நக்சல்பாரி...  ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் "வசந்தத்தின் இடிமுழக்கம்' என புகழப்பட்ட மேற்கு வங்கத்தின் சிறு கிராமம் ஒன்றின் தீப்பொறி, இன்று இந்தியாவின் செழிப்பான கனிம வளங்கள் நிறைந்த சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா, மேற்கு வங்கம், மகாராட்டிரம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களின் 60,000 சதுர கி.மீ. பகுதிகளை உள்ளடக்கிய "தண்டகாரண்ய' எனும் நிலப்பகுதியில் பிழம்பாக எரிந்து கொண்டிருக்கிறது. இப்பிழம்புதான் "சிவப்பு பயங்கரவாதம்' எனும் அடைமொழியாக, இந்திய ஊடகங்களில் கவனம் தவறாமல் பிரச்சாரம் செய்யப்பட்டும் வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அய்ரோப்பிய முதலாளிகள் "கம்யூனிச பூதம்' என மக்களிடம் அச்ச உணர்வூட்டும் எண்ணத்துடன் செய்த பிரச்சாரத்திற்கு ஒப்பானது இது.

lalgarh_police_340அனைத்து ஆளும் வர்க்கங்களும் அரசுகளும் தாம் மேற்கொள்ளும் எந்தவொரு பயங்கரமான அல்லது கடுமையான அல்லது கொடூரமான நடவடிக்கையையும் நாட்டின் வளர்ச்சி – பாதுகாப்பு – இறையாண்மை என்ற சொற்களின் திரைகளுக்குப் பின்னே நியாயப்படுத்தி விடுகின்றனர். இந்துத்துவ அரசியலுக்கு "இஸ்லாமிய பயங்கரவாதம்' எனில், முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு "சிவப்பு பயங்கரவாதம்.' அனைத்துப் போராட்டங்களும் இங்கே வரையறுக்கப்பட்ட சொற்களில்தான் அளவிடப்படுகின்றன. தீவிரவாதம் முதல் எல்லை தாண்டிய பயங்கரவாதம் வரை, புதிய அடைமொழிகளை காலத்திற்கேற்ப ஆளும் வர்க்கங்களும், அரசுகளும் உற்பத்தி செய்து வருகின்றன. இச்சொற்களையும், இவற்றிற்குப் பின்னான எச்சரிக்கையையும் சூழலுக்கேற்ப அச்சமூட்டும் தொனிகளில், கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்ப்பதில் இந்திய பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் பங்களிப்பே முதன்மையாகும்.

அவ்வகையில் நாட்டு மக்களுக்கு அரசுத் தலைவர் விடுக்கும் முக்கிய செய்தியாக, "உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்' என்கிற பிரதமர் மன்மோகன் சிங்கின் எச்சரிக்கை, மீண்டும் மீண்டும் ஊடகங்களை நிறைக்கிறது. துப்பாக்கிகளோடும், சீருடைகளில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுவது போலவுமான குடிமக்களின் ஒரு பகுதியினர், இச்செய்திகளின் பின்னணிக் காட்சிகளில் தவறாது இடம் பெற்று விடுகின்றனர். எவ்வெப்பொழுதும் பாதுகாப்பு மனநிலையைத் தேடும் சாமானிய மக்களின் உணர்வுகளை உறைய வைக்க இக்காட்சிகள் முயல்கின்றன.

ஆனால் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிலவும், வணிகத் திரைப்படங்கள் பலவும், சில உண்மைச் சம்பவங்களும் இதைவிட மேலான உறைய வைக்கும் காட்சிகளை நாள்தோறும் வழங்கிக் கொண்டிருப்பதால், "சிவப்பு பயங்கரவாத' காட்சிகள் எந்த அளவு உதவப் போகின்றன எனத் தெரியவில்லை. ஆனாலும் திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய்கள், மெய்களாக நிலைப் பெற்று விடும் வழக்கமான ஆபத்து இருப்பதால், சாமானிய மக்களின் உணர்வுகளுக்கு விழிப்பூட்ட, "உறைய வைக்கும் உண்மைகளை'த் தேடி கண்டடைவதும் "எதிர்'ப் பிரச்சாரம் செய்வதும் நம்முன் நிற்கும் கடமையாகிறது.

