பாதிக்கப்பட்ட ஒரு தலித் பெண் அளிக்கும் புகாரைப் பெறவே நேரங்காலம் பார்க்கும் இந்தச் சமூகம்தான், நூறாவது ஆண்டாகப் பெண்கள் நாளை வெட்கமின்றி கொண்டாடிக் கொண்டிருக்கிறது!

dalit_lady_296தொடக்க காலத்தில் சமூகத்தை தலைமையேற்று வழிநடத்திய பெண்களுக்கு, தற்பொழுதுள்ள சமூகம் எந்த உரிமைகளையும் வழங்க மறுப்பதே நடைமுறையாக உள்ளது. மேல் மட்டத்திலுள்ள பெண்களுக்கு சில உரிமைகள் கிடைக்கிறது என்றாலும், விளிம்பு நிலையிலுள்ள பெண்களுக்கு வாழ்க்கை முழுவதும் உரிமைகள் முற்றாக மறுக்கப்படுகின்றன. இவ்வாறு வாழ்க்கை மறுக்கப்பட்ட 17 வயதுப் பெண் மணிமேகலை, துணிச்சலாக நீதிமன்றப் படியேறியுள்ளார். திண்டிவனம் ரோசனையில் உள்ள குட்டைக்கரையில் தகப்பன் இறந்துவிட்ட நிலையில், தாயார் லட்சுமியுடன் வாழும் மணிமேகலை (வயது 17) தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். படிக்க வசதியின்றி 8 ஆம் வகுப்புடன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். திரையரங்கம் ஒன்றில் துப்புரவுப் பணியாற்றிய தாயார் லட்சுமிக்குத் துணையாக சில நேரங்களில் மணிமேகலையும் சென்று வருவார்.

இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் மூன்று வேளையும் சமையல் பொருட்கள் வாங்கி சமைப்பதற்கு இயலாமல், திரையரங்கம் அருகில் உள்ள இட்லி கடையில் நாள்தோறும் காலையில் சாப்பிடுவதே வழக்கமாக இருந்துள்ளது. இரு பெண்களும் வாழ்க்கைக்காகவும், வயிற்றுக்காகவும் கடைக்குச் சென்றனர். ஆனால், பொழுது போக்கிற்காக இட்லி கடைக்குச் வந்தவர் கதிர் (த/பெ. கோவிந்தசாமி முதலியார்). இவரும் இதே ரோசனைப் பகுதியைச் சேர்ந்தவர். மணிமேகலையும், கதிரும் பேச்சுவாக்கில் அறிமுகமாகி நன்றாகப் பழகவும் தொடங்கியுள்ளனர். இது, 2009 சூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடக்கிறது. செப்டம்பர் மாதம், “எனது அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை, எங்க வீட்டிற்கு வேலைக்கு வா'' என்று மணிமேகலையை கதிர் அழைத்ததும், தாயார் லட்சுமியிடம் அனுமதி கேட்டுள்ளார். திரையரங்கில் துப்புரவுப் பணி செய்வதைவிட வீட்டுவேலை செய்வது நல்லது, சென்றுவா என அனுப்பியுள்ளார் அவரது தாயார்.

வீட்டிற்கு வேலை செய்யச் சென்ற மணிமேகலையிடம் கதிர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். கதிரின் தாயாருக்கு உடல் நிலை சரியாக மூன்று மாதங்கள் ஆகியுள்ளன. இந்த மூன்று மாதத்தில் காதல், கல்யாணம் என ஆசையை வளர்த்து, அவரது வீட்டிலேயே யாருமில்லாத நேரத்தில் மணிமேகலையை வற்புறுத்தி, பாலியல் உறவுக்கு ஆளாக்கியுள்ளார் கதிர். மூன்று மாதங்களில் கதிரின் தாயாருக்கு உடல்நிலை சரியானதும், மணிமேகலையை வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில் மணிமேகலையின் தாயார் லட்சுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. திரையரங்கில் துப்புரவு வேலைக்கு செல்வதையும் நிறுத்திவிட்டார். உடல்நிலை சரியில்லாத தாயும், காதல், கல்யாணம் என்ற கனவில் இருந்த மகளும் சாப்பாட்டிற்குக் கூட வழியின்றி வீட்டிலேயே இருந்தனர். மணிமேகலையின் சித்தியும், லட்சுமியின் தங்கையுமான ராக்கி, ராமேஸ்வரத்தில் வசிக்கிறார். மணிமேகலையின் அண்ணன் பார்த்திபன், தனது சித்தி வீட்டில் தங்கிக் கொண்டு கூலி வேலை செய்து வருகிறார். உடல் நிலை சரியில்லாத தாயாரைப் பார்க்க வந்த பார்த்திபன், சிகிச்சைக்காக தாயாரை ராமேஸ்வரத்திற்கு அழைத்துச் சென்றார். உடன் மணிமேகலையையும் அழைத்துச் சென்றனர். இவை 2009 டிசம்பர் கடைசி, சனவரி 2010 முதல் வாரங்களில் நடக்கிறது.

