தமிழக அடித்தள மக்களின் வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர்களில் முதன்மையானவர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். யாருடைய ஆட்சியை பார்ப்பன வரலாற்றாய்வாளர்கள் பொற்காலம் என்று கொண்டாடினார்களோ, அத்தகையவர்களின் ஆட்சியில் அடித்தள மக்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்தார்கள் என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டவர். சமூகத்தின் மீதான தீராத காதலில் தனது சொந்தப் பணத்தை செலவிட்டு, அடித்தள மக்களின் வரலாற்றைத் தேடி கால்கள் தேய, தமிழக கிராமங்களில் இன்றளவும் பயணம் செய்து வருகிறார்.

‘கோபுரத் தற்கொலைகள்’, ‘அடித்தள மக்கள் வரலாறு’, ‘தமிழகத்தில் அடிமை முறை', ‘கிறித்துவத்தில் சாதியம்', ‘பஞ்சமனா பஞ்சயனா' உள்ளிட்ட இவரது புத்தகங்கள் தமிழ் அறிவுலகிற்கு இவர் வழங்கிய கொடை. பேராசிரியர் நா. வானமாமலையின் மாணவரான இவர், கலை இலக்கியப் பெருமன்றத்தின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் ‘தலித் முரசு'க்கு அளித்த பேட்டியிலிருந்து...
சந்திப்பு : ‘கீற்று’ நந்தன்

உங்களுடைய குடும்பப் பின்னணி பற்றி கூறுங்கள்...

என் அப்பாவின் பூர்வீகம் ஒட்டப்பிடாரம். அந்தக் காலத்தில் இங்கு வேலை ஏதும் இல்லாவிட்டால் கொழும்புக்குப் போவது வழக்கம். தன்னுடைய பதினேழாவது வயதில் என் அப்பா கொழும்புக்கு போய்விட்டார். அங்கு ஒரு கிடங்கில் கணக்குப்பிள்ளையாக இருந்தார். தானியங்களை வாங்கி விற்கும் முகவராகவும் இருந்திருக்கிறார். சொந்தமாக ஒரு கடையும் வைத்திருந்தார். ஜப்பான் குண்டு வீச்சுக்குப் பயந்து அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டார். தஞ்சையில் நீடாமங்கலத்தில் அரிசி அரவை ஆலை ஒன்றை நீண்டகால குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

நான் 1943ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் பிறந்தேன். மூன்றாம் வகுப்புவரை அங்குதான் படித்தேன். பிறகு இரண்டு ஆண்டுகள் சென்னையில் இருந்தோம். என் தந்தையின் பணி காரணமாக அவர் மூன்று மாநிலங்களில் சுற்ற வேண்டியிருந்ததால், பாதுகாப்பு கருதியும் தெரிந்த இடம் என்பதாலும் என் அம்மாவின் வீட்டில் திருநெல்வேலியில் உள்ள சிந்துபூந்துரை ஊரில் இருந்தோம். இந்துக்கல்லூரி உயர் நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்புவரை படித்தேன். சீர்காழியில் உள்ள ஒரு மில்லில் என் அப்பா வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு துணையாக நான் சென்றேன். என்னுடைய பணி அவர்களுக்கும், அந்த வேலை எனக்கும் பிடிக்கவில்லை. படிக்கலாம் என்று முடிவெடுத்து அண்ணாமலையில் புலவருக்குப் படிக்கச் சேர்ந்தேன். 1963 முதல் 67 வரை நான்காண்டுகள் அண்ணாமலையில் இருந்தேன்.

1959லிருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. ‘நூல்கள் மனிதனை மாற்றுகின்றன’ என்பது என் வாழ்க்கையில் நடந்த உண்மை. காரல் மார்க்ஸ் யாரென்று தெரியாத காலத்திலேயே சாமிநாத சர்மா எழுதிய ‘காரல் மார்க்ஸ்' என்ற புத்தகத்தை வாங்கினேன். அண்ணாச்சி சண்முகம் பிள்ளை அவர்களின் புத்தகக் கடையில்தான் வாங்கினேன். அவர் ஒரு கம்யூனிஸ்ட். அதன் விலை ரூ 3.25 என்னிடத்தில் மூன்று ரூபாய் தான் இருந்தது. பரவாயில்லை கொடு என்று சொல்லி மூன்று ரூபாய்க்கு அதைத் தந்தார். சந்தேகம் ஏதாவது இருப்பின் வந்து கேட்கவும் சொன்னார்.