ஆந்திராவை மய்யமாகக் கொண்டு இயங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (மக்கள் யுத்தம்)யும், பீகாரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட மாவோயிச கம்யூனிச மய்யம் என்ற கட்சியும், செப்டம்பர் 21, 2004இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என ஒரே கட்சியாக இணைந்து செயல்படப் போவதாக அறிவித்தன. அன்றைய நாளிலிருந்துதான் சிவப்பு "பயங்கரவாதப் பேரபாயம்' உரத்து ஒலிக்கத் தொடங்கியது. "ரெட் காரிடார்' என தண்டகாரண்யா அழைக்கப்படுவதற்கான அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் காரணிகளை ஆராய்ந்தால், இந்திய அரசும் ஆதரவு ஊடகங்களும் எழுப்பும் பயங்கரவாத கூக்குரல், ஒரு ராணுவ முழக்கம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளலாம். மிகவும் குறிப்பாக, சட்டீஸ்கர் – ஜார்க்கண்ட் – ஒரிசா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தண்டகாரண்ய வனப் பகுதிகளில் பன்னாட்டு நிறுவனங்களோடு, இந்திய அரசும் தரகு முதலாளிகளும் செய்து கொண்டிருக்கும் சுமார் 25 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOக்) இம்முழக்கத்தின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கின்றன.

அலுமினியம், பாக்சைட், நிலக்கரி, மாங்கனீஷ், சிலிகா, குவார்ட்சைட், புளோடைட், கிரானைட், இரும்புத் தாது மற்றும் தங்கம், வைரம் உள்ளிட்ட கனிம வளங்களின் சுரங்கங்களாக தண்டகாரண்ய வனப்பகுதி இருக்கிறது. நாட்டின் அய்ந்தில் ஒரு பகுதி இரும்புத் தாதுக்கள் இப்பகுதியில்தான் படிந்துள்ளன. 3500 கோடி டன் நிலக்கரியும், 234 கோடி டன் இரும்புத் தாதும், 3550 மில்லியன் டன் சுண்ணாம்புக் கல்லும், 60 கோடி டன் டாலமைட்டும், 9.5 கோடி டன் பாக்சைட்டும் காணக் கிடைப்பதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. 1960களிலேயே சட்டீஸ்கரின் பைடில்லா மலைத் தொடரில் இரும்புத் தாதுக்கள் கிடைப்பது கண்டறியப்பட்டு, ஜப்பானிய இரும்பு ஆலைகளுடன், அப்போதே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பொருளைப் "புரிந்து' கொள்வதற்கான கல்வி மற்றும் அரசியல் அறிவை அப்போது நாம் பெற்றிருக்கவில்லை.

 1990 களிலேயே மத்திய இந்தியாவின் இப்பகுதியை உலக வங்கி, அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்பான பகுதியாக சுட்டிக் காட்டியுள்ளது. உலக வங்கியின் முன்னாள் அதிகாரியான மன்மோகன் சிங், “பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளைக் கொண்டு வருவதில் பெரும் பின்னடைவு ஏற்படும்'' என "தண்டகாரண்ய பயங்கரவாதத்தை' சுட்டிக்காட்டி, நாள்தோறும்  ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருப்பதும் இதனால்தான்.

