ஊடகவியலாளர்: இது கருஞ்சட்டைகள் ஒன்றிணையும் நேரம் என்று பேராசிரியர் சு.ப.வீ ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்; கொள்கைரீதியாக உங்களுக்கும் திராவிடர் கழகத்திற்கும் எந்த விதமான வேறுபாடும் கிடையாது; பல அபாயங்களை சந்திக்க வேண்டி உள்ள தற்போதைய சூழலில் திராவிடர் இயக்கங்கள் ஒன்றிணைவதற்கான திட்டம் அல்லது நிர்பந்தம் இருக்கின்றதா?

கொளத்தூர் மணி : கொள்கை வேறுபாட்டால் எங்களுக்குள் பிரிவு ஏற்படவில்லை; நடைமுறை சிக்கல்களால் வந்தது; கொள்கையில் ஒன்றுபட்டுதான் இருக்கின்றோம். எனவே ஒருங்கிணைந்து போராடுவதில் தவறு இல்லை. ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் எங்கள் அமைப்பும், கோவை இராமகிருஷ்ணன் அமைப்பும் தனித்தனியாக பிரிந்தோம்.

ஈழ விடுதலை உள்ளிட்ட பல சிக்கல்களில் இணைந்து நின்றுப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றோம். அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற கோட்சே சிலை எதிர்ப்பு மாநாட்டில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல அமைப்புகளோடு கலந்துகொண்டோம். அப்படி இருக்கும்போது பெரியாரை ஏற்றுக்கொண்ட இயக்கங்களோடு கலந்துகொள்வதற்கு தடை ஏதும் இல்லை.

காலப்போக்கில் அப்படி ஏற்படக் கூடியக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகின்றேன். அப்படி ஒரு நிலை வரலாம் – வரவேண்டும் என்றும் நான் விரும்புகின்றேன். அப்படிபட்ட இணைப்பு தேவையான ஒன்று தான்; அமைப்பு ஒன்றாக இணைய வாய்ப்பில்லை என்றாலும் கூட்டமைப்பாக செயல்பட தடை ஏதும் இருக்காது; காலம் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.

ஊடகவியலாளர்: இதே நேர்முகம் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவரிடம் இதே கேள்வியை கேட்ட போது... ‘இப்போது நாங்கள் யாரும் யாரையும் விமர்சிப்பது கிடையாது; ஆனால் எதிரிகளைக் கூட நாங்கள் பயன்படுத்திக் கொள்வோமே தவிர ஒரு போதும் எதிரிகளுக்கு எங்கள் பிளவு சாதகமாக இருக்காது’ என்பதைப் போன்ற ஒரு ஃபேவரான பதிலைத் தான் சொல்லியிருக்கிறார்; பாடலாசிரியர் அறிவுமதியும் இதே கோரிக்கையை வைத்தார்; சு.ப.வீ.யும் சொன்னதால் இப்படி ஒரு கேள்வியை தங்கள் முன் வைத்தேன்.

கொளத்தூர் மணி : 2000 ஆம் ஆண்டில் நாங்கள் தனியாகப் பிரிந்து அமைப்பு தொடங்கிய போதே, மேடைகளில் பிற பெரியார் இயக்கங்களை விமர்சிக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தோடுதான் இணைந்தோம். இடையில் ‘குடிஅரசு’ தொடர்பான ஒரு சிக்கலின் போது மட்டும் பேசப்பட்டதே தவிர மற்ற எந்த நேரங்களிலும் நாங்கள் பேசியதில்லை. மற்ற இயக்கங்களோடு எல்லாம் இணைந்து செயல்படும் போது இவர்களோடு இணைந்து நிற்பதில் தடை இருக்க முடியாது; அது கருதிப் பார்க்கவேண்டிய ஒன்று தான்.

(இமயம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கொளத்தூர் மணி)

Pin It