சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு திருச்செந்தூரில் 30.6.2007 அன்று நடைபெற்றது. இவ்வீரவணக்கக் கூட்டத்தில் பங்கேற்றோர் ஆற்றிய உரை.

எஸ். நடராஜன்:

“சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சமூக வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த இது போன்ற எழுத்தாளர்களுக்கு தொடர் கூட்டங்கள் நடக்கும். எந்த அமைப்பிலும் இல்லாதவர், ஒரு சமூகப் போராளி, தந்தை பெரியாருடைய கருத்துகளை உள்வாங்கியவர், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைத் தாண்டி புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தையும், மார்க்சிய, லெனினிய கருத்துகளையும் உள்வாங்கி தனது பயணத்தில் மார்க்சிய கொள்கைகளையும், பவுத்த கொள்கைகளையும் பரப்பத் தொடங்கினார். இன்று இந்த மாநிலம் முழுவதும் வள்ளிநாயகம் அவர்களின் கருத்து பரவிக் கிடக்கின்றது. அதே போன்று நாமும் வள்ளிநாயகம் அவர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு பரப்பும் போதுதான் உண்மையிலேயே அவருக்கு செய்யும் நினைவேந்தல் அர்த்தப்படும்.

1970களில் வந்த புரட்சிகர இயக்கம், பகுத்தறிவு இயக்கம், நக்சல்பாரி இயக்கம் மற்றும் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின் வந்த இயக்கங்கள், இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தைக் கொண்டு வந்தது. அந்த வேகம் வள்ளிநாயகத்திடம் இருந்ததால்தான், வீரமணி அவர்களால் வள்ளிநாயகம் வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி எங்களைப் போன்ற நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும். 1978, 79களில் சமூக விடுதலைக்கான தத்துவங்களையும், கருத்துகளையும பரப்புவதற்கு தோழர் வள்ளிநாயகம் அவர்களோடு தொடர்பு ஏற்பட்டது.

தோழர் வள்ளிநாயகம் அவர்கள் நக்சல்பாரி தோழர்களோடு வரும் பொழுது தத்துவங்களை வழிநடத்த வந்த ஊழியர்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஏனென்றால் ஒரு மனிதனுக்கு சாதி முக்கியம் இல்லை. அந்த அடிப்படையில் வள்ளிநாயகம் அவர்கள் தத்துவத்தின் தலைவன். எந்தக் கட்சியிலும் சேராமல், எந்த இயக்கங்களிலும் ஆட்படாமல் எல்லா இயக்கத்திற்கும் அடிப்படைத் தத்துவங்களையும், சமூக விடுதலைக்கான தத்துவங்களையும் கற்றுக் கொடுத்தவர் அவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

எல்லா இயக்கப் போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். வெண்மணியில் விவசாயிகளுக்கான கூலி உயர்வுப் போராட்டத்தில் 44 தலித் உயிர்கள் கொளுத்தப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் தான், சமூகத்தை தலைகீழாக மாற்றியமைக்க வேண்டும், சமூகத்தைப் புரட்டிப் போட வேண்டும் என்று வள்ளிநாயகம் எழுந்து வந்தார்கள். அந்த எழுச்சிதான் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துகளை எல்லா இயக்கங்களிலும் பரப்பி, சமூக விடுதலைக்கு எந்த இயக்கம் பாடுபடுகின்றதோ அங்கெல்லாம் உறுதுணையாக இருந்தார்.

25 ஆண்டுகள் எழுத்துப் பணியை செய்து வந்தார். வள்ளிநாயகம் இறப்பு அவருடைய துணைவியார் ஓவியாவுக்கு, அவரது குடும்பத்திற்கும் மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கான இழப்பு. இயக்க ரீதியான உறவுதான் வரலாற்றில் நின்றிருக்கிறது என்று அடிக்கடி வள்ளிநாயகம் அவர்கள் சொல்வார்கள். இந்த சமூகத்தில் கடைநிலையில் இருப்பவர்கள் புதிரை வண்ணார்கள் மற்றும் அருந்ததியர்கள். இவர்களுடைய விடுதலைக்காக நாம் போராடவில்லையென்றால் சமூகம் விடுதலையடையாது. ‘நாங்கள் இந்துக்கள் அல்ல பவுத்தர்கள்' என்ற பிரச்சாரப் பயணத்தில் அவர் எங்கள் இயக்கத்தில் இல்லையென்றாலும் முழுமையாகப் பயணம் செய்து கருத்துகளைப் பரப்பினார். அதுதான் சமூக உணர்வு, இன உணர்வு, மாற்றத்திற்குரிய உணர்வு. குறுகிய வட்டதிற்குள் இல்லாமல் பரந்து விரிந்த சமூக மனிதனாக வாழ்ந்தார்.

மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கண்டித்து நாங்கள் மேற்கொண்ட பயணத்தில் தாத்தா ரெட்டமலை சீனிவாசனார் பெயரை வைக்கலாம், தலித்துகளுக்கான தத்துவம், சமத்துவத்திற்கான தத்துவங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம் என்று வழிகாட்டியவர். அதில் நான் தலைவர். அவர் செயலாளர். எல்லா கிராமங்களிலும் நாங்கள் இந்துக்கள் அல்ல, பவுத்தர்கள் என்று மக்களிடம் கையெழுத்து வாங்கியவர். இந்தப் பயணத்தை முடிக்கும் பொழுது அருந்ததியர் தலைவர்கள் தான் வந்து முடித்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதே போல் அதியமான் வந்து முடித்து வைத்தார். ஏனென்றால் எங்களுக்கு உட்சாதிப் பிரிவினை இல்லை. சில பேர் பார்க்கிறார்கள் என்பது வரலாற்று உண்மையாக இருக்கிறது. அது தவிர்க்கப்பட வேண்டும். உட்சாதிப் பிரிவினை என்பது பார்ப்பனியத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. எனவே அதை உடைக்க வேண்டும். உட்சாதிப் பாகுபாடு என்ற கருத்தில் மாறுபட்டு நடுநிலையாளராக விளங்கியவர் வள்ளிநாயகம் அவர்கள். அடித்தட்டு மக்களின் வரலாற்றை ஆழமாகத் தோண்டி அதை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர். அவருக்கு என்னுடைய வீரவணக்கம்.''

கொடிக்கால் ஷேக் அப்துல்லா:

“அய்யா ஏபி. வள்ளிநாயகம் அவர்களுடைய இறப்பு நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஏபி.வள்ளிநாயகம் அவர்களோடு பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. நீண்ட காலத்திற்கு முன்பே அவரை சந்தித்திருக்க வேண்டும், பழகியிருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. தமிழக வரலாற்றில் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, எல்லா நிலைகளிலும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிற தலித் மக்களின் உணர்வுகள், வரலாறுகள் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட வேண்டிய வரலாறுகளெல்லாம் மறைக்கப்பட்டு விட்டன.

இந்த வரலாறுகளை சொல்லுகிற போதெல்லாம் அதை காது கொடுத்துக் கேட்பதற்கு சமூக மக்கள் தயாராக இல்லை. கடந்த இருபது ஆண்டுகளாக தலித் சமுதாயத்திலே எழுத்தாளர்கள், படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்களெல்லாம் இன்று பரந்து கிடப்பதைப் பார்க்கிறோம். இந்த காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னோடிகளின் வரலாற்றினை தேடிக் கண்டுபிடித்து பதிவு செய்வது சாதாரண விஷயம் அல்ல. ஏறத்தாழ எந்த விபரமும் வரலாற்றுப் பதிவுகளும், ஊடகங்கள் ஏதுமில்லாத ஒரு சமுதாயத்தைப் பற்றி அவர்களுடைய வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், எவ்வளவு பெரிய சிரமம் என்பது அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத்தான் தெரியும்.

ஒடுக்கப்பட்ட மக்களுடைய மாபெரும் சிந்தனையாளரான ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற முன்னோடிகளின் வரலாறுகள் சமீப காலத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மரியாதைக்குரிய வள்ளிநாயகம் அவர்களும் நானும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறுகளைப் பதிவு செய்ய வேண்டுமென வந்திருக்கும் பொழுது அறிமுகம் ஆனோம். கேரள மண்ணின் போராளியாக மாபெரும் தலைவனாக நின்ற அடிமைகளின் தலைவர் அய்யன்காளி அவர்கள். ஆனால் நூறு ஆண்டுகளுக்குப் பின்பு தான் அய்யன் காளி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டது.

