மேட்டூர் நாத்திகர் பேரணியில் பங்கேற்று கருநாடக குடியரசு கட்சித் தலைவர் முனைவர் வெங்கடசாமி பேசியதாவது:“பெரியார் கொள்கைகளை தமிழ்நாட்டில் ஆழமாகப் பரப்புவதன் வழியாக மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்ய முடியும். ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கு பெரியார் கொள்கையில் மட்டுமே தீர்வு இருக்கிறது. பார்ப்பனியம் தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ஜாதியத்தை உருவாக்கியது. அதை நிலைநாட்ட ‘மனுஸ்மிருதியை’ பயன்படுத்தியது. பார்ப்பனர்களின் பொருளாதார அரசியல் ஆதிக்கத்துக்கும் ஜாதியமே அடித்தளமாக நிற்கிறது. காலம் காலமாக தொடர்ந்து வரும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து, பெரியார் போராடினார்.

venkatasamy 350புத்தருக்குப் பிறகு பார்ப்பனரை வாழ்நாள் முழுதும் எதிர்த்துப் போராடிய தலைவர் பெரியார். அதேபோல் நான் சார்ந்துள்ள குடியரசு கட்சியை தோற்றுவித்தவர் அம்பேத்கர். பெரியார், அம்பேத்கர் இருவருமே சமூக மாற்றத்துக்கு சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவே உழைத்தனர். முதலில் உங்கள் அமைப்பு பெரியார் திராவிடர் கழகமாக இருந்தது. இப்போது இன்னும் சிறப்பாக திராவிடர்களின் விடுதலையை பெயரிலேயே வலியுறுத்தும் “திராவிடர் விடுதலைக் கழக”மாக மாறியிருப்பது மிகவும் சிறப்பானது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்கூட பெங்களூர் வந்தபோது அவரை சந்தித்து விவாதித்தோம். அதன்பிறகு கொளத்தூர் மணி பெங்களூர் வந்தார். அவரது உரையைக் கேட்ட பிறகு எங்களுக்கு அவர்மீதும், அவர் நடத்தும் இந்த கழகத்தின் மீதும் ஈர்ப்பு ஏற்பட்டது. கருநாடக பகுத்தறிவாளர் கழக சார்பில் ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாள் விழாநடத்தி, சிறந்த பகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு ‘பெரியார் விருது’ வழங்கி வருகிறோம். பெரியார் கருத்துகளை கன்னடத்தில் மொழி பெயர்த்த வேமண்ணா (வி.சி. வேலாயுதம்) அவர்களுக்கு பெரியார் விருது வழங்கினோம்.

பெரியார் பகுத்தறிவு கருத்துகளை மேடைகளில்பேசுவதைவிட வாழ்க்கையில் பின்பற்றி வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் முக்கியம்.மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து,

உங்கள் தலைவர் கொளத்தூர் மணியைப் போல் போராடியவர் டாக்டர் தபோல்கர். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உடனே அங்கே காங்கிரஸ் ஆட்சி அவரது நினைவாக மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், பெரியார் பிறந்த மண்ணில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்படாதது எங்களுக்கு வியப்பாக உள்ளது. இங்கே ஜெயலலிதா தலைமையில் ஒரு பார்ப்பன ஆட்சி நடப்பதால் சட்டத்தை அவ்வளவு எளிதில் கொண்டுவர மாட்டார்கள். அதற்கான போராட்டத்தை நீங்கள் தொடங்கி, ஆட்சிக்கு அழுத்தம் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருநாடக மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டுவர மாநில அமைச்சரவை முடிவுசெய்து, அதற்கான சட்ட வரைவு மூன்று முறை சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டது. பார்ப்பனர்கள் தொடர்ந்து எதிர்த்து சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தடுத்து வருகிறார்கள். சட்டம் நிறைவேற்றும் வரை நாங்கள் போராடுவோம். ஒருவர், பகுத்தறிவாளர் ஆகிவிட்டால், அவர் பெரியாரிஸ்டாகத்தான் இருக்க முடியும். பெரியார் ஒரு உலகத் தலைவர். இந்தியா முழுதும் அவரது கொள்கைகள் பரவ வேண்டும். இங்கே நடந்த பேரணியைக் கண்டு நாங்கள் மிகவும் பூரித்துப் போனோம். பேரணி எங்களை மிகவும் ஈர்த்து விட்டது. திராவிடர் விடுதலைக்கழகம் தமிழ்நாட்டில் பெரிய சக்தியாக வளர வேண்டும். பெரியார் வலியுறுத்திய ஜாதி-மத-மூட நம்பிக்கை எதிர்ப்பு கருத்துகள் இந்தியா முழுதும் பரவ வேண்டும். திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு எங்கள் இயக்கம் எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றார்.

Pin It