‘சிறந்த சிருஷ்டி' என்னும் தலைப்பில் மார்க்சியம் பற்றி மிகவும் எளிமையாக சாமிநாத சர்மா எழுதியிருந்தார். அதிலும் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றை சண்முகம் என் வயதிற்கேற்ப புரியவைத்தார். அவருடைய தொடர்பிலே இருந்தேன். கட்சியில் சேரக்கூடிய வயது எனக்கு இல்லையெனினும் பரிட்சாத்திர உறுப்பினராக ஒன்றரை ஆண்டுகள் இருந்தேன். அப்போது மாவட்டச் செயலாளராக ப. மாணிக்கம் அவர்கள் இருந்தார். அண்ணாமலையில் படித்தவர். கட்சி வேலையில் ஈடுபட்டதால் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

அவருடைய சொந்த ஊர் பாடகச்சேரி. படித்தது கடலூர். கட்சிப் பணியாற்ற அனுப்பியது திருநெல்வேலி. அங்கேயே அவர் சாதி மீறிய திருமணத்தைச் செய்து கொண்டார். அவரும் எனக்கு நிறைய புத்தகங்கள் தந்தார். ஆனால், அவர் என்னைப் போன்றவர்கள் நேரடி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. அறிவுத்தளத்தில் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினார். என்னை பேராசிரியர் வானமாமலை அவர்களிடம் அனுப்பினார். 1980இல் வானமாமலை இறக்கும்வரை அவருடன் தான் இருந்தேன்.
1963இல் அண்ணாமலையில் சேரும்போது நான் கட்சி உறுப்பினராகத்தான் சென்றேன். வேறு ஊருக்குச் செல்லும்போது கட்சி உறுப்பினர்கள் முறையாக மாறுதலாகித்தான் செல்ல வேண்டும். முறையாக அறிமுகக் கடிதம் வாங்கிக் கொண்டு சிதம்பரம் நகரில் உறுப்பினராகி, நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது பாலன், ப. மாணிக்கம், பேராசிரியர் மணலி கந்தசாமி, கே.டி.கே. தங்கமணி ஆகியோர் என் அறைக்கு வந்து தங்குவார்கள். பிறகு மக்கள் வெளியீடு மேத்தூர் ராஜ்குமார் அவர்களும் வந்து சேர்ந்தார்.இப்படி இருபது பேர் சேர்ந்தோம். புத்தகங்கள் படிப்பது, விவாதிப்பது என்று இருந்தோம்.

அண்ணாமலையில் ஆசிரியர் மாணவர் உறவு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ஆசிரியர்கள் மாணவர்களின் அறைகளுக்கும், மாணவர்கள் ஆசிரியர்களின் வீடுகளுக்கும் சென்று புத்தகங்கள் வாங்கிப்படிப்பது, விவாதிப்பது என்பது தொடரும். இப்படி பேராசிரியர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம், ஆறு. அழகப்பன், மு. அண்ணாமலை ஆகியோரின் தொடர்பு எங்களுக்கு இருந்தது. புத்தகங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்வோம். இப்படி நான்கு ஆண்டுகள் வகுப்புக்கு வெளியே படித்ததும் விவாதித்ததும் ஏராளம். மானிடவியல் வரலாறு திராவிட இலக்கியம் என்று அறிவுப் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. விவாதங்கள் எங்களிடையே பகையை ஏற்படுத்தியதே இல்லை.

1967 தூத்துக்குடி வ.உ.சி. கலைக்கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். 34 ஆண்டுகள் ஒரே கல்லூரியில் பணியாற்றினேன். 2001இல் ஓய்வு பெற்றேன். அக்காலத்தில் ஆசிரியர்களின் கருத்துரிமைக்கு தடை கிடையாது. அதனால் நிறைய படிக்க முடிந்தது. கட்சி உறுப்பினர்களுக்கு வகுப்புகள் எடுத்தேன். ரொமிலா தாப்பர், ஆர்.எஸ்.சர்மா ஆகியோரின் நூல்களைப் படித்தேன். தமிழ்ப் பேராசிரியர்கள் பெரும்பாலும் அகத்துறை சார்ந்த செய்திகளையே அதிகம் பேசுவார்கள். ஆனால் என்னுடைய பணியில் அப்படியில்லாமல் சமூக சிக்கல்களையும் வரலாற்றையும் சேர்த்துச் சொன்னேன். அது சில மாணவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தது.