ராமேஸ்வரம் சென்றாலும் மணிமேகலையுடன், அவரது சித்தி ராக்கியின் கைபேசி வழியாக கதிர் பேசியிருக்கிறார். ராமேஸ்வரம் சென்ற பின்பு தனக்கு மாதவிலக்கு தள்ளிப் போவதை அறிந்து சந்தேகப்பட்ட மணிமேகலை, யாரிடமும் சொல்லாமல் தனியாக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் மூன்று மாத கர்ப்பம், வயிற்றில் முழுமையாக வளர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். செய்வதறியாமல் திகைத்து, யாரிடமும் எதுவும் சொல்லவும் முடியாமல், சில நாட்கள் தவித்துக் கிடந்தார் மணிமேகலை.

உடல்நிலை சரியான லட்சுமி, தான் வேண்டிக் கொண்டபடி தனுஷ்கோடி ரெட்டதலை கோயிலுக்கு கிடா வெட்டி, விசேசம் செய்வதற்காக தேவையான பணத்தை கடனாக வாங்குவதற்காக திண்டிவனம் கிளம்பினார். கூடவே மகள் மணிமேகலையையும் அழைத்துக் கொண்டு வந்தார். பணம் கடனாகத் தருவதாக கூறியவர்கள் இப்போது இல்லை என்றதும் மனம் வெறுத்த லட்சுமி, ராமேஸ்வரம் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என வந்த அன்று மாலையே மீண்டும் ராமேஸ்வரம் கிளம்பினார். மணிமேகலையோ எப்படியேனும் கதிரை சந்தித்து திருமணம் செய்துவிட வேண்டும் என முடிவெடுத்து, தாயாருடன் ராமேஸ்வரம் செல்ல மறுத்து, தனது பெரியம்மா வீட்டில் தங்கி விடுகிறார்.

தாயார் சென்ற மறுநாளே கதிரை சந்தித்து, உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி பேசியுள்ளார் மணிமேகலை. இதை எதிர்பார்க்காத கதிர், பல்வேறு காரணங்களைச் சொல்லி சந்திப்புகளை தவிர்த்து விட்டார். மணிமேகலையின் இடைவிடாத முயற்சியிலிருந்து தப்பிக்க முடியாத கதிர், கர்ப்பத்தை கலைப்பதற்கு மாத்திரைகளை வாங்கி வந்து பேசிக் கொண்டிருக்கும்போதே விழுங்கச் சொல்லியிருக்கிறார். மறுத்த மணிமேகலையை கட்டாயப்படுத்தி, கை, காலை அழுத்தி வாயில் போட்டு விழுங்கச் செய்திருக்கிறார்.

வீட்டில் வேலை செய்யும் போதும், அதே வீட்டிலேயே உறவு கொள்ளும்போதும் மணிமேகலை ஒரு தலித் என்பது தெரியாதா? திருமணம் என்றபோது மட்டும் தெரிகிறது, ஆதிக்கச்சாதி முதலியாரான கதிருக்கு! மாத்திரையில் கலையாத கர்ப்பத்தை கலைக்க திண்டிவனத்திலுள்ள தனியார் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார் கதிர். பரிசோதித்த மருத்துவர் 6 மாதம் ஆகிவிட்டது, இனி கலைக்க முடியாது என மறுத்துவிட்டார். தனியாகத் தவித்த மணிமேகலையின் தவிப்பை அறிந்த அவரது உறவினர்கள் கதிரை வீட்டிற்கு வரவழைத்தனர். சிறை பிடிக்கப்பட்ட கதிர், பெற்றோரிடம் பேசி இரண்டொரு நாட்களில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். நம்பிய உறவினர்கள் கதிரை விடுவித்தனர். அய்ந்து நாட்களாகியும் எந்தவொரு தகவலும் இல்லை.