சுரங்கங்கள், மின் உற்பத்தி திட்டங்கள், அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகள், எக்கு உருக்காலைகள் போன்றவற்றிற்காக, டாடா, எஸ்ஸார், ஜிண்டால், வேதாந்தா மட்டுமல்ல, இன்னும் பல வெளிநாட்டு நிறுவனங்களோடும் இந்திய அரசு பல்வேறு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளது. நிதி அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப. சிதம்பரம், உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதும்கூட, "சிவப்பு பயங்கரவாத'த்தை இந்நிறுவனங்களுக்கான அக்கறையுடன் கையாள்வதற்குத்தானே ஒழிய, வேறல்ல. பிரதமர் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் கடந்த காலங்களில் உலக வங்கி, உலக வர்த்தக மய்யம் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகர்களாகப் பணியாற்றினர் என்பதும், இந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்புகளைக் கைப்பற்றி, இந்நிறுவனங்களின் நேரடி முகவர்களாக "சட்டபூர்வமாக'ச் செயல்பட்டு வருகின்றனர் என்பதும் "படித்த' அறிவாளிகள் அனைவரும் அறிந்த உண்மையே. திருடர் கைகளில் திறவுகோல்கள் என்றே இந்த அரசியல் – பொருளாதார பின்புலத்தின் அதிகார மய்யத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் குறை சொல்லிக் கொண்டிருந்தால், நாட்டின் முன்னேற்றம் – தொழில் வளர்ச்சி – அந்நியச் செலாவணி ஆகியவற்றில் எதை இட்டு நிரப்புவது? என்ற மேலோட்டமான கேள்வி தொக்கி நிற்கிறது. யாருக்காக – எதற்காக? எவற்றை – யாரை? அழித்து இத்தகைய முன்னேற்றமும், வளர்ச்சியும், செலாவணியும் கிடைக்க வேண்டும்? என்ற எதிர்க்கேள்வி தொடுத்தால் மட்டுமே, "சிவப்பு பயங்கரவாதம்' எனும் சூழலைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் உண்மைகளைத் தேடி தண்டகாரண்ய காட்டுப் பகுதிக்குள் பயணிக்கவும் வேண்டும். அப்படிப் பயணித்தவர்களின் சாட்சியங்களோடுதான் இந்த எதிர்ப் பிரச்சாரமும், எதிர்க் கேள்வியும் – இக்கட்டுரையின் அடிப்படைகளாக இங்கு முன்வைக்கப்படுகின்றன. மிகச் சமீபத்தில் தண்டகாரண்ய காட்டுப் பகுதிக்குள் பயணம் செய்து, தனது அனுபவங்களை "அவுட்லுக்' வார இதழில் நீண்ட கட்டுரையொன்றில் பதிவு செய்திருந்தார், புகழ் பெற்ற எழுத்தாளரும் "புக்கர்' விருது பெற்றவருமான அருந்ததிராய்.

கனிம வளங்களை தன்னுள் புதைத்திருக்கும் தண்டகாரண்யா ஆளரவமற்ற காட்டுப் பகுதி அல்ல. சந்தால், கோல், முண்டா, கோண்டு, ஓரான் என இன்னும் சில பழங்குடி மக்களின் பன்னெடுங்கால வரலாற்றுத் தாயகம் அது. இயற்கை வாழ்வாதாரங்களோடும், தனித்த பண்பாட்டுக் கூறுகளோடும் வாழ்ந்து வரும் அம்மக்கள் மிகச் சரியாகச் சொல்வதெனில், ஆங்கிலேய காலனி ஆதிக்கம் இந்திய நிலப் பகுதியெங்கும் வளங்களைச் சூறையாட பயணப்பட்டபோதுதான், முதன் முதலில் அந்நியரின் தொல்லைகளுக்கு ஆளாயினர். அன்று தொடங்கிய தொந்தரவுகள் பன்னாட்டு நிறுவனங்களின் வடிவில், இன்று அம்மக்கள் மீதான போர் எனும் உருவிலும் வளர்ந்துள்ளன. “தண்டகாரண்ய காடுகளில் நடப்பது உள்நாட்டுப் போர். மலையின் வளங்களைப் பெருமுதலாளிகளின் காலடியில் சமர்ப்பிக்க, இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் இது'' என குற்றம் சுமத்துகிறார் அருந்ததிராய்.

உண்மையில் எல்லோரும் எண்ணிக் கொண்டிருப்பது போல, மாவோயிஸ்டுகள் இக்காடுகளுக்குள் நுழைந்த பிறகு நடைபெறத் தொடங்கிய போர் அல்ல இது. காடும், காட்டின் வளங்களும், இயற்கை வாழ்வாதாரங்களும் தமது பாரம்பரிய உரிமைகள் என வழிபட்டுக் கொண்டிருந்த பழங்குடி இன மக்கள், அக்காடுகளுக்குள் அந்நியர் நுழைந்து ஆக்கிரமிக்க முயன்றபோதெல்லாம் கலகங்களைப் புரிந்துள்ளனர். 1774 முதல் 1779 வரை ஆங்கிலேயரையும், மராட்டியர்களையும் எதிர்த்து பழங்குடியினர் நடத்திய போராட்டம் "ஹல்பா கலகம்' என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1825இல் "பரால்கோட் கலகம்', 1842 முதல் 1863 வரை பஸ்தார் பகுதிகளில் நடைபெற்ற கலகங்கள், 1876இல் ஜகல்பூரில் வெடித்தெழுந்த "முறியா கலகம்,' 1930களில் வட ஆந்திராவில் நடைபெற்ற "ராம்பா கலகம்' என, தமது மரபு வழிப்பட்ட வில் – அம்பு ஆயுதங்களைக் கொண்டு மட்டுமே, இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, தங்களின் இருப்பைக் காத்துக் கொள்ள பழங்குடியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆங்கிலேயரின் துப்பாக்கி, பீரங்கிகளுக்கு முன், மரபு வழிப்பட்ட வில் – அம்பு ஆயுதங்கள் வெல்ல முடியாது போனாலும், பழங்குடிகள் ஒருபோதும் மண்டியிடவில்லை. பல தலைமுறைகளாக நிகழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் இப்போராட்டங்களோடு மாவோயிஸ்டுகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என்று சொன்னாலும், அது மிகையல்ல.

