அடங்க மறுத்த சிங்கம்
-முகில், ராணிப்பேட்டை

அம்பேத்கர் ஒரு அதிசயம் அதிசயம் - அவர்
வாழ்ந்த விதம் அற்புதம் அற்புதம்
சமநீதிக்குப் பாடுபட்ட தங்கம் - அவர்
அநீதிக்கு அடங்க மறுத்த சிங்கம் (அம்பேத்கர்)

வீழ்ந்து கிடந்த மனிதர்களை எழுந்து நடக்கச் சொன்னவர்
கற்பித்து கிளர்ச்சி செய்து ஒன்று சேரச் சொன்னவர்
ஏனெதற்கு எப்படியென்று கேள்வி கேட்கச் சொன்னவர்
பதில்களையே கேள்வியாக்கி பகுத்தறியச் சொன்னவர் (அம்பேத்கர்)

சாதிக்கொடுமையை மோதி அழிப்பதற்கு கிளம்பினார்
நீதிகேட்டு நெடும்பயணம் வீதிகளில் தொடங்கினார்
சவுதார் குளத் தண்ணீரைக் கையில் அள்ளிப் பருகினார்
சனாதனிகள் நாணிட அவர் வாயில் மண்ணைத் தூவினார் (அம்பேத்கர்)

தன்னைவிட நாடு பெரிது என்று எண்ணி இருந்தவர்
நாட்டை விட தனது மக்கள் வாழ்வு பெரிது என்றவர்
இந்துவாக இறக்கமாட்டேன் என்று முழக்கம் செய்தவர்
புத்தம் தழுவி வரலாற்றில் எதிர்ப்பைப் பதிவு செய்தவர் (அம்பேத்கர்)



படி! படி!

நாளை படிப்போம் நாளை படிப்போம்
என்று நீ நினைக்கின்றாய் - ஒவ்வொரு
நாளையும் இழக்கின்றாய்

நாளைய பொழுதும் மலரும் மலர்ந்தால்
உனக்கென மலர்ந்திடுமா - படிக்க
உன்னால் முடிந்திடுமா?

என்றுமே வாரா விருந்தினர் யாரும்
அன்றுதான் வந்திடுவார் - உன்னை
எப்படி அவர் விடுவார்?

தலைவலி காய்ச்சல் கச்சிதமாக
அன்றுதான் தேடிவரும் படிக்க
முடியாமல் செய்து விடும்

மாமழை கொட்டிடும்! வீடும் வெளியும்
குளிரால் நடுநடுங்கும் - அன்றும்
படிப்பது தடையாகும்

எதிர்பாராமல் மின் தடையாகும்
வீடே இருளாகும் - அடுத்த
நாளும் வீணாகும்

பசித்தால் மட்டும் உடனே உண்ண
பாய்ந்தே செல்கின்றாய் - நாளை
என்றா சொல்கின்றாய்?

அதனால் தம்பி அறிவுடன் நீயே
அனுதினம் படித்திடுவாய் - நாட்களை
இழப்பதைத் தவிர்த்திடுவாய்!

-புலவர் கல்லை ஆ. துரை
நூல் : "சிறுவர் மலர்கள் - 1997'
Pin It