சனாதனம் என்ற பார்ப்பனிய வாழ்க்கை முறையை அரசு அதிகாரத்துடன் வருகிறது உபி பாஜக அரசு.
கடந்த செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்தநாள் விழா நடத்திய 5 தோழர்களை கூட்டத்துக்கு தடை விதித்து கைது செய்துள்ளது சிறையில் அடைத்துள்ளது உபி பாஜக அரசு.
அதே நேரத்தில் பூச்சாண்டி குண்டர் சாமியார் பூணூலைப் போட்டுக் கொண்டு கையில் நீண்ட கொடுவாளை ஏந்தி உதயநிதி ஸ்டாலின் படத்தை தலையில் குத்தி பிறகு நெருப்பில் போட்டு எரித்து – காலால் மிதிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பரவலானது. உதயநிதி தலைக்கு 15 கோடி விலை நிர்ணயித்தார் அந்த பார்ப்பன குண்டர் இப்போது சுதந்திரத்துடன் திரிகிறார்.
இதே உபி மாநிலத்தில் முசாபர் நகர் பகுதியில் ஒரு பள்ளி ஆசிரியை வீட்டுப்பாடம் எழுதாத 7 வயது முஸ்லிம் சிறுவனை நிற்க வைத்து பிற மாணவர்களை விட்டு கன்னத்தில் அறைய வைத்திருக்கிறார். இந்த கொடூர காட்சி சமூகவலைதளங்களில் பரவலானது. வேறுவழியின்றி முசாபர் நகர் காவல்துறை நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது. கண் துடைப்புக்காக போடப்பட்ட இந்த வழக்கை எதிர்த்து குடும்பத்தினர் உச்ச நீதிமன்றம் போனார்கள். உச்ச நீதிமன்றம் உபியில் சனாதன ஆட்சி நடத்தும் மாநில ஆட்சியை கடுமையாகக் கண்டித்துள்ளது. பள்ளி ஆசிரியை சிறுவனின் மதம் குறித்து அவனது தந்தையிடம் கூறிய வசை சொற்களை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப் படவில்லை.
அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறுகையில்;- இதில் தேவையில்லாமல் மதப் பிரச்சனையை கொண்டு வருகிறார்கள் என்று முன் வைத்த வாதத்தை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் இது கடுமையான பிரச்சனை, வீடியோ ஆதாரமே இருக்கிறது, வேறொரு மதத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவே ஒரு ஆசிரியை சக மாணவர்களைக் கொண்டு தாக்க செய்கிறார்கள் என்றால் அம்மாநிலத்தின் கல்வித்தரம் தாழ்ந்து போய் இருக்கிறது என்று அர்த்தம் என்று நீதிபதி சுட்டிக் காட்டியிருக்கிறார். இதுதான் உபியில் சனாதன ஆட்சி, அதுவும் ராமனுக்கு வீடுகட்டி குடியேற்றச் செய்யும் மாநிலம்.
- விடுதலை இராசேந்திரன்