ஆக. 31, 2019 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டில் நேருவின் பகுத்தறிவு கொள்கை பற்றி அசோக் வோஹ்ரா எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம்.

நேரு வாழ்நாள் முழுதும்தீவிர பகுத்தறிவாளராகவே இருந்தார். கடவுள் பற்றிய கருத்தே அறிவுடைமைக்கு எதிரானது என்று கூறிய அவர், இதுதான் கடவுள் என்பதற்கான வரையறையே இல்லை என்றார். தன்னுடைய ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ நூலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஒரு கடவுள் உருவமாகவோ அல்லது ஏதோ ஒரு புலப்படாத ஒரு அற்புத சக்தியாகவோ இருப்பதாக என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. மனித சமூக வளர்ச்சி பற்றிய மானுடவியலில் அத்தகைய கடவுளுக்கோ, அற்புத சக்திக்கோ இடமில்லை. ஆனாலும் பலரும் இந்த சக்திகளை நம்புவது எனக்கு வியப்பூட்டுகிறது. தங்களுக்கான தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக் குறித்த எந்த கருத்தையும் என்னால் ஏற்கவே முடியாது” என்று எழுதியிருக்கிறார். “இல்லாத ஒரு கடவுள்தான் மனிதனை வழி நடத்தி உள்ளத்தை அமைதிப்படுத்துகிறார் என்பதை எப்படி ஏற்க முடியும்” என்று அவர் கேட்டார். ‘கடவுள் என்ற ஒன்று மனித சமுதாயத்துக்கு தேவை’ என்ற வாதத்தையும் நேரு ஏற்கவில்லை.

“அப்படியே கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொண்டாலும் கடவுளிடம் போய் பக்தி செலுத்தாமலும், அவரை சார்ந்து இல்லாமல் இருப்பதுமே விரும்பத்தக்கது. நம்மையும் மீறிய அதீத சக்தி ஒன்றை நம்பிக் கொண்டிருப்பது, ஒருமனிதரின் தன்னம்பிக்கையை குலைத்து விடும். தன்னம்பிக்கை குலையும்போது மனிதனின் ஆற்றலையும் சிந்தனைத் திறனையும் பாதிக்கச் செய்து விடுகிறது. இயற்கையின் தடைகளைத் தாண்டி மனித சமூகம் முன்னேறிச் செல்வதற்கு அறிவியல் சார்ந்த மனித நேயமே தேவை (ளுஉநைவேகைiஉ ழரஅயnளைஅ). அதுவே நடைமுறைக்குப் பொருந்தக் கூடியது; இயல்பானது. மனித வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் சமூக உணர்வையும் உருவாக்கக் கூடியது. நடைமுறையோடு பொருந்தக் கூடிய இந்த அறிவியல் மனித நேயக் கோட்பாடுதான் சமூக மேம்பாட்டுக்கு பயன்படக் கூடியதும் ஆகும். ‘அறிவியல் மனித நேயம்’ என்ற நெறிக்கு கடவுள், ‘மனிதம்’ தான்; சமூக சேவைதான் அதற்கான மதம். ஒவ்வொரு தலைமுறையில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு மாயையில் மூழ்கி இருக்கிறார்கள். அதாவது எல்லாவற்றையும் நாம் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறோம் என்ற மாயையில் மூழ்கி விடுகிறார்கள். நம்முடைய நம்பிக்கைதான் நமக்கு வாழ்க்கை. அதுதான் நம்மை நல்வழியில் செலுத்தும். இதுவே நிலையானது என்பதே ஒரு மாயைதான். ‘அறிவியல் மனித நேயம்’ இந்தக் கருத்துகளை மறுக்கிறது.

இன்றைய கலாச்சார மதிப்பீடுகளாக நாம் போற்றுவது அப்படியே நிலையானதும் இறுதியானதும் அல்ல. அந்தந்த காலத்தில் நாம் போற்றும் கலாச்சாரமும் அதன் மதிப்பீடுகளும் சமூகத்துக்கு அவசியமானவைதான். ஆனாலும் அதுவே எல்லா காலத்துக்குமானது அல்ல. அதுவே நான் கூறும் பகுத்தறிவு சிந்தனையின் அடிப்படையாகும். மனிதன் தன்னுடைய எல்லையில்லாத திறமையை வெற்றியை நோக்கிச் செல்லும் போராட்டத்துக்குப் பயன்படுத்த வேண்டும். மனிதன் தனது அறிவையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தும் போதுதான் மேலும் மேலும் முன்னேறிச் செல்ல முடியும்; தடைகளை எதிர்த்து நிற்க முடியும். கடவுள் மத நம்பிக்கைகள் இதற்கு தடையாகவே இருக்கும்.

சக மனிதர்களை நேசிப்பதும் சுயநலத்தை மறுக்கும் துணிவும் மனிதனின் மிகச் சிறப்பான குணாம்சங்கள். நகைச்சுவை உணர்வு மனிதர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பு. இடர்ப்பாடுகளை சந்திப்பதற்கு அறிவியல் அடிப்படையிலான மனித நேயம் கொண்ட சிந்தனைகளான பகுத்தறிவே பயன்படும். வளர்ச்சியை நோக்கிய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்; தேங்கிவிடக் கூடாது” - என்பதே நேருவின் கருத்து.

Pin It