எழில் கொஞ்சும் அந்த அழகிய கிராமத்தில். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற வயல் வெளிகள். அந்தச் சிறிய கிராமத்தில் அப்பா, அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஒரு பெண் குழந்தையும் ஓர் ஆண் குழந்தையும். பெண் குழந்தை அக்கா. ஆண் குழந்தை தம்பி.

அவர்கள் ஒரு சிறிய வீட்டை கட்டினார்கள். அந்த வீட்டிற்குப் பின்னால் ஒரு சிறிய இடம் இருந்தது. அந்த இடத்தில் பல மரங்களும், செடிகளும், காய்கனிகளும், பூக்களும் நிறைந்த ஒரு தோட்டம் அமைக்கலாம் என்று அந்தப் பிள்ளைகள் நினைத்தார்கள். அவர்கள் இருவரும் அவர்களுடைய அப்பா, அம்மாவிற்கு இதைச் சொன்னார்கள். அவர்கள் எல்லோரும் தோட்டகாலுக்குச் சென்று செடிகளையும் எலுமிச்சையையும், மாதுளையையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு தோட்டத்தை உருவாக்கினார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு தம்பி, "அக்கா நாம் தான் விதைகளை விதைத்து விட்டோமே. ஆனால், இன்னும் ஏன் விதையாகவில்லை?' என்று கேட்டான். அதற்கு அவனுடைய அக்கா, “தம்பி நீ பிறந்தவுடன் வளர்ந்து விட்டாய்? நான் பிறந்து மெதுவாகத்தான் வளர்ந்தேன். அதைப் போலத்தான் இந்த செடிகளும், பூக்களும்” என்றாள்.

"அப்போ இதுவும் ஒரு மாதத்திற்குப் பிறகு தான் வளருமா?' என்று கேட்டான் தம்பி. "இல்லை இது முளைக்க 3 நாட்கள், 4 நாட்களாகும் என்று பதில் சொன்னார் அக்கா. செடிகள் வளர வளர இவர்களும் வளர்ந்து விட்டார்கள். அவர்கள் வைத்த மரங்களும், எலுமிச்சை, மாதுளையும் வளர்ந்துவிட்டன. அவர்கள் இருவரும் மிகவும் சந்தோசப்பட்டார்கள்.

தினமும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதுதான் அவர்கள் செய்வது. ஒரு நாள் காலையில் வழக்கம் போல செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினார்கள். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி முடித்தவுடன் இருவரும் சுற்றி முற்றி பார்த்தார்கள். அவர்களுடைய பக்கத்துவீட்டில் ஒரு வேப்ப மரம் இருந்தது. எதிர் வீட்டில் ஒரு முருங்கை மரம் இருந்தது. அவைகளில் குருவிகள் கூட்டம் கூட்டமாக வந்தன.

அவர்கள் இருவரும் அவர்களுடைய அம்மாவிடம் கேட்டார்கள். “அம்மா, அவர்கள் நட்டு வைத்த மரத்தில்தான் குருவிகள் வருமா, நாம் நட்டு வைத்த மரத்தில் வராதா? அதற்கு அவர்களுடைய அம்மா, "தெரியவில்லை. அதுங்களுக்கு இங்கே வர விருப்பமில்லையோ என்னவோ?' என்று சொன்னார். சரி என்று வழக்கம்போல அவர்கள் தங்கள் வேலைகளைத் தொடங்கிவிடுவார்கள்.

ஒரு நாள் மாலையில் அவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுடைய மாதுளை மரத்தில் குருவிகள் கூட்டம் கூட்டமாக வந்தன. குருவிகள் தங்களின் மரத்தில் இருப்பது இவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் வீட்டு பின்னால் ஒரு சத்தம். அவர்கள் இருவரும் பின்னால் வந்து பார்த்தார்கள். சுற்றி முற்றி பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. தம்பி, மாதுளை மரத்தைப் பார்த்தான். உடனே அவன் "அக்கா, அக்கா! அங்கே பாரேன்! நம்முடைய மாதுளை மரத்தில் குருவிகள் உள்ளன!' என்றான். அக்கா பார்த்துவிட்டு ‘ஆமாடா' என்று ஆச்சரியத்துடன் சொன்னார். அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மறுநாள் காலையில் வழக்கம் போல தண்ணீர் எடுத்துச் செல்லும் போது அக்கா தண்ணீருடன் ஒரு கைப்பிடி அரிசியும் எடுத்துச் சென்றார். தம்பி பார்த்து, “அக்கா, அக்கா நில்லுக்கா, நீ எப்பவும் தண்ணீர் மட்டும் தானே எடுத்துச் செல்வாய்? ஆனால் இப்பொழுது தண்ணீருடன் அரிசியையும் சேர்த்து எடுத்துச் செல்கிறாயே. ஏன் அக்கா?”

"தம்பி, இப்பொழுது நம்மரத்தில் குருவிகள் எல்லாம் வருகின்றன அல்லவா?”

“ஆமாம்! ஆமாம்!”'

“அந்தக் குருவிகள் மரத்தில் ஏதாவது உணவு கிடைக்குமா என்று தான் வருகின்றன. முதல் நாள் வந்த பொழுது நிறைய உணவு கிடைத்தது. ஆனால் இப்பொழுது அவைகளுக்கு உணவே கிடைக்கவில்லை. அதற்கு நம்மரத்தில் உணவு கிடைக்கவில்லை என்றால் திரும்பவும் மரத்திற்கு வராது. அவை இங்கேயே இருக்க வேண்டும் என்றால் நாம் அதற்கு உணவு கொடுக்க வேண்டும். அதனால் தான் தண்ணீரும் அரிசியும். நீயும் போய் ஒருவகைப் பிடி அரிசியை எடுத்து வா” என்று கூறினார்.

