும் புகழ்மிகு சிம்மாசனங்களையும், ஜாகிர்களையும் பிற பல அமைப்புகளையும், நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பேராளர்களுக்கும் இடையிலிருந்து அவர் எழுந்தார். அவர் யார்?

அவர் கோடீசுவர கோமானல்ல; கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஆர்ப்பரிக்கும் அடாவடிப் பேர்வழியல்ல. மாறாக, அவர் இந்தியாவின் ஏழைகளிலும் ஏழைகளின் பிரதிநிதி. அரைவயிற்றுக் கஞ்சிக்கும் வழியின்றி, உடுத்த உடையின்றி, வாயிருந்தும் ஊமைகளாக அவல வாழ்வு வாழும் பரிதாபத்துக்குரிய மக்களின் பிரதிநிதி. இப்போது அவர் என்ன சொல்லப்போகிறார்? அதை எப்படிச் சொல்லப் போகிறார்? அவர் கல்வி கற்க உதவிய மன்னர் இந்த மன்றத்தில் இருக்கிறார். அவருடைய பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார். அனைவர் கண்களும் அசரவில்லை, துஞ்சவில்லை. அவர் தமது மனதை அறிவார்; என்ன சொல்ல வேண்டும், அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை அறிவார்.

பிரதமர் மெக்டோனால்டையும், ஜோஷியையும் தவிர அங்கு குழுமியிருந்தோரில் வேறு எவரும் ஏழ்மையை, வறுமையை அதன் குரூரமான, கோரமான, இழிந்த, அருவருக்கத்தக்க வடிவத்தில் கண்டதில்லை. மாநாட்டில் எத்தனை எத்தனையோ பண்டிதர்கள் இருந்தார்கள், அறிஞர்கள் இருந்தார்கள், இலக்கிய மேதைகள் இருந்தார்கள். ஆனால் இவர்களை விட உயர்ந்தவராக, கல்வித் துறையில் மிக உயர்ந்த டாக்டர் பட்டம் பெற்ற பேரறிஞராக ஒரு மனிதர் இருந்தார். அந்த மனிதர்தான் டாக்டர் அம்பேத்கர். இந்தியத் திருநாட்டின் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் ஈடு இணையற்ற தலைவர் அவர்.

Pin It