தமிழிலக்கியப் பணி, கட்சிப் பணி இவற்றிற்கிடையே அடித்தள மக்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

மார்க்சியவாதியாக இருக்கிற ஒருவர் அடித்தள மக்களைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியாது என்பது ஒன்று. 1969இல் ‘ஆராய்ச்சி' என்னும் இதழில் ‘வாசற்படி மறியல்' என்றொரு கட்டுரை எழுதினேன். பரதவர் குல சமூகத்தில் முறைப்பெண்ணை முறை மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து கொடுக்காமல் வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்தால், அந்த மணமக்களை வீட்டுக்குள் விடாமல் வாசலில் கையை வைத்த மறித்து முறைமாப்பிள்ளை நிற்க, அவருக்கு மோதிரம் போட்ட பிறகே உள்ளே விடுவார்களாம். இது, விளையாட்டாக அந்தச் சமூகத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இக்கட்டுரை பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. வாழ்க்கையும் நேர்மாறானதாக இருந்ததை உணர்ந்தேன்.

நான் பணியாற்றிய வ.உ.சி. கல்லூரியின் நிறுவனர் ஒரு காங்கிரசுக்காரர். அந்தக் கால காங்கிரசுக்காரர்களுக்கு ‘அரிஜன' முன்னேற்றத்தில் ஈடுபாடு என்பது ஒரு திட்டமாகவே இருந்தது. அதனால் எங்கள் கல்லூரியில் வரலாறு, தாவரவியல், விலங்கியல் போன்ற துறைகளில் 90 சதவிகித தலித் மாணவர்கள் இருந்தனர். அவர்களுடன் பழகும்போது அவர்களின் பிரச்சனைகள், அவர்களின் ஊர்களில் இருக்கும் சமூக அவலங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும் அடித்தள மக்கள் பற்றி பல வெளியீடுகளை, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிடத் தொடங்கியது. அவற்றைத் தொடர்ந்து படித்தேன். இப்படி நிறைய சொல்லலாம். ஆனால் அடிப்படையாக நான் செய்த கள ஆய்வு, தலித் மாணவர்கள் என்னோடு பகிர்ந்து கொண்டவை, என்னுடைய மார்க்சியப் படிப்பு ஆகிய இவைதான் அடித்தள ஆய்விற்கு என்னை உந்தியவை.

தமிழர் வரலாற்றில் அடித்தள மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?

இந்திய வரலாற்றை முதலில் உருவாக்கியவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள்தான் வரலாற்றை உருவாக்கியவர்கள். பழைய வரலாறு, இடைக்கால வரலாறு, நவீன வரலாறு என்று மூவகையான வரலாற்றினை அவர்கள் கையாண்டனர். பழைய வரலாறு என்பது இந்து வரலாறு; இடைக்கால வரலாறு இஸ்லாமியர் வரலாறு. நவீன வரலாறு என்பது பிரிட்டிஷ் வரலாறு என்று அவர்கள் கட்டமைத்தனர். இதில் பாரம்பரியமாக இருந்த இந்து வரலாற்றினை முஸ்லிம்கள் அழித்ததாகவும், அதை ஆங்கிலேயர்கள் மீட்டெடுத்ததாகவும் புனையப்பட்டது. இதை கற்றவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர் மற்றும் வேளாளர் ஆவார்கள். இவர்கள் வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ வரலாற்றை மேட்டிமை நிலையிலிருந்து பார்க்கிறார்கள்.

பார்ப்பனர்கள் வரலாற்றை வடமொழி மரபில் பார்க்கின்றனர். நீலகண்ட சாஸ்திரி, ராமச்சந்திர தீட்சிதர் போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டு. கனகசபை, எம்.எஸ்.பூர்ணலிங்கம் போன்றோர் வேளாள மரபினர். இவர்களுக்குள்ள வேறுபாடு பார்ப்பனியத்தைக் குறைத்து மதிப்பிடுவது. ஆனால் இந்த இரு பிரிவினருமே தங்களுக்கு கீழிருக்கும் சாதிகளை கருத்தில் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இவர்களின் வரலாற்றின் மய்யம் மன்னன் மற்றும் அவனது படையெடுப்புகள், போர்கள், வெற்றிகள், திருமணம், அவனுக்குப்பிறகு யார் ஆட்சிக்கு வந்தனர் என்பவைதான் வரலாறாக இருந்தது. இவற்றுக்கு மட்டும் சான்றுகள் இல்லை; இவற்றுக்கு மாறான சான்றுகளும் உள்ளன.

