பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டதை எதிர்த்து ரூ.15 இலட்சம் இழப்பீடு கேட்டார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார இயக்கச் செயலாளர் கி.வீரமணி அவர்கள்.

‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை இல்லை என்று உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற அமர்வு, உச்சநீதிமன்றம் வரை அறிவித்த பிறகும் இழப்பீடு கேட்கும் பிரதான வழக்கை அவர்கள் கைவிடத் தயாராக இல்லை.

2010க்குப் பிறகு மீண்டும் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தவே விரும்புகிறார்கள் என்பதையே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது.

“மீண்டும் நாங்கள் புதிய வழக்கைப் போடவில்லை; ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தவறான செய்தியை வெளியிடுகிறது” என ‘விடுதலை’ ஏடு மறுத்துள்ளது.

‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு தடை இல்லை என்ற தீர்ப்புகள் வந்த பிறகும் வழக்கை அத்துடன் முடித்துக் கொள்ளாமல், பழைய வழக்கை பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோண்டி எடுத்துத் தொடருவதை, ‘மீண்டும் வழக்கு’ என்று குறிப்பிடுவதில் என்ன தவறு?

பழைய வழக்கின் கோரிக்கைகளை மாற்றி புதிய கோரிக்கைகளோடு ‘மீண்டும்’ வழக்கைத் தொடர அவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியதை மறுக்க முடியுமா? அதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது என்பதையும் மறுக்க முடியுமா? பல மாதங்களுக்கு முன்பே புதிய கோரிக்கையுடன் அவர்கள் நீதிமன்றம் வந்தபோது தோழமை - நாகரிகம் கருதியே ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் நாம் அந்த செய்தியை வெளியிடாமல் தவிர்த்தோம்.

அதுவும்கூட 2018 ஜனவரி 4ஆம் தேதி அன்று உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்ததால்தான் அந்த செய்தியை இப்பொழுது வெளியிட்டோம்.

இந்த நிலையில் ‘மீண்டும்’ என்ற வார்த்தையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பயன்படுத்தியதில் இவர்கள் ஏன் வருத்தமடைய வேண்டும்? தாங்கள் செய்த பழைய தவறை மீண்டும் புதிய தவறாக ஏன் திரிக்கிறீர்கள் என்பதுபோல் இருக்கிறது, இவர்களின் வாதம்!

‘வரவு செலவு கணக்கை பெரியார் திராவிடர் கழகம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை’ என்று எழுதியிருக்கிறது, ‘விடுதலை’.

‘குடிஅரசு’ வெளியீட்டு உரிமை கிடைத்த அடுத்த நாளே ‘குடிஅரசு’ தொகுப்பை இணையத்தில் ஏற்றி எவர் வேண்டுமானாலும் இலவசமாகப் ‘பதிவிறக்கம்’ செய்யலாம் என்று அறிவித்துவிட்டது பெரியார் திராவிடர் கழகம். பெரியார் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமே தவிர, அதை விற்பனைச் சரக்காக மாற்ற வேண்டும் என்பது அல்ல.

இன்று பெரியார் நூல்கள் புத்தகச் சந்தைகளில் ஒவ்வொரு கடைகளிலும் நிரம்பி வழிகிறது என்றால், அது பெரியார் திராவிடர் கழகம் வழக்கின் மூலம் பெற்றுத் தந்த உரிமைதான்.

மானமிழந்த சமுதாயத்துக்கு சுயமரியாதை எனும் இழப்பீட்டைப் பெற்றுத் தந்த தலைவர் பெரியார்!

அந்த பெரியாரின் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்று செயல்படும் இயக்கத்திடம் - அந்த “குற்றத்துக்காக” ரூ.15 இலட்சம் பணத்தை இழப்பீடு கேட்கிறது - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.

இதைச் சுட்டிக்காட்டினால், கோபம் வருவது ஏன்? ‘மீண்டும்’ என்பதற்காக வருத்தப்படும் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், “பெரியார் நூல்களை எவரும் வெளியிடலாம்; மீண்டும் வழக்குகள் ஏதுமில்லை” என ஒரு அறிவிப்பை வெளியிடலாமே! அதை செய்யாமல் மீண்டும் மீண்டும் மீண்டும் அதே தவறைத் தொடரலாமா?

Pin It