“சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதமே சாதி இந்துக்களின் நம்பிக்கையின்படி, என்றுமே மாற்ற முடியாத ஒன்றாகும். காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப இதில் மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் நீங்கள் கீழ் நிலையில் இருக்கின்றீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்க முடியும். இந்துக்களுக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள்.

இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. சாதி இந்துக்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அடிமைகளாக வாழ விரும்புகிறவர்கள், இப்பிரச்சனை குறித்து எப்போதுமே கவலைப்படுவதில்லை. ஆனால், சுயமரியாதை மிக்க, சமத்துவமிக்க வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.''

- பாபாசாகேப் அம்பேத்கர் 1936ஆம் ஆண்டு ஆற்றிய புகழ்பெற்ற மதமாற்ற உரையில்.

தலித் மக்கள் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்குச் செல்கிறார்கள் என்றவுடன் அலறித் துடிக்கும் ஆளும் வர்க்கம், அம்மக்கள் வேறு மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாறும்போது மட்டும் அமைதி காக்கிறது. மதமாற்றத் தடைச்சட்டம் நடைமுறையில் இருந்த பொழுதுதான் அதன் மீதான எதிர்வினைகள் இருந்தன. அச்சட்டம் திரும்பப் பெறப்பட்டதும் மதமாற்றம் குறித்த விவாதங்களே இல்லாமல் போய் விட்டன. அதுவும் ஓர் அரசியல் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்பட்டதால்தான் இந்த நிலை. எறையூர் (தலித் கிறித்துவர்கள் மீதான தாக்குதல்) போன்ற ஒரு சில பிரச்சனைகள் வெளியே தெரிய வரும்போது, அதற்கும் மூல காரணமான சாதியத்தை எதிர்க்காமல், அம்மதங்களையே இலக்காக்கி சாதியைத் தப்ப விடுவதே இன்று வரை அரசியல் நடைமுறையாக இருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 185 கிறித்துவ குடும்பங்கள் ஏப்ரல் 14, 2008 அன்று இந்து மதத்திற்கு மாறியுள்ளனர். திட்டமிட்டே அம்பேத்கர் பிறந்த நாளன்று ‘இந்து மக்கள் கட்சி' இக்கொடிய நிகழ்வை நடத்தியுள்ளது. அன்று ‘ராம நவமி’ என்பதால் முதலில் மதம் மாறிய ‘ஏழை கிறித்துவ மக்கள் இயக்க'த் தலைவர் நரேஷ் அம்பேத்கர் என்பவருக்கு ‘சிவராமலிங்கம்’ என்று சைவம் மற்றும் வைணவம் கலந்த பெயர் சூட்டப்பட்டது'' (‘தினகரன்’ - 15.4.08). இந்து மத எதிர்ப்பை தலித் இயக்கங்கள் தீவிரமாக்காததன் விளைவாக, இனி எத்தகைய அசிங்கங்கள் நிகழப் போகின்றன என்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணமிது. மீண்டும் ‘தா(பே)ய் மதம்’ திரும்புவதாகக் கூறும் இவர்களுக்கு கிடைத்தது என்ன? மாமனிதர் அம்பேத்கர் என்ற பெயரை கொண்டிருந்தவர் ராமனின் லிங்கமாக (லிங்கம் = ஆண் குறி) ஆக்கப்பட்டதுதான் மிச்சம். நாட்டின் எல்லைகளில் மின் வேலிகள் அமைக்கப்படுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில், ஊருக்கும் சேரிக்கும் இடையில் சுவர் எழுப்பப்பட்டு அதில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் இது குறித்து விவாதிக்கப்பட்ட பிறகு, மின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது. 1990இல் எழுப்பப்பட்ட சுவர் எந்த சேதாரமுமின்றி அப்படியேதான் இருக்கப்போகிறது. சிலர் இச்சுவர் அகற்றப்பட வேண்டும் என்றும், சிலர் தகர்க்கப்பட வேண்டும் என்றும் ஆவேசமாகப் பேசிவருகின்றனர். இத்தகைய சாதிய வெளிப்பாடுகள் ஒருவேளை தகர்க்கப்படலாம். ஆனால் ஜாதி இழிவு மட்டும் அப்படியேதான் நீடிக்கும். உத்தப்புரத்தில் பிறப்பின் அடிப்படையில் கீழ் ஜாதிகளாக ஆக்கப்பட்டுள்ளவர்களை, ஜாதி அற்றவர்களாக ஆக்குவது எப்படி? மதமாற்றம் என்றவுடன் முகம் சுளிக்கும் முற்போக்குவாதிகள், அது பிறவி இழிவைப் போக்கப் பெரிதும் பயன்படுகிறது என்பதை ஏற்க மறுப்பதேன்? பிறவி இழிவை அழித்தொழிக்க அம்பேத்கரின் அருமருந்தை இன்னும் எவ்வளவு காலத்திற்கு நிராகரிக்கப் போகிறோம்? ‘இந்து’ என்பது மதம் அல்ல, எனவே அதைப் பிற மதங்களுடன் ஒப்பிடுவதே மிகப்பெரிய குற்றம் என்றார் அம்பேத்கர். ஆனால், அதைப் பிற மதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றவர்கள், பிற மதங்களில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் ஒப்பீட்டளவில் குறைவு என்பதையும், அந்த மதங்களில் பிறவி இழிவு இல்லை என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தவறிவிடுகின்றனர். மத எதிர்ப்பு இயக்கத்தை வாழ்நாள் முழுவதும் நடத்திய பெரியார், மதமாற்றத்தை ஆதரித்தது அந்த அடிப்படையில்தானே! பகுத்தறிகின்றவர்களுக்கு மதமாற்றம் தேவையில்லை. சாதி - தீண்டாமையால் உழன்றாலும் ஒரு மதம் வேண்டும் என்பவர்களுக்குத்தான் மதமாற்றத்தைப் பரிந்துரைக்கிறோம். (சாதி) மதமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்குக்கூட, முன்நிபந்தனை இந்து மத ஒழிப்பல்லவா?
Pin It