காலத்தை அகழ்ந்து
கண்டெடுக்கப்பட்டது
என் உடல்

Dalit womanஏன் புதைக்கப்பட்டேன் நான்?

வரப்புகள் கீறி
வெடித்த பாதங்களும்
முள்குத்தி வறண்ட கைகளும்
சொல்லும் சொல்லும்
பல்லாயிரம் சரித்திரக் கதைகளை

பூமியின் ஆதிஉருவத்தில்
தேடலாமா
வாசனை திரவியத்தையும்
உதட்டுச் சாயத்தையும்?

திசைகளின் வடிவங்களில்
வெவ்வேறு முகங்கள் உண்டெனக்கு
எதிலும் இல்லை ஒப்பனை...

வெளிறிய செம்மண் நிறத்திலான
இந்தக் கண்களில் காதலை
சுமந்து திரிவதில்லை நான்
பேசும் வார்த்தைகளில் போதையை
செயல்களில் வெற்று கிளுகிளுப்பை
காட்ட முடியாது என்னால்

நீளும் அதிகாரக் கரங்கள்
பெருந்தடியெடுத்து துரத்துகையில்
அடுக்கடுக்காய் தோல் நீக்கி
நெளிந்து அகல்வேன் பாம்பென

கூடவே
பிடுங்கியெறிவதற்கு கண்களையும்
தகர்த்தாடுவதற்கு குடிலையும்
இடக்கையில் தந்துவிட்டு
அவிழ்த்துப்போக ஆடையற்ற
வெற்று உடலோடு என்
நிலம் திரும்புவேன்
வன்மம் தீரா நெஞ்சோடு...

பார்த்துக் கொள்ளுங்கள்
இரவு என் நிறம்
பகல் எனது புன்னகை

வானத்தில்
மேகமாய் சூரியனாய்
மிதப்பதெல்லாம் என் சுயம்

பூமியில் இங்கே
நதியாய் கடலாய்
ஓடுவதெல்லாம்
என் வியர்வை

சொல்கிறேன்...
வியர்வைதான் எனக்கு சொந்தம்
கண்ணீரல்ல

Pin It