தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் 110ஆவது விதியின் கீழ் பல்வேறு சமூக மாற்றத்திற்கான முற்போக்கு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். ஆனால் ஒரே ஒரு அறிவிப்பு மட்டும் எதிர் தரப்பினரையும் பாராட் டுக்களை குவிக்கச் செய்யும் அறிவிப்பாக மாறி இருக்கிறது. அதுதான் செப்டம்பர் 16ஆம் தேதி மகாகவி நாள் என்று கொண்டாடப்படும் அறிவிப்பாகும்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் நினைவிடத்திற்குச் சென்று அங்கே மரியாதை செலுத்தி இந்த மண்ணில் நிற்கின்றபோது என் உளம் நடுங்குகிறது என்று உணர்ச்சிப் பூர்வமாக கூறியிருக்கிறார். பிரதமர் மோடி ‘பனாரஸ்’ பல்கலைக்கழகத்தில் பாரதியின் இருக்கை ஒன்று அமர்த்தப்படும் என்ற அறிவிப்பையும், எந்த கோரிக்கையும் வராத நிலையில் அவராகவே வெளியிட்டு இருக்கிறார். ஆக பொதுவுடமை கட்சிகளாக இருந்தாலும் சரி; ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.காரர்களாக இருந்தாலும் சரி; பார்ப்பனராக இருந்தாலும் சரி; எல்லாரும் கொண்டாடுகின்ற ஒரு மனிதராக பாரதியார் மாறிப் போய் நிற்கிறார். இது எப்படி சாத்தியம்?

இந்த கேள்விக்கு பதில் அவருடைய கவிதைகளில் உரை நடைகளில் நிறைந்திருக்கிற குழப்பங்களும் முரண்பட்ட கருத்துக்களும்தான். பாரதியை ஆய்வு செய்தால் அவர், ஆர்.எஸ்.எஸ்.சின் அகன்ற பாரதம் என்ற கருத்தை ஏற்றிருக்கிறார். மதம் மாறுவது குற்றம் என்று கூறியிருக்கிறார். இந்தியாவிற்கு பாரதம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முகமதிய, கிறிஸ்துவ மத எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பசு மாட்டுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார். சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறார். லெனின் நடத்திய போல்ஷ்விக் புரட்சி என்பது வன்முறையானது என்று சொல்லியிருக்கிறார். இப்படி ஏராளமான பிற்போக்குவாத சிந்தனைகள் அவரிடம் இருந்தாலும், ஆங்காங்கே ஒன்று இரண்டு கருத்துக்கள் முற்போக்காக இருப்பதை வைத்து ப. ஜீவானந்தம் போன்ற பொதுவுடமைக் கட்சியினர் பாரதியை கொண்டாடி அவரை தமிழ் நாட்டினுடைய ஒரு முற்போக்கு முகமாக மாற்றி விட்டார்கள்.

இந்த நிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக இருந்த குத்தூசி குருசாமி அவர்கள் 13.09.1947ஆம் ஆண்டு ‘குத்தூசி’ என்ற பகுதியின் கீழ் ‘விடுதலை’ யில் கிண்டலாக எழுதிய ஒரு கருத்து தான் மிகச் சரியானதாக நாம் கருத வேண்டியிருக்கிறது. குத்தூசி குருசாமி எழுதிய அந்த “பலசரக்கு மூட்டை” என்ற கட்டுரையில் இப்படிக் கூறுகிறார், “விற்காத ஓமப்பொடி, சிக்கு நாற்றம் வீசும் காரா பூந்தி, பழைய பக்கோடா, அன்று வறுத்த அவல் இத்தனையும் கலந்து மிக்சர் கலப்பு என்ற பெயரால் விற்பார்கள் ஆரிய ஓட்டல்காரர்கள் அதுபோன்ற வேலை தான் பாரதியாருடையது. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சுதந்திர பள்ளு, கிருஷ்ணர் துதி, புதுமைப் பெண், புதிய ரஷ்யா, நவராத்திரி பாட்டு, தமிழ் மொழி வாழ்த்து, சக்தி பாட்டு இத்தனையும் கலந்த கதம்பம். யார் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். மூர் மார்க்கெட் பழஞ் சாமான் கடை மாதிரி. நான் இதை புராணக் கண் கொண்டு பார்க்கிறேன். அதை புரட்சிக் கண் கொண்டு பார்க்கிறேன். இதை கலைக் கண் கொண்டு பார்க்கிறேன் என்று சொல்வார்களே சில சந்தர்ப்பவாதிகள் அது போலத்தான் இதுவும் இருக்கிறது” என்று அவர் மிகச் சரியாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனாலும் இன்றைக்கு பாரதியாருடைய அகண்ட பாரதத்தையும், சமஸ்கிருதத்தையும், மத மாற்றத் தடையையும், பசு மாட்டினுடைய புனிதத்தையும் தமிழ் நாட்டு மக்களிடம் அவரை ஆதரிக்கும் சங்கிகளால்கூட எடுத்துச் சொல்ல முடியாது. ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்ற சில பெண்ணுரிமைக் கருத்துக்களையும், பார்ப்பன எதிர்ப்பு வரிகளையும் எடுத்து வேண்டுமானால் பேச முடியும் என்ற நிலையை திராவிட இயக்கம் தமிழ் நாட்டில் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை மட்டும் நம்மால் சுட்டிக்காட்ட முடியும். 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் துவங்குகிறபோது அதை கடுமையாக விமர்சித்து எழுதியவர் தான் பாரதி. இந்த இயக்கம் தோற்றுப் போகும் வெற்றி பெறப் போவது இல்லை என்று பாரதி எழுதினார். ஆனால் அந்த இயக்கம் வெற்றி பெற்று அதிகாரத்தைப் பிடித்து இன்று பாரதியினுடைய நாளையும் கொண்டாடுகின்ற நாளாக அறிவித்திருக்கிறது என்பது பாரதியாருக்கு கிடைத்திருக்கிற வெற்றியா? தோல்வியா? என்பதை வரலாறு தான் முடிவு செய்யும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It