மோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது.

அறிவியல் - மோடி

ஒரு நாட்டின் மக்களை எப்படியெல்லாம் வழி நடத்த வேண்டும் என்று பல தலைவர்களின் பட்டியலைக் கொடுக்கலாம். ஆனால் எப்படி வழி நடத்தக் கூடாது என்று கேட்டால் தயங்காமல் மோடியின் பெயரைப் பரிந்துரைக்கலாம்.

modi on micநாட்டின் அறிவியலாளர்கள், மருத்துவர்கள் அடங்கிய அவையில் மோடி பேசியது, “மகாபாரதத்தில் கர்ணன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை. இதற்குக் காரணம், அன்றைய காலக்கட்டத்திலேயே மரபணு அறிவியல் இருந்ததால் தான் இது நடந்திருக்கிறது. விநாயகரின் தலையைப் பாருங்கள், யானையின் தலை பொருத்தப் பட்டிருக்கிறது. அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததால் தான் இது நடந்திருக்ககிறது” என்றார்.

அறிவியல் பாதையில் உலகம் விண்வெளி யில் வீடு அமைக்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தில் மத நம்பிக்கைகளை உட்புகுத்தி கிஞ்சிற்றும் அறிவுக்கு உட்படாத நிகழ்வுகளை அறிவாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் பேசுகிறார். தன் அரசியலுக்கு கர்ணனையும், விநாயகரையும்கூட விட்டு விட்டு வைக்க வில்லை மோடி. (தி கார்டியன் 28.10.14)

மோடியின் திருமணம்

நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் 2002-2012 வரை நடந்த தேர்தல்களில் தான் திருமணமானவரா, இல்லை திருமணம் ஆகாதவரா என குறிப் பிடவே இல்லை. தேர்தலில் விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்களில்கூட எதையும் குறிப்பிடாமல் மறைத்து வந்திருந்தார். ஆனால் 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு போட்டியிடும்போது தான் தனக்கு திருமணம் ஆனதாகவும், யசோதா பென் என்பவர் தனது மனைவி எனவும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையை உண்டாக்கிய பிறகே மோடிக்கு யசோதா பென் என்பவருடன் திருமணம் ஆனதும், 35 ஆண்டுகள் அவரை விட்டு தனியாக மோடி இருப்பதும் தெரிய வந்தது.

10 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தவர் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கூட இதை சொல்லாமல் மறைத்து விட்டார். 35 ஆண்டு காலம் ஒரு பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு விவாகரத்தும் வழங்காமல் தன் வீட்டுக்குள்ளேயே ஒரு பெண்ணின் வாழ்வையே கேலிக்குள்ளாக்கியிருக்கிறார். இவர் மேடைகளில் பெண்களின் உரிமை பற்றியும், பெண்ணின் பாதுகாப்பை பற்றியும் பேசுவது மோடியின் ‘ஜும்லா’ வித்தைகளில் ஒன்று. (தி இந்து 14.4.14)

எளிய ஆடை உடுத்துபவன் - மோடி

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தியை, “அவர் செல்வச் செழிப்பில் பிறந்தவர். நான் இரயில் நிலைய மேடைகளில் டீ விற்று வளர்ந்தவன். அவர் பகட்டான ஆடைகளை உடுத்தி வளர்ந்தவர். ஆனால் நான் அப்படி இல்லை” என்று தன்னைப் பற்றி பெருமையாகப் பேசினார். ஆனால், மோடி பிரதமரானதும் ரூ.10 இலட்சம் செலவில் கோட் போட்டுக் கொண்டு ஊர் சுற்றினார். (தி இந்து 5.9.15)

2016 - ஒரே தரம் ஒரே ஓய்வூதியம் - இராணுவத்தில் மோடியின் ஏமாற்று வேலை

இராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வரப் பட்டது. அதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில் ஒரே ஓய்வூதியம் கொண்டு வருவதாக மோடி அரசு சொல்லியது. ஒரு கட்டத்தில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. நடைமுறையில் இருக்கிறது என மோடி அறிவித்தார். ஆனால் உண்மை என்ன?

