இல்லாத கடவுளை மக்கள் கொண்டாடுவது போல, இல்லாத ஜனநாயகத்தை அரசியல்வாதிகள் கொண்டாடுகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தங்களுக்கு நேர் எதிரான கட்சிகளிடம் பேரம் பேசி, எண்ணிக்கையில் வெற்றி பெற்று விட்டதாகப் பெருமிதம் கொள்ளும் காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஜனநாயகத்தையே மக்கள் வெறுக்கும் அளவுக்கு அருவெறுப்பாக நடந்து கொண்டன. தேசபக்திமான்களாகப் பீற்றிக் கொள்ளும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள், குறைந்த பட்சம் தங்கள் கட்சிக்குகூட நேர்மையாக இல்லை என்பதும் அம்பலமாகி விட்டது.

இந்திய நாடாளுமன்றம் மக்கள் மன்றமாக இல்லாமல், பெருமுதலாளிகளின் மன்றமாக இருப்பதற்கு, பார்ப்பன நாயகம்தான் (Brahminocracy) முக்கியக் காரணம். இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியத் தூணாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தில் மட்டும்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேணப்படுகிறது. எனினும், பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளை, இந்நாட்டின் ஆளும் வகுப்பினரான பார்ப்பனர்களே இயக்குகின்றனர். ஜனநாயகத்தின் பிற மூன்று தூண்களான நீதிமன்றம், ஆட்சி நிர்வாகம் மற்றும் ஊடகத்தில் பெரும்பான்மை மக்களுக்குரிய பிரதிநிதித்துவம் இல்லாததால்தான் மக்களாட்சியைப் பேணுவதில் தோல்வியே மிஞ்சுகிறது. இதன் விளைவாக பேராபத்துகளை சந்திக்கிறோம்: விலைவாசி உயர்வு, சாதிய வன்கொடுமைகள், மதவெறி, பெண்களுக்கான பிரதிநிதித்துவம், தனியார் துறையில் இட ஒதுக்கீடு எனப் பற்றி எரியும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் பற்றி துளியும் கவலைப்படாமல், அழிவுக்கான அணு ஒப்பந்தம் முதன்மைப் பிரச்சனையாக மாற்றப்படுகிறது.

அணுசக்தி தொடர்பான உலைகள் / பரிசோதனைகள் / குண்டுகள் / ஒப்பந்தங்கள் அனைத்தும் வெவ்வேறானவை அல்ல; அவை ஒரு மரத்தின் பல கிளைகளே. அணுமின் நிலையங்களில் வெளிப்படும் கழிவுகள், அணுகுண்டு தயாரிப்பதற்குப் பயன்படுகின்றன. ஆனால் அவ்வாறு அணுகுண்டு தயாரிப்பதற்கும் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் தடைசெய்கிறது. அந்த வகையில், இனி இந்தியா அழிவுக்கான அணுகுண்டை தயாரிக்க முடியாது என்பதால், மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இதை மறைப்பதற்குதான் அது மின்சாரம் தயாரிப்பதாகப் பிதற்றுகிறது. கடந்த ஆட்சியில், வர்ணாசிரம மதவெறி கொண்டு தீவிரமாக இயங்கிய பா.ஜ.க. இறுதியில் அதை மறைக்க ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று சொல்லி மண்ணைக் கவ்வியது. இதிலிருந்து காங்கிரஸ் பாடம் கற்க மறுத்து, மீண்டும் ஒளிமிகுந்த இந்தியாவை உருவாக்கப் போவதாகப் பொய் சொல்கிறது.

1962 இல் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என்று போற்றப்படும் ஹோமி பாபா, ‘1987 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் அணுசக்தி மூலம் சுமார் 25,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வோம்' என்று கூறினார். அவருக்குப் பிறகு அத்துறைக்கு தலைமை வகித்த விக்ரம் சாராபாய், ‘2000 இல் இந்திய அணு உலைகள் சுமார் 45,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்' என்றார். ஆனால், இவை கானல் நீரே என்பதை காலம் நிரூபித்திருக்கிறது. இன்றளவும் இந்திய அணு உலைகள் 3,310 மெகாவாட் மின்சாரத்தையே உற்பத்தி செய்கின்றன. ஆக, வெடிகுண்டும் கிடைக்காது; மின்சாரமும் கிடைக்காது. அமெரிக்காவின் அடிமையாக இந்தியாவை மாற்றுவதற்கே இந்த ஒப்பந்தம்!

தற்பொழுது பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அணுசக்தி விவாதம் கூட, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் தவறு என்கிற அரசியல் விவாதம்தான். இரோஷிமா, நாகசாகி ஆகிய இரு இடங்களில் ஒரே நொடியில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட காரணமான நாசக்கார அணு ஆற்றலை முற்றிலும் ஒழிப்பதற்கான விவாதம் அல்ல. குறிப்பாக, தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விளையக்கூடிய பேராபத்து குறித்தோ, கல்பாக்கம் அணுமின் கதிர்வீச்சால் அதிக அளவில் தமிழர்களைத் தொற்றும் புற்று நோய் குறித்தோ இங்கு விவாதிப்பதற்கு யாருமில்லை.

இறுதியாக, நம் முன் நிற்கும் கேள்வி: ஜனநாயகத்தை எப்படி காப்பாற்றுவது? “நாம் வெறும் அரசியல் ஜனநாயகத்துடன் நின்றுவிடக்கூடாது. நமது அரசியல் ஜனநாயகத்தை ஒரு சமூக ஜனநாயகமாக மாற்றியாக வேண்டும். அரசியல் ஜனநாயகத்தின் அடிப்படையாக சமூக ஜனநாயகம் இல்லாது போனால், அரசியல் ஜனநாயகம் நிலைத்து நிற்காது. சமூக ஜனநாயகம் என்றால் என்ன? அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை நெறிமுறை” என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். சமூக ஜனநாயகம் மலர்வதற்குத் தடையாக நிற்கும் சாதி அமைப்பு முறையை தகர்த்தெறிவதில் தீவிரம் காட்டாத வரை, ‘இந்து இந்தியா’வில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது.
Pin It