பிறகுதான் தெரிந்தது, சில கட்சிகளை சேர்ந்த பல குழுக்கள், மணிமேகலை தரப்பை சமாதானம் செய்துவிடுகிறோம் என்றும், பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறி, கதிர் தரப்பிடம் பணம் பறிக்கும் வேலையில் இறங்கியது. அவர்கள் மணிமேகலையை மிரட்டவும் தொடங்கினர். இந்நிலையில்தான், ரோசனைப் பகுதியின் முன்னேற்றத்தில் அக்கறையுடையவரும், மனித உரிமை ஆர்வலருமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆசிரியர் சாரதியும், அவரது நண்பர்களும் இப்பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். ராமேஸ்வரத்திலிருந்த அவரது தாயார் வந்ததும் 10.3.2010 அன்று இரவு 11.15 மணியளவில் பூட்டிக் கிடந்த ரோசனை காவல் நிலையத்தினரை எழுப்பி, தூங்கிக் கொண்டிருந்த காவலர்களிடம் பாதுகாப்பும், நீதியும் கேட்டு புகார் அளிக்கப்பட்டது.

இரவு புகார் கொடுக்கும்போது, “இதுதான் உங்களுக்கு நேரமா?'' என்று கேட்ட உதவிப் பெண் ஆய்வாளரிடமும், மறுநாள் முதல் தகவல் அறிக்கை பெற ஆய்வாளரிடமும் தொலைபேசியில் நிகழ்த்திய நீண்ட உரையாடலும், வாதமும் பெரும் போராட்டமும் தனிக்கதையுமாகும். பாதிக்கப்பட்ட ஒரு தலித் பெண் அளிக்கும் புகாரைப் பெறவே நேரங்காலம் பார்க்கும் இந்தச் சமூகம்தான், நூறாவது ஆண்டாகப் பெண்கள் நாளை வெட்கமின்றி கொண்டாடிக் கொண்டிருக்கிறது! புகார் கொடுக்க உதவியாகவும், பாதிக்கப்பட்ட மணிமேகலை குடும்பத்திற்கு சட்டரீதியான ஆதரவும் வழங்கிவரும், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆசிரியர் சாரதி நம்மிடம், “பாதிக்கப்பட்ட அருந்ததியர் பெண்ணுக்கு ஆதரவாக ஒருவரும் வரவில்லை. ஆனால், குற்றமிழைத்த ஆதிக்க சாதி சமூகத்திற்கு ஆதரவாகத்தான், ஒரு கட்சி பாக்கியில்லாமல் - எல்லா கட்சியிலிருந்தும், யார் யார் மூலமோ சமாதானம் பேசுகிறார்கள். மிரட்டவும் செய்கிறார்கள். அதன்பிறகுதான் நாங்கள் புகார் எழுதி காவல் நிலையம் சென்றோம். அந்தப் பையன் சாதி மறுத்து, விரும்பி, இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தாலும் இடையில் உள்ள இந்த கும்பல் கட்டப்பஞ்சாயத்து, செய்து இதைத் தடுக்கிறது. போலிசும் இந்த ஆதிக்க சாதி கும்பலுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது.

“பொதுவாக இது போன்ற புகார்களில் பையனை அழைத்துப் போலிசார் பேசுவார்கள். பையன் திருமணம் செய்து கொள்ள மறுத்தால்தான் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைப்பார்கள். ஆனால், இந்த வழக்கில் அந்தப் பையனையோ, அவனது குடும்பத்தாரையோ ஒருவார்த்தைகூட எதுவும் விசாரிக்காமல், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால்தான், அந்த ஆதிக்க சாதி கும்பலுக்கு ஆதரவாக போலிசாரும் செயல்படுகின்றனரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்கிறார்.