"சரி அக்கா நானும் எடுத்து வருகிறேன்” என்றான் தம்பி. அவர்கள் இருவரும் தண்ணீரையும் ஒரு கைப்பிடி அரிசியையும் எடுத்துச் சென்றனர். மரத்திலும் குருவிகள் இருந்தன. இவர்கள் தண்ணீரை மரத்திற்கு ஊற்றிவிட்டு அரிசியை ஒரு இடத்தில் இரைத்தனர். குருவிகளும் வந்து அதை தின்ன ஆரம்பித்தன. சாப்பிட்டு முடித்தவுடன் திரும்பவும் மரத்திற்குச் சென்று விட்டன. இதைப்போலவே தினமும் செய்தனர். இது அவர்களுக்கு ஒரு வழக்கமாக ஆகிவிட்டன. குருவிகளும் அவர்களிடம் பாசமாகிவிட்டது. அவர்கள் சொல்லுவதையெல்லாம் இந்தக் குருவிகள் கேட்கும். அவர்கள் பின்பக்கம் போனால் இந்தக் குருவிகள் அவர்கள் மேல் போய் உட்கார்ந்து விடும். இதைப் போலவே நடந்து கொண்டிருந்தது.

திடீரென திருடர்கள் அவர்கள் வீட்டிற்குள் வர ஆரம்பித்தார்கள். இவர்களுடைய வீட்டிலுள்ள மண்வெட்டி, வாளி போன்ற எல்லாவற்றையும் திருட ஆரம்பித்தனர். போதாதகுறைக்கு அந்தப்பிள்ளைகள் நட்டு வைத்த மரத்திலுள்ள கனிகளையும் அறுத்தனர். அந்தப் பிள்ளைகள் மிகவும் வருந்தினர்.

ஒருநாள் அவர்கள் விடுமுறை நேரம் வந்து விட்டது. குருவிகளும் அவர்களும் மிகவும் சந்தோசமாக இருந்தனர். மறுநாள் குருவிகள் மரத்திற்கு வந்தன. அந்த நேரம் பார்த்து ஒருவன் குருவிகளை கல்லால் அடித்தான். குருவிகள் கத்தின. என்ன இது குருவிகள் கத்திக் கொண்டே இருக்கின்றன என்று இவர்கள் போய் பார்த்தால். குருவிகளை கல்லால் ஒருவன் அடித்துக் கொண்டிருக்கிறான். இவர்கள் இருவரும் அவனை விரட்டினர். அதற்கு அவன், "நான் குருவிகளை அடித்தால், என்னை விரட்டுகிறீர்களா? நீங்கள் வீட்டில் இல்லாத போது இந்தக் குருவிகளை நான் கண் மூட வைக்கிறேன்” என்று சொன்னான். அதற்குத் தம்பி, பயத்துடனும், தைரியத்துடனும், "அதையும் பார்க்கலாம் போடா” என்று சொன்னான்.

அவர்கள் இருவரிடமும் தைரியம் இருந்தாலும் மனதில் ஒருவிதமான பயம் இருந்தது. திடீரென அவர்கள் ஊருக்குப் போகும் சூழ்நிலை வந்தது. அவர்கள் மிகவும் பயந்தனர். இருவரும் அவர்களுடைய அப்பாகிட்டே "அப்பா, நாங்கள் ஊருக்கு வரவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு அவர்களுடைய அப்பா, "என்னது வரவில்லையா? நீங்கள் வரவில்லை என்றால் அவர்கள் நம்மை தப்பாக நினைப்பார்கள்.” என்று சொல்லி அவர்களை தயாராகச் சொன்னார். சரி குருவிகளுக்குச் சொல்லலாம் என்று போனார்கள். ஆனால் குருவிகள் மரத்தில் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தனர். யோசித்துக் கொண்டே இருக்கும் பொழுது, அப்பா, "வாருங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டு போனார்கள்.

அந்த நேரம் பார்த்து குருவிகள் வந்தன. குருவிகளை அடிக்க அவனுடைய நண்பர்களைக் கூட்டிக் கொண்டு திருடனும் வந்துவிட்டான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லை எடுத்துக் கொண்டு ஒளிந்து கொண்டார்கள். அந்தக் குருவி கூட்டத்தில் ஒரு குருவிக்கு அவர்களுடைய வாசனை நன்றாகத் தெரியும். அந்தக் குருவி சுற்றி முற்றி பார்த்தது. அவர்களுடைய வாசனை தென்பட்டது. அந்தக் குருவி, "எல்லோரும் வாருங்கள். அவர்களை நான் கண்டுபிடித்து விட்டேன்” என்று சொன்னது. எல்லா குருவிகளும் திரும்பி அந்தக் குருவியின் பின்னாலேயே போயின. திடீரென ஒருவன் கல்லை வீசினான். அந்தக் கல் ஒரு குருவியை நோக்கிச் சென்றது. அந்தக் குருவி, கல் வருவதைத் தெரிந்து கொண்டு வேகமாகப் பறந்தது.

அந்தக் கல் வேறு எங்கோயோ போய் விழுந்தது. திருடர்கள் எல்லோரும் கல்லை வீசினார்கள். ஆனால் ஒன்று கூட குருவிகள் மேலே படவில்லை. குருவிகள் தேடித் தேடி ஒரு வழியாக அவர்களைக் கண்டுபிடித்துவிட்டன. அந்தப் பிள்ளைகள் மிகவும் சந்தோசப்பட்டனர். குருவிகளையும் அவர்களுடன் ஊருக்குக் கூட்டிச் சென்றனர்.

ஓவியன், 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்.
இவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் உள்ள கலைமகள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார்.
Pin It