தமிழகமே மோடியின் பக்கம் திரண்டு நிற்கிறது, என்கிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். அந்தக் கட்சிக்கு அவர்கள் ஒதுக்கியிருக்கிற சீட்டுகள் 5 மட்டும் தான்.

“இதுவே எங்கள் கட்சிக்கு ரொம்ப ரொம்ப அதிகம்” என்று மகிழ்ச்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. வட்டாரம்.

ஜி.எஸ்.டி. வரியானாலும், புயல், இயற்கை சீற்றப் பேரிடர் நிவாரண நிதியானாலும் தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை நடுவண் ஆட்சி தரவில்லை என்று பட்ஜெட் உரையில் பட்டியலிட்டார் முதல்வர் எடப்பாடி!

அரசுகளுக்கிடையிலான உறவுகளைத் தவிர, அ.இ.அ.தி.மு.க.வுக்கும் - பா.ஜ.க.வுக்கும் கட்சி ரீதியாக உறவுகள் கிடையாது என்று நேற்று வரை பேசினார்கள்; பேட்டி அளித்தார்கள்.

பா.ஜ.க.வை நாங்கள் ஏன் தூக்கி சுமக்க வேண்டும் என்று கேட்டவர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் அ.இ.அ.தி.மு.க. எம்.பி. தம்பித் துரை!

இப்போது அதே கட்சியைத் தலையில் தூக்கிச் சுமக்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழகம் முழுவதும் தலையில் மோடியைத் தூக்கிக் கொண்டு வரப் போகிறார்கள்.

காவிரிப் பிரச்னையில், நீட் பிரச்னையில், ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னையில், ஜி.எஸ்.டி. வரிப் பிரச்னையில் மேகதாது அணைப் பிரச்னையில் என்று தமிழ்நாட்டு மக்களை ‘வஞ்சம் தீர்த்த’ மோடியை தலையில் சுமந்து வருகிறோம். மோடியின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர, வாக்களிப்பீர் என்று கூவிக் கூவி மோடியை சுமந்து வரப் போகிறார்கள்.

இந்தக் காட்சிகளை கைதட்டி சிரித்து சிரித்து ரசிக்க வாக்காளர்களும் காத்திருக்கிறார்கள். ஆமாம்! வடிவேலு படங்கள் வந்து வெகு நாளாகிவிட்டது மக்கள் ‘காமெடிக்காக’ ஏங்கித் தவித்து நிற்கிறார்கள்.

கூட்டணிக்கு திகில் நிறைந்த திரைக் கதைகள்

மோடி ஆட்சிக்கு எத்தனை மார்க் போடுவீர்கள் என்று மருத்துவர் இராமதாசிடம் ‘நியூஸ் 18’ தொலைக்காட்சி பேட்டியில் கேட்டபோது ‘சைபர்’ மார்க்குக்கும் கீழே போடுவேன் என்றார், மருத்துவர் இராமதாஸ்.

‘கழகங்களின் கதை’ என்று எடப்பாடி ஆட்சியின் ஊழல்களைத் தொகுத்து நூலாக்கி, ஆளுநரிடம் தந்து ஆட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியதும் அதே பா.ம.க.தான்!

இவையெல்லாம் 5 ஆண்டுகள் முன்போ, 2 ஆண்டுகளுக்கு முன்போ நடந்தவை அல்ல; சில மாதங்களுக்கு முன்னால்!

இப்போது மீண்டும் மோடி ஆட்சியே வரவேண்டும் என்று வாக்கு கேட்க வருகிறது பா.ம.க. மோடி எடப்பாடி ஆட்சி தொடர வாக்களியுங்கள் என்று கூட்டணியில் ஒன்று சேர்ந்து ‘கோரஸ்’ பாடுகிறது. இதை நியாயப் படுத்த அவர்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள்.... அப்பப்பா... காதில் புகை வருகிறது!

“அதே பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் நாங்கள் கைகோர்த்திருப்பது இழந்த உரிமைகளை மீட்பதற்குத்தான். வெளியிலிருந்து கொடுத்தக் குரலை கூட்டணியில் இணைந்து வலியுறுத்தவிருக்கிறோம்” என்கிறார் அன்புமணி.

எடப்பாடியின் எட்டு வழிச் சாலை விரிவாக்கத்துக்கு நிலம் பறித்தபோது கதறியழுத மக்களிடம் போய் கூறிப் பாருங்கள்! மீண்டும் எடப்பாடியும் மோடியும் ஆட்சிக்கு வரவேண்டும்; அப்போதுதான் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை நிறுத்த முடியும் என்று!

நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் கிராமப்புற மாணவர்களிடம் போய் சொல்லிப் பாருங்கள்! மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்; அப்போதுதான் ‘நீட்’டை தடுத்து நிறுத்த முடியும் என்று! அப்போது தெரியும் உங்கள் கதை!

இப்படி எல்லாம் மக்கள் காதுகளில் பூ சுற்ற முடியாது; வாக்காளர்கள் இப்போது நிறையவே விழிப்படைந்து விட்டார்கள்.

எப்படி திரைக்கதைகளை நீங்கள் எழுதினாலும் நீங்கள் ஓட்டக்கூடிய ‘ரீல்’களில் மக்கள் ஏமாறப் போவது இல்லை.

Pin It