மணிமேகலையை கட்டப்பஞ்சாயத்து கும்பல் சமாதானப்படுத்துவதும், மிரட்டுவதும் நிகழ்ந்த நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து மணிமேகலையின் தாயார், 10.3.2010 அன்று இரவு திண்டிவனம் வந்ததும் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றோம். அப்போது இரவு மணி 11.15. காவல் நிலையத்தின் இரு கதவுகளும் பூட்டப்பட்டிருந்தன. உள்ளே இருட்டாக இருந்ததால் யாரும் இல்லையோ என நினைத்து, என்ன செய்யலாம் என காவல் நிலையத்தின் எதிரில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். காவல் நிலையத்தின் உள்ளே நிகழ்ந்த பேச்சுக் குரலினைக் கேட்டு அழைத்தோம். கதவையும் தட்டினோம். திறந்தார்கள். விளக்கினைக் கூட போடாமல், தெருவிலிருந்து வந்த வெளிச்சத்தில் எங்களிடம் அங்கிருந்த இரு காவலர்களும் விசாரித்தார்கள்.

“ரோசனை தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகி, கர்ப்பம் ஆனதும் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார், முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இப்போது கட்டப்பஞ்சாயத்து கும்பல் இப்பிரச்சினையில் நுழைந்து பெண்ணை மிரட்டுகிறார்கள். அதனால் பாதுகாப்பு கேட்டு புகார் கொடுக்க வந்துள்ளோம்'' என்ற பிறகுதான் காவல் நிலையத்தின் விளக்கை போட்டார்கள். உடனே அவர்கள், “இது என்ன சார் இந்த நேரத்தில்'' என்று கேட்டனர். “எங்களுக்கு வேற வழி தெரியல சார். விட்டா அந்தக் கும்பல் இந்தப் பெண்ணை கடத்தினாலும், கடத்திடுவாங்க. புகாரை வாங்கிட்டு எங்களுக்கு ரசீதை கொடுங்க'' என்றோம். “அதெல்லாம் நாங்களா தர முடியாது. இது எஸ்.சி./எஸ்.டி. கேஸ்னு வேற சொல்றீங்க; காலையில வாங்க. டி.எஸ்.பி. விசாரிச்சிட்டு, சி.எஸ்.ஆர். தருவாங்க'' என்றனர் அங்கிருந்த காவலர்கள்.

“சி.எஸ்.ஆர். தருவதற்கு டி.எஸ்.பி. தேவையில்லை. நீங்களே தரலாம். இல்லன்னா, இன்ஸ்பெக்டர், எஸ்.அய். யாருகிட்டயாவது போன் போட்டு கொடுங்க, நாங்க பேசுறோம்'' என்றோம். அதனைத் தொடர்ந்து ஒரு காவலர் தனது செல்பேசியில் எஸ்.அய்.யை அழைத்தார். அவர்கள் பேசியதும் என்னிடம், “எஸ்.அய். மேடம் உங்ககிட்ட பேசறாங்க'' என்றார். நானும் கைப்பேசியை வாங்கியதும் “வணக்கம் மேடம்'' என்றேன்.

“உங்களுக்கு புகார் கொடுக்க நேரங்காலமே தெரியாதா? என்ன ஸ்டேஷன்ல வந்து கலாட்டா பண்றீங்களா?'' என்றார். “நாங்க ஒண்ணும் கலாட்டா பண்ண வரல மேடம். ஒரு தலித் பெண்ணை ஒருத்தன் ஏமாத்திட்டான். பொண்ணு இப்ப 4 மாசம் கர்ப்பமாயிடுச்சி. ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறான். கேசும் கொடுக்கக் கூடாது, கல்யாணமும் பண்ணக் கூடாதுன்னு மிரட்டறாங்க. கடத்தினாலும் கடத்துவாங்க. அதான் புகார் கொடுக்கிறோம்'' என்றேன். “அதுக்காக இப்பத்தான் வருவீங்களா? போயிட்டு காலையில அழைச்சிக்கிட்டு வாங்க'' என்றார்.

“பிரச்சினையா இருக்குன்னுதான் இந்த நேரத்துல வந்திருக்கோம்'' என்றேன். “இந்த நேரத்துல வந்தா நாங்க என்ன பண்றது'' என்று கூறிய பெண் எஸ்.அய். மீண்டும் மீண்டும் சுமார் 20 நிமிடங்கள், தொலைபேசியிலேயே இரவு 11.15 மணிக்குச் சென்றதையே பிரச்சினையாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களுக்கு பதில் சொல்ல விருப்பமின்றி, “மேடம், ஒரு எஸ்.எம்.எஸ். போதும் எப்.அய்.ஆர். வீடு தேடி வரும்னு கவர்மென்ட்ல பேசிக்கிட்டு இருக்காங்க. நீங்க என்னவோ இப்ப எதுக்கு வந்தீங்கன்னு கேட்கிறீங்க. ஒரு வேளை இந்த ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க காலை 9 மணியிலிருந்து சாயங்காலம் 5 மணி வரைன்னு ஏதாவது டைம் இருந்தா சொல்லுங்க'' என்றேன்.