கனிம வளங்களுக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் காட்டிலிருந்து அப்புறப்படுத்தப்படும் அல்லது விரட்டியடிக்கப்படும் கேட்பாரற்ற நிலைமையை எதிர்கொண்டு வாழ்ந்த பழங்குடியின மக்கள், வரலாற்றுப் போக்கில் தமக்கு ஆதரவளிக்க முன் வந்த நக்சல்பாரிகளோடு கரம் இணைத்துக் கொண்டது, ஆச்சரியத்திற்குரியதொன்றுமல்ல. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்காக ஏறத்தாழ இரண்டரை கோடி மக்கள் தம் வாழ்விடங்களிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டுள்ளனர். இதில் சரிபாதி மக்கள் பழங்குடியினத்தவரே. வாழ்விடங்களை இழந்த பல்வேறு பழங்குடி இன மக்கள், நாட்டின் பல பகுதிகளிலும் நாடோடிகளாகத்தான் வாழ நேர்ந்திருக்கிறது. தமிழகத்தில் குறவர், பளியர், காட்டு நாயக்கர் போன்றோர் சில எடுத்துக்காட்டுகள்.

வெளியுலகையும் அதன் ஆரவாரங்களையும் அறியாத, நுகராத பழங்குடி மக்களுக்கு ஆதியும் அந்தமும் அவர்களின் வனமே. “காடு அவர்களின் கடவுள்; உங்களின் கடவுளை நீங்கள் விற்பனை செய்வீர்களா?'' என இதையே அம்மக்களின் மொழியில் கேட்கிறார் அருந்ததிராய். புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் தமது வாழ்விடங்கள் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என அறிந்து துடிக்கும் பழங்குடியின மக்களுக்குத் தெரிய நியாயமில்லை – "கடவுளை விட நல்ல விலைக்கு வர்த்தகமயமாகிக் கொண்டிருக்கும் பண்டம்' காடுகளுக்கு வெளியே வேறொன்றும் இல்லை என்பது. நவநாகரிக உலகில் அனைத்திற்கும் விலை ஒட்டப்பட்டிருக்கிறது. மனிதர்களில் சிலருக்கு முகத்திலும், பலருக்கு முதுகிலும்.