மார்க்வான் என்னும் வரலாற்றாளர், ‘ஆவணம் என்பது சாட்சியைப் போன்றது. அதனை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்' என்றார். குறுக்கு விசாரணை செய்யப்படுகின்ற சாட்சிதான் பேசும். குலோத்துங்கன் காலத்தில் கலகங்கள் நடைபெற்றுள்ளன. எருமை மாட்டுக்கு வரி போடப்பட்டுள்ளது. அதை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றுள்ளது. ‘துருசு’ என்ற சொல் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. துருசு என்ற சொல்லுக்கு கலவரம் என்ற பொருள்
இருக்கிறது. துருசினால் இடிக்கப்பட்ட கல்வெட்டு என்று இருந்திருக்கிறது. இடையர் சமூகத்தினர் வீட்டுக்கு வெள்ளை அடிக்க, வீட்டை அலங்கரிக்க உரிமை கேட்டுப் போராடியுள்ளனர். மேலாடை அணிய, செருப்பு அணிய போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இத்தகைய சான்றுகளைத் தேடி எடுக்க வேண்டும். ஆனால் சோழர் கால வரலாறு என்றால் அது ராஜராஜன், ராஜேந்திரன் என்று மன்னர்களின் வரலாறாகவே இருக்கிறது.

முதலாளித்துவ நாடுகளில் கூட இத்தகைய தன்மை பெரும்பாலும் இல்லை என்று கூறலாம். ஆங்கில இலக்கியம் படிக்கின்ற மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டில் அந்த நாட்டின் சமூக வரலாறு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு மொழியின் இலக்கியத்தை அதன் உண்மைத்தன்மையுடன் படிக்க வேண்டுமென்றால், அம்மொழி பேசப்படும் சமூக வரலாறும் படிக்கப்பட வேண்டும். டிரவேலியன் என்பவர் எழுதிய சமூக வரலாற்றைப் படிக்க நேர்ந்தது. அது மிகவும் சிறப்பாக இருந்தது. அப்படிப்பட்ட சமூக வரலாறு தமிழில் இதுவரை இல்லை. இருவர் இந்த சமூக வரலாற்றைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். ஒருவர் திராவிட இயக்கத்தவர்; மற்றொருவர் மார்க்சியவாதி.

ஆனால், மூடநம்பிக்கை ஒழிப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்புப் போர் இவற்றை மட்டும் தான் பதிவாக்கினர். மார்க்சியவாதிகள் உலக வரலாறுகளை கூறியுள்ளனர். எஸ். ராமகிருஷ்ணன் என்னும் மார்க்சியவாதி, தமிழ்நாட்டு வரலாற்றை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் எழுதியதைப் போல எழுதியுள்ளார். பேராசிரியர் வானமாமலையும் ரகுநாதனும் உதிரி உதிரியாகத்தான் எழுதியுள்ளனர். இந்த கணம் வரை டிரவேலியன் நூலைப்போல இங்கு இல்லை. வரலாறு என்பது தனிமனித வரலாறாகத்தான் இருக்கிறது. முன்பு மன்னர்கள், இப்போது திரைப்பட நடிகர்கள். மக்களை மீட்பதற்கு யாரோ ஒருவன் வருவான் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