2014க்கு முன் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியத்தைவிட அதற்குப் பிறகு சேர்பவர்களுக்குக் கொடுக்கப்படும் ஓய்வூதியம் குறைவு. ஆனால் மோடி அரசு இதனை மாற்றி விட்டதாக கூறுகிறது. ஆனால், 2014க்குப் பிறகு பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு முன்னால் கொடுக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையைவிட குறைவான தொகைதான் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதுவரை எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது நிர்வாகம், இதுவரை தர வரிசையில் வேலையின் கால அளவு உள்பட எதையும் முறைப்படுத்தவில்லை என்று பதில் வந்தது. இது எதையும் செய்யாமல் மோடி இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு பயனடைந்து வருகிறார்கள் எனப் பேசி வருகிறார். இதில் நாட்டின் இராணுவத்திற்கு மரியாதை தர வேண்டும் என்று மட்டும் மேடைகளில் பேசி விட்டு அவர்களின் நலன் சார்ந்த விடயங்களில் எதையும் செய்யாமல் பொய் பேசி வருகிறார். (தி ஒயர் 4.11.16)

2017 - 1.25 இலட்சம் கருப்புப் பணம் - பறிமுதல் மோடியின் பொய்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கிட்டத்தட்ட 1.25 இலட்சம் கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று மோடி தனது பிரச்சாரப் பேரணியில் பேசினார். ஆனால் உண்மை?

1.35 இலட்சம் கோடி கணக்கில் கொண்டு வரப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டது உண்மை. ஆனால் அந்த பணம் மாநில அரசுக்கு வரவேயில்லை. பறிமுதல் செய்யப் படவுமில்லை. அதிகபட்சமாக கண்டு பிடிக்கப்பட்ட பணத்திற்கு உரிய வரியும், அபராதம் மட்டுமே பெறப்பட்டது. இதன் மூலம் எந்தவொரு பணமுதலைகளும் பாதிக்கப்படவில்லை. (ஸ்க்ரால் 15.8.17)

வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களின் உரிமை ரத்து - மோடியின் பொய்

மோடி தனது பிரச்சார உரையில், இதுவரை அரசால் கண்டுபிடிக்கப்பட்ட வரி ஏய்ப்பு செய்த 1,62,618 நிறுவனங்களின் உரிமைகள் இரத்து செய்திருப்பதாக கூறினார். ஆனால் உண்மை நிலவரம்?

வரி அமலாக்கத்துறை கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாகவே வெறும் 1155 நிறுவனங்கள் மட்டும் தான் வரி ஏய்ப்பு செய்வதை கண்டுபிடித்திருப்பதாக அறிக்கை தருகிறது. ஆனால் மோடி தன் கீழுள்ள அமைச்சகத்துக்கு மாறாக ஒரு எண்ணிக்கையைச் சொல்லி இரத்து செய்யப் பட்டதாக பொய் சொல்கிறார். (ஸ்க்ரால் 15.8.17)

பெண்கள் பாஸ்போர்ட் பெயர் மாற்றுதல் - மோடியின் பொய்

திருமணத்திற்குப் பிறகு இனி பெண்கள் தங்கள் பெயரை பாஸ்போர்ட்டுகளில் மாற்றத் தேவையில்லை என்று ஏதோ புதிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துவிட்டது போலவும், பெண்களை அடிமை முறையி லிருந்து மீட்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வந்துவிட்டது போலவும் பெருமையாகப் பேசினார். ஆனால் உண்மை?

பெண்கள் திருமணத்திற்குப் பிறகு பாஸ்போர்ட்டில் கணவர் பெயர் சேர்க்கும் முறை காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே நடைமுறையில் இல்லை. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ஒரு சட்டத்தைத் தான் அறிமுகப்படுத்தியதுபோல பொய் பேசுகிறார் மோடி.

ரம்ஜான் vs தீபாவளி - மோடி அரசியல்

உத்திரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்குகொண்ட மோடி; மாநில அரசு “ரம்ஜானுக்கு என்றால் அதிக மின்சாரத்தை வழங்குகிறது. ஆனால் அதுவே தீபாவளி என்றால் மின்சாரத்தை குறைத்து கொள்கிறது. முஸ்லிம்கள் என்றால் ஒன்று, இந்துக்கள் என்றால் ஒன்றா?” என்று மதங்களுக்குள் கலவரத்தை மேற்கொள்ள பொய் பேசி சென்று விட்டார். ஆனால் உண்மை நிலை வேறு.