இதைக் கேட்டதும் அவரும் கோபமாக “என்ன மிரட்றீங்களா?'' என்றார். நான் அதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல், “நான் ஒண்ணும் மிரட்டலீங்க, பொண்ணுக்கு வெளியில் பாதுகாப்பு இல்லிங்க. புகார் கொடுக்க போலிஸ் ஸ்டேஷன் வந்திருக்கோம். பொண்ணும் அவங்க அம்மாவும் இங்கேயே இருக்கட்டும். நீங்க காலையில வந்து விசாரிச்சிட்டு சி.எஸ்.ஆர். கொடுங்க'' என்றேன். உடனடியாக எஸ்.அய். “எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க? போனை ஏட்டுகிட்ட கொடுங்க'' என்றார். “நீங்க இந்தமாதிரி பேசும்போது நாங்க இப்படி கிளம்பி வராம என்னங்க மேடம் செய்யுறது'' என்று கூறிவிட்டு கைப்பேசியை காவலரிடம் அளித்தோம். பேசியவர், புகாரைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி புகார் மனு ஏற்புச் சான்று வழங்கினார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட அந்த நொடியிலிருந்து கட்டப்பஞ்சாயத்து கும்பல் இதில் தலையிடாமல் ஒதுங்கியது.

மறுநாள் 11.3.2010 அன்று காலை 9.30 மணியவில் விசாரணைக்காக காவல் நிலையம் சென்று, நீண்ட நேரம் காத்திருந்த பிறகு ஆய்வாளர் வந்து விசாரித்தார். தோழர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியும்படி முறையிட்டனர். ஆய்வாளர் இதில் வன்கொடுமைத் தடுப்புச் சடடம் வராது என்று பேசியுள்ளார். அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருந்த என்னிடம், ஆய்வாளரை தொலைபேசியில் பேசவைத்தார்கள். தோழர்கள் இரண்டு பேரும் உடன்பட்டு பழகி உறவு வைத்துள்ளனர். இதில் "மோட்டிவ்' இல்லை. எனவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் வராது என்று கூறினார் ஆய்வாளர். பல்வேறு சட்டப்பிரிவுகளையும், இதற்கு முன்பு நடந்த சில சம்பவங்களையும் கூறியும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

அதன் பிறகுதான், அவரிடமே கேள்வியை முன் வைத்தேன். “சார் நீங்க சொல்ற மாதிரியே ரெண்டு பேரும் உடன்பட்டுதான் உறவு வைத்துக் கொண்டார்கள். அந்தப் பையனும் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளான். இப்போது பெண் 4 மாத கர்ப்பம். இப்ப அந்தப் பையன் ஏன் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறான்? அந்தப் பையனுக்கு பொண்ணு வசதியில்லைன்னு முன்னாடியே தெரியும். எஸ்.சி. பொண்ணு என்றும் முன்னாடியே தெரியும். ஆனா இப்ப எதுக்கு சார் அவன் கல்யாணம் செஞ்சிக்காம மறுக்கிறான். இதுக்கு காரணம் என்னன்னு கேளுங்க சார் தெரியும்'' என்று கேட்டதற்கு, ஆய்வாளரால் ஒன்றுமே பதில் பேச முடியவில்லை. சரி, நீங்க அவங்ககிட்ட பேசுங்க என்று கூறி செல்பேசியை தோழர்களிடம் தந்து விட்டனர். இரவு 7 மணியளவில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையின் நகலை கொடுத்தனர் காவல் துறையினர். அடுத்த இரண்டாவது நாள் கதிரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையும், அதன் பிரிவுகளையும் நடைமுறைப் படுத்துவதற்கு தமிழக காவல் துறையினருக்கு அரசு உரிய பயிற்சியினையும், விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும். இல்லையெனில், சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிடும்! 

-முருகப்பன் 

Pin It