"விலை மதிப்பற்றது' என தாம் கொண்டாடும் காடு, மலை, நீருற்றுகள், அருவிகள், அபூர்வ மூலிகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தம் வாழ்விடங்களுக்கான பழங்குடியினரின் போராட்டங்கள், அவர்களுக்கானது மட்டுமல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்  மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களின் விளைவாக, இந்தியாவின் இதயப் பகுதியில் இயற்கை கொடையளித்திருக்கும் காட்டு வளங்கள் முற்றாக அழிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ராக்கட் எனுமிடத்தில் தோண்டப்படவிருக்கும் சுரங்கத்திற்காக 3,278 ஹெக்டேர் காட்டு நிலங்கள் அழிக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்திராவதி நதியின் மீது கட்டப்பட இருக்கும் நீர்மின் திட்டம் பல கிராமங்களை அழிப்பதோடு, காட்டின் புவியியல் தகவமைப்பையும் சீர்குலைக்கவே செய்யும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் 13,750 ஹெக்டேர் காட்டு நிலம் அழியும் ஆபத்திலிருக்கிறது. ஒருபுறம் வறட்சியும், மறுபுறம் வெள்ளப் பெருக்குமாக ஒவ்வோர் ஆண்டும் நிகழ்ந்து வரும் பருவகால மாற்றங்கள், இயற்கைப் பேரழிவுகள் ஆகியன, இத்தகைய சூழலியல் தகவமைப்பின் சீர்குலைவை நிரூபித்துள்ளன. இன்னும் வெளியிடப்படாத "வளர்ச்சி'த் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுமெனில், உலகின் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றையும் இந்திய சமூகம் இழக்க நேரிடும். எத்தனை லட்சம் கோடியானாலும், இக்கனிம வளங்களைவிட மதிப்பும் உயிர்ப்பும் கொண்டவை இக்காடுகளும் மலைகளும். ஆரோக்கியத்துடனிருக்கும் ஒரு மனிதனை உயிருடன் அறுத்து, அவனது உள் உறுப்புகளை இன்னொருவருக்குத் தாரை வார்ப்பதற்கு ஒப்பான, இவ் ஒப்பந்தங்களை  ஆதரிக்கும் எவரும் பச்சை மாமிசம் உண்ணும் வெறி கொண்டவர்கள் என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பழங்குடி மக்களை பிற்போக்குவாதிகள், நாகரிகம் அறியாதவர்கள், அறிவியல் வளர்ச்சி புரியாதவர்கள் என்றெல்லாம் முதலாளிய வளர்ச்சியில் மாய்ந்து போகும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் எள்ளி நகையாடுகின்றனர். நந்திகிராம், சிங்கூர், காஷிபூர், கலிங்கா நகர், லால்கர், தெஹ்ரி, நர்மதா என ஊடகங்களில் அலசப்படும் இப்பெயர்களுக்குப் பின்னே இருப்பது – கார் தொழிற்சாலைகள், அணைகள், சுரங்கங்கள், நீர் மின் திட்டங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றை அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்படும் விளை நிலங்களும், குடி பெயர்க்கப்படும் பாரம்பரிய மக்களும் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

விவசாயம் இன்றைய நாளில் மூன்றாம் தர தொழிலாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் திட்டமிட்டே தரிசாக்கப்படுகின்றன. ஏழை விவசாயிகள் பட்டினிச் சாவிற்கு முன்பே தற்கொலை செய்து கொள்கின்றனர். கான்கிரீட் காடுகளாக, தானியங்கள் செழித்த பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இன்று உருமாறிக் கொண்டு வருகின்றன. விவசாயத்திற்கு மின்சாரம் போதவில்லை; விளை நிலங்களுக்கான நீராதாரங்கள் ஒழுங்கமைக்கப்படவில்லை. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்காக புதிய மின் திட்டங்களும், மிஞ்சியிருக்கும் நீர் வளங்களும் திருப்பப்படுகின்றன. தம் குடும்பத்தினரோடு, கிரிக்கெட் போட்டிகளின் உல்லாசத்திலும் ஊழலிலும் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெருச்சாளி, இந்திய அரசின் விவசாயத் துறை அமைச்சர்.

இந்த வெட்கக் கேடுகளுக்குப் பெயர்தான் நாட்டின் முன்னேற்றமா?

lalgarh_women_363மதவாதத்தைவிட, காங்கிரஸ் கட்சியின் ஊழல் ஆபத்தானதல்ல என்று இலக்கணம் சொன்ன மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில செயலாளர்  பிமன் போஸ், “சிங்கூரிலோ, லால்கரிலோ மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் பழங்குடிகள் பின்தங்கியேதான் இருக்கின்றனர். மேலும், மய்ய நீரோட்ட வாழ்நிலைக்கு வர அவர்கள் விரும்புவதுமில்லை'' ("தெகல்கா' நேர்காணல், 4, சூலை 2009) என்கிறார். காட்டின் வளங்களை நகரங்களுக்குக் கொண்டு சேர்க்க, சாலைகள், இருப்புப் பாதைகள், பாலங்கள், மின் கம்பங்கள் போன்றவற்றை உருவாக்கிய அரசாங்கம், அக்காடுகளுக்குள் வாழும் மக்களுக்கு குடிநீர், மின்சாரம், கல்விக் கூடங்கள், சுகாதார மய்யங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட செய்து தர முன்வரவில்லை.