பல தரவுகள், கல்வெட்டுகளாக உள்ளன. மோடி ஆவணம் 3 தொகுதிகள் தான் உள்ளது. அந்த 3 தொகுதிகளிலேயே ஏகப்பட்பட்ட செய்திகள் இருக்கின்றன. பெண்களை எப்படி விலைக்கு வாங்கினர், 42 திருமணங்களை எப்படி செய்து கொண்டார்கள். பார்ப்பனர்களுக்கு குடுமிக் கல்யாணம், பூணூல் கல்யாணம் செய்வதற்கு அரசு உதவி செய்திருக்கின்றது போன்ற தகவல்கள் கிடைக்கின்றன. 16ஆம் நூற்றாண்டில் சேசு சபையினர் இங்கே மதம் பரப்ப வருகின்றனர். அவர்கள் ரோமிலுள்ள தலைமைக்கு எழுதிய கடிதங்கள் ஆவணங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இப்படி கடிதங்கள் உள்ளன. இந்தியாவிலிருந்தும் நிறைய கடிதங்கள் சென்றுள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்து ‘டாகுமெண்டா இண்டிகா’ என்ற 16 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்கள். இவற்றிலிருந்து நிறைய சமூக வரலாற்றுத் தகவல்கள் நமக்கு கிடைக்கும். ஆனால் அவற்றை நாம் வெளியிடவில்லை.

இவற்றைத் தவிர ஜமீன்களில் நிறைய ஓலைச் சுவடிகள் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து எட்டையபுர ஜமீனில் இருந்த ஓலைச்சுவடிகள், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. நம்முடைய ஆவணக் காப்பகங்களில் வரலாற்றுத்துறையில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்குத்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு இல்லை. அதே போல ஆங்கிலேயர் காலத்தில் இருந்த ‘கான்பிடென்ஷியல்' இன்றும் இருக்கிறது. இங்கே ‘கான்பிடென்ஷியல்' என்பது லண்டனில் வெளிப்படையாக இருக்கிறது.

யாரால் லண்டனுக்கு போக முடியுமோ அவர்கள் மட்டும் தான் இத்தகைய ஆவணங்களைப் பார்க்க முடியும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசிய இயக்கங்கள் உச்சகட்டத்தில் இருந்தபோது 1907 – 08 ஆம் ஆண்டுகளில் வெளியான ‘சுதேசமித்திரன்' நாளிதழ் இங்கு ஆவணங்களாக இல்லை. பாரதி ‘இந்து' பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்த வேங்கடாசலபதி, லண்டனிலிருந்துதான் அந்தக் கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார். சென்னையில் எடுப்பதைவிட லண்டனில் தரவுகளை எடுப்பது எளிது என்கிறார் அவர்.

நாட்டார் வழக்கில் வாய்மொழிப் பாடல்களை சேகரித்தது போல, வாய்மொழிச் செய்திகளை சேகரிக்கவில்லை. ‘பிரைவேட் பேப்பர்ஸ்' என்று சொல்லப்படும் தனித் தனி நாட்குறிப்புகளிலும் கடிதங்களிலும் நிலப்பத்திரங்களிலும் வரலாற்றுச் செய்திகள் கிடைக்கும். தலித் விழிப்புணர்வு ஏற்பட்ட பிறகுதானே அயோத்திதாசரும் ‘தமிழன்' என்ற நாளேடும் நமக்குக் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, தலித்துகளின் பங்கேற்பு அதிகமாக விடுதலைப் போராட்டத்தில் இல்லை என்பது பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஏன் அப்படி என்று பார்த்தால், தேசிய இயக்கப் பிரசங்கி ஆங்கிலேயர்களைப் பற்றி பேசும்போது, ‘வெள்ளைக்காரப் பறையன்' என்று பேசுகிறான். இதை யார், எங்கே, எப்போது என்று ஆதாரத்துடன் எழுதுகிறார் அயோத்திதாசர்.

அரசியல் ரீதியாக முற்போக்காக இருக்கிற ஒருவர், பண்பாட்டு ரீதியாக மிகப்பிற்போக்காக இருக்கிறார். வாஞ்சி கடிதத்தில் ஜார்ஜ் மன்னரைப் பற்றி எழுதும்போது ‘கேவலம் கோ மாமிசம் உண்ணும் ஜார்ஜ் பஞ்சமன்' என்று எழுதுகிறார். இவ்வாறு இழிவுபடுத்தப்படுகிற மக்கள் மற்றவர்களுடன் இணைந்து எப்படிப் போராட முடியும்? இந்த மாதிரியான செய்திகளை மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது. தலித்துகளின் இதழ்கள் மற்றும் வெளியீடுகள் படிக்கப்பட வேண்டும். இது வரலாற்றின் வேறு பகுதியைக் காட்டும்.
-அடுத்த இதழிலும்

Pin It