ஜூலை 8ஆம் தேதி கொண்டாடப்பட்ட ரம்ஜானுக்கு உ.பி. அரசாங்கம் வழங்கிய மின்சாரம் 13,500 மெகாவாட். அதுவே தீபாவளி 28 அக்டோபரிலிருந்து 1 நவம்பர் வரை கொண்டாடப்பட்டது. 28 அக்டோபர் தொடங்கி 5 நாட்களிலும், ஒவ்வொரு நாளிலும் 15400 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டது. ரம்ஜான் தினத்தைவிட 2000 மெகாவாட் அதிகமாக மட்டுமல்ல 5 நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது.

ஆனால் பிரதமர் மோடி, இப்படியான ‘பொய்களை’ கொண்டு மக்களை உணர்ச்சி பெறச் செய்து உ.பி.யிலும் வெற்றி பெற்றார். இப்போது அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையில் அடாவடி ஆட்சி நடந்து வருகிறது.

உ.பி. வன்முறையில் முதலிடம் - மோடியின் பொய்

பிப்ரவரி 5 ஆம் தேதி உ.பி.யில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில்; அகிலேஷ் யாதவ் ஆட்சி செய்யும் உ.பி. அரசு தான் நாட்டின் வன்முறை நடக்கும் இடங்களில் முதலாவதாக இருக்கிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைப் பாருங்கள் என பெருமையாகப் பேசினார்.

ஆனால் உண்மை என்ன? உ.பி. மாநிலத்தை விட இந்தியாவின் 27 மாநிலங்களில் வன்முறை விகிதம் அதிகமாக இருக்கிறது என்றே புள்ளி விவரம் சொல்கிறது. உத்திரபிரதேசத்தைவிட மிக அதிகமாக வன்முறை நிகழும் மாநிலங்களாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள் இருக்கின்றன.

மோடி சொன்னது - உத்தரபிரதேசத்தில் 24 கற்பழிப்புகள், 21 கற்பழிப்புக்கான முயற்சிகள், 13 கொலைகள், 19 கலவரங்கள், 136 திருட்டுகள் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. இந்தியாவில் வன்முறையில் முதலிடத்தில் உ.பி. இருக்கிறது. இதுதான் அகிலேஷ் யாதவ் அரசின் சாதனை என்றார். (அகிலேஷ் முதல்வராக இருந்த போது பேசிய பேச்சுகள்)

உண்மை நிலை - மோடி சொன்ன புள்ளி விவரமே தவறானது. இந்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கே உ.பி.யில் நடக்கிறது. உ.பி. இந்த வன்முறை சம்பவங்களில் முதல் மாநிலமாக இல்லை. உ.பி.யை விட இந்தியாவின் 27 மாநிலங்களில் அதிகமான வன்முறைகள் நடக்கிறது என்பதே NCRB (National Crime Record Bureau) சொல்லக் கூடிய புள்ளி விவரம். (ஸ்க்ரால் 17.2.17)

அகிலேஷ் யாதவ் ஆட்சி செய்யும் உ.பி.யில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா பேசியது: உத்திரபிரதேசத்தைவிட பா.ஜ.க. ஆட்சி செய்யும் 14 மாநிலங்களில் சட்ட ஒழுங்கு சீராக இருக்கிறது.

உண்மை என்ன? பா.ஜக. ஆட்சி செய்யும் 13 மாநிலங்களில் 2015 புள்ளி விவரப்படி, வன்முறையில் 6 மாநிலங்கள் அதிக விகிதத்திலும், கற்பழிப்புகளில் 12 மாநிலங்கள் அதிக விகிதத்திலும், 9 மாநிலங்கள் கடத்தல், 5 மாநிலங்கள் கலவரம், எட்டு மாநிலங்கள் திருட்டிலும் உ.பி.யைவிட அதிகமாக இருக்கின்றது. இந்த நிலையில் மோடியும் அவரது சகாக்களும் கவலை கொள்ளாமல் பொய் பேசுகிறார்கள். (ஸ்க்ரால் 14.2.17)

(பொய்ப் பட்டியல் தொடரும்)

Pin It