அன்றைக்குப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் அய்யன்காளி சிலையை கேரளாவில் மிகப் பிரமாண்டமாக திறந்து வைத்தார்கள். ஆக அந்த செய்திகளும், அதற்கு பின்னால் நடந்த சோக வரலாறுகளெல்லாம் சொல்லப்படவில்லை. இளைய தலைமுறை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே இந்த காலகட்டத்தில் அந்த வரலாறுகளைப் பதிவு செய்வதற்காக கேரளா மாநிலம் முழுவதும் கிராமங்கள், நகரங்கள் என அலைந்து திரிந்து தகவல்களை சேகரித்திருக்கிறார். மலையாள மொழி அவருக்கு தெரியாது. அந்த காலகட்டத்தில் இருந்த பெரியவர்களை எல்லாம் சந்தித்து வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார் வள்ளிநாயகம்.

மகராசன் வேதமாணிக்கம் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் வெள்ளையர்கள் கிறித்துவத்தைப் பரப்புவதன் மூலாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அதன்மூலம் கிடைப்பதாக அந்த மக்களிடம் கல்வி கற்பிப்பதற்காக, அந்த மக்களிடையே நாகரிகத்தையும், ஒழுக்கத்தையும் கற்பித்துக் கொடுப்பதற்காக நிறைய முயற்சிகள் எடுத்துக் கொண்டார். வேதமாணிக்கத்தினுடைய நல்ல சேவையை புரிந்து கொண்டு அவருக்கு உதவிகள் செய்திருக்கிறார்கள்.

ஆனால், ஒடுக்கப்பட்ட மக்கள் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி இருந்த காலகட்டத்தில் குறைந்தபட்ச கஞ்சியாவது கொடுக்க வேண்டுமென்று மன்னரிடத்தில் வலியுறுத்திப் போராடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களுக்கு நிலம் வாங்கி கொடுத்து, அது தாமரைக்குளம் என்ற பகுதியாக இருந்தது. இன்று ஆதிக்க சாதியினர் அந்த நிலங்களைப் பறித்துக் கொண்டனர்.

சமூக விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முற்போக்குத் தலைவர்களில் அருமைத் தம்பி வள்ளிநாயகமும் உண்டு என்பதை மறந்துவிட முடியாது. மிக முக்கியமான ஆராய்ச்சியாளர் என்று சொல்லிக் கொள்வதற்கு நான் தயங்கவில்லை. பல்வேறு தளத்திலே சமூகத்தை ஒருங்கிணைக்கக்கூடிய ஒருங்கிணைப்பாளர் நம்மிடையே இல்லாமல் போனது, மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்த இடத்தை இன்று யாரும் நிரப்பவில்லை.

அதைத்தான் நாம் எதிர்ப்பார்க்கிறோம். தம்பி வள்ளிநாயகம் அவர்கள் மறைந்த இந்த சமூகத்தின் முன்னோடிகளை, வரலாற்று நாயகர்களை, வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்திலே எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி எழுத்தாளராக, வரலாற்று ஆசிரியராக வள்ளிநாயகம் விளங்குகிறார்.

வள்ளிநாயகம் அவர்கள் இரவு பகலாக உழைத்தார்கள். அதற்கெல்லாம் ஊக்கம் கொடுத்தவர்தான் மரியாதைக்குரிய சகோதரி ஓவியா அவர்கள். அவர்கள் விட்டுச் சென்ற பணிகள் நிறைவேறும் என்று நம்புகிறோம். இறுதியாக வாழ்ந்த தலைவர்கள் பற்றியெல்லாம் எழுதினார்கள். வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய உங்களுடைய வரலாற்றை எழுதப் போகிறேன் என்றும் சொன்னார்கள். நான் வேண்டாம் என்று சொன்னேன். செல்லப்பா என்ற நான் ஷேக் அப்துல்லா ஆன நெடிய வரலாற்றை எழுத வேண்டுமென்று என்னுடைய சமூக செயல்பாடுகளைக் கேட்டறிந்து, ‘நட்பின் அலைகள்' என்ற நூல் வெளிவந்தது. தம்பி வள்ளிநாயகத்தை என் மனதில் நிறுத்திக் கொண்டு, அவர் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

Pin It