எடுத்துக்காட்டாக, 2001 ஆம் ஆண்டில் மாட் மண்டலத்திலுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உழவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியும், மருத்துவ வசதிகளும் கேட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். அதே ஆண்டில் தெற்கு மற்றும் மேற்கு பஸ்தார் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் கல்விக்கான போதிய வாய்ப்புகளையும், வசதிகளையும் கேட்டுப் போராடினர். சால், தேக்கு, மூங்கில் போன்ற காடுகளின் லாபம் கொழிக்கும் மரங்களை வன நிர்வாக அதிகாரிகளின் துணையோடு ஒப்பந்தக்காரர்களும், கடத்தல்காரர்களும் அழித்து கொள்ளையிட்டுக் கொண்டிருந்த காலங்களில், காடுகளில் விளையும் தானியங்கள், விதைகள், உணவுப் பொருட்களை சேகரித்து சந்தைகளில் மிகக் குறைந்த விலைக்கு விற்றும், பீடி இலை ஒப்பந்தக்காரர்களின் சுரண்டலுக்கு உழைத்தும், தம் பட்டினியைக் கழுவிக் கொண்டிருந்தனர் பழங்குடியின மக்கள். 2002 ஆம் ஆண்டு, இந்நிலப் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டு போனதை நவநாகரிக உலகம் கண்டு கொள்ளாமலே இருந்தது.

"ஜங்கல்நாமா : மாவோயிஸ்ட் கெரில்லா மண்டலத்தில் ஒரு பயணம்' எனும் நூல் "பெங்குயின்' வெளியீடாக வந்திருக்கிறது. இந்நூலின் ஆசிரியரான எழுத்தாளரும் களப்பணியாளருமான சத்னம்  2001இல் சட்டீஸ்கரின் பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்டுகளோடு  தங்கியிருந்த தன் அனுபவங்களை இதில் பதிவு செய்திருக்கிறார். “பஸ்தார் பகுதியில் பிலாய் உருக்காலையிலிருந்து, இரும்புத் தாது அதிகம் வெட்டியெடுக்கப்படும் 3 கி.மீ. தொலைவில் கூட, அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தமது பாரம்பரிய வில் அம்புகளுக்குத் தேவையான பயன் என்ற அளவில்தான் இரும்பின் பயன்பாடு இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் கீழ் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் வாழ்விடங்களில் வெட்டியெடுக்கப்படும் கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில், அம்மக்களின் முன்னேற்றம் என எதுவும் இல்லை. நந்திகிராமில் நிராயுதபாணியான மக்களிடமிருந்து நிலங்கள் பலவந்தமாகப் பிடுங்கப்பட்டதை, அதற்காக அவர்கள் கொல்லப்பட்டதை நாம் வெளிப்படையாகவே பார்க்கவில்லையா?'' என உரிமையாளர்களாக இருந்தவர்களுக்கும், பயனாளிகளாக மாறியவர்களுக்குமான இடைவெளியைச் சுட்டிக் காட்டுகிறார்.

மேலும், “90 சதவிகித பஸ்தார் பழங்குடிகள் நிலமற்றவர்கள். அவர்களை நில உரிமையாளர்களாக மாவோயிஸ்டுகள் மாற்றுகின்றனர். நிலச் சீர்திருத்தங்கள் முறையாக, முழுமையாகச் செய்யப்படாத நிலையில், மாவோயிஸ்டுகள் நிலமற்ற மக்களின் விருப்பங்களை நிறைவு செய்பவர்களாக இருக்கிறார்கள். நமது அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன், சிறந்த அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும், அமெரிக்க அல்லது மேற்கத்திய அரசு முறையியலைப் பின்பற்றுகிறார்கள். இவர்களின் அரசு நிர்வாகம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறதா? தனியார் நிறுவனங்களைக் கண்காணிக்கிறதா?''

“நாடு சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏழை மக்கள் மேலும் வறியவர்களாகவே ஆக்கப்பட்டுள்ளனர். சுதந்திரத்திற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த, எனது வாழ்க்கை அனுபவத்தில், நமது நாட்டிலிருந்து அரசியல் ஜனநாயகம் வெளியேறி விட்டது என்றே நான் எண்ணுகிறேன். ஒரு நாடு மக்களால்தான் கட்டமைக்கப்பட வேண்டுமே ஒழிய, அரசாங்கத்தால் அல்ல. பசுமை வேட்டை நடைபெறும் இச்சூழலில் மாவோயிஸ்டுகள் சரியான பாதையிலேயே செல்கின்றனர் என நான் நம்புகிறேன். அவர்கள் புதிய சமூக அமைப்பிற்காகப் போராடி வருகின்றனர். இதைத் தவிர வேறு தீர்வும் இல்லை'' என உறுதியாகக் கூறுகிறார்.

ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மத்திய கிழக்குப் பகுதிகள் என இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பு, வன்முறைப் போராட்டங்களின் உலைக்களமாகத் தொடர்ந்து இருந்து வருவதை, அடிப்படையில் இந்திய ஆளும் வர்க்கம் விரும்புகிறது என்றே குற்றம் சுமத்த இடமுள்ளது. "ஜிகாத் பயங்கரவாதம்' என்ற பெயரில் ஜம்மு காஷ்மீரில் மக்களும், போராட்டக் குழுக்களுமாக இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ராணுவம் மற்றும் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். "பிரிவினைவாத தீவிரவாதம்' என்ற பெயரில் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களும் மக்களுமாக பல பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

arunthathi_roy_361மத்திய கிழக்கு மாநிலங்களிலோ, பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, "சிவப்பு பயங்கரவாதம்' எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தொடர்ச்சியான இத்தகைய அணுகுமுறையால், பழங்குடியின மக்கள் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு மக்கள் பிரிவினரும் ஆயுதம் தாங்கிய போராட்டப் பாதையை நோக்கியே பயணப்பட நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது கவலை தரும் சூழல் என்பதைவிட, மய்ய நீரோட்ட அரசியல் வழியே மக்களை ஒடுக்கிச் சுரண்டி, அதிகாரத்தைத் தக்க வைக்க, அச்ச உணர்வூட்டும் நல் வாய்ப்பாகவே ஆளும் வர்க்கம் கருதுகிறது.

அண்மையில் கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவில் "ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ்' என்ற புகைவண்டி கவிழ்க்கப்பட்டு, 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ரயில் கவிழ்ந்ததற்கான உடனடிக் காரணங்களைக் கொண்டு, கவிழ்த்தியவர்கள் "மாவோயிஸ்டுகள்' தான் என மேற்கு வங்க அரசும், ஊடகங்களும் ஒருமித்த குரலில் பிரச்சாரம் செய்தன. ஆனால், மாவோயிஸ்டுகள் இதை மறுத்துள்ளனர். ரயில்வே துறை நடுவண் அமைச்சர் விசாரணைக் குழு ஒன்றை நியமித்ததோடு, வேறு "அரசியல் சதி' பின்புலமாக இருக்கலாம் என தனது சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இச்சந்தேகத்தின் பலன் மாவோஸ்டுகளுக்குக் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, "மம்தா பானர்ஜி மாவோயிஸ்டுகளுடன் திரைமறைவுக் கூட்டு வைத்துள்ளதாக' மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கட்டவிழ்க்கும் பிரச்சாரம் இனியும் பலனளிக்கப் போவதில்லை.

இச்சம்பவத்தை செய்தியாக்கிய "டைம்ஸ் ஆப் இந்தியா' – "மாவோயிஸ்டுகள் அல்லர், பயங்கரவாதிகள்' என தலைப்பிட்டிருந்தது. "மாவோயிசம்' என்பது ஒரு தத்துவ அரசியல் கோட்பாடு. "பயங்கரவாதம்' என்பது எவ்வித தத்துவ அரசியல் பின்புலமும் அற்ற வன்முறைவாதம் என்பதே இதன் பொருள். ஆக, வறட்டு வன்முறை வாதத்தை (வழிமுறையை) மக்களுக்காகப் போராடும் எந்தவொரு இயக்கமும் – அது ஆயுதம் தாங்கியதாக இருப்பினும் – பின்பற்ற இயலாது

என்பதே இதன் மறைபொருள். மாவோயிஸ்டுகளின் மறுப்பிற்குப் பின் இது மேலும் உறுதிப்பட்டுள்ளது. ஆனாலும் தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியன அரசுகளின் நிரந்தர முத்திரைகளாகவே எப்போதும் இருக்கின்றன.

– அடுத்த இதழில்

Pin It