Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

பெரியார் முழக்கம்

இந்து பார்ப்பன பண்டிகைகளின் உள்ளடக்கங்கள் மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. உள்ளடக்கங்கள் மாறினாலும் ‘இந்து’ மத நீரோட்டத்துக்குள்ளேயே மக்களை நிறுத்தி வைக்கத் துடிக்கும் பார்ப்பனியம் இந்தப் பண்டிகைகள் சமூகத்தில் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்றே விரும்புகிறது.

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, மதங்களுக்கு அப்பாற்பட்ட அரசு அலுவலகங்களில் காவல் நிலையங்களில் ‘ஆயுத பூஜை’ கொண்டாட்டங்கள் நடக்கின்றன.  இப்படி அரசு அலுவலகங்களை ‘பஜனை மடங்’களாக மாற்றக் கூடாது என்று அரசு ஆணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இருப்பதை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சுட்டிக்காட்டி அவற்றை நகல் எடுத்து அனுப்பி வைத்து தொடர்ந்து போராட்டங்களை இயக்கங்களை நடத்தி வருகிறார்கள்.

மதம் சார்ந்த நம்பிக்கைகளோடு மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஓர் உளவியல் அடங்கியிருக்கிறது.  பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி கவலைப்படாமல் எந்த எல்லை வரையும் சென்று வீண் விரயங்களில் பணத்தை செலவிடும் ‘உளவியலை’ மதம் சார்ந்த பண்டிகைகள் உருவாக்கி விடுகின்றன. தொழில்துறை அமைப்பான ‘அகோசம்’ வரவிருக்கும் ஆயுத பூஜை, சரசுவதி பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்காகப் பொருள்களை வாங்கிக் குவிப்பதற்கு ரூ.25 ஆயிரம் கோடி வரை மக்கள் செலவிடுவார்கள் என்று கணித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று அந்த கணிப்பு கூறுகிறது. இதற்காக இந்தியா முழுதும் 10 முக்கிய நகரங்களில் ஆய்வுகளை இந்த அமைப்பு நடத்தியிருக்கிறது.

பண்டிகைக் கொண்டாடும் நம்பிக்கையாளர்களில் 60 சதவீதம் பேர் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள பொருள்களுக்கான பட்டியலை தயாரித்து வைத்துள்ளனர் என்றும், கடைகளில் வரிசையில் நிற்பதைவிட ‘ஆன்லைன்’ வழியாக வாங்குவதற்கே முன்னுரை தர விரும்புவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. வணிக நிறுவனங்கள் ‘தள்ளுபடி’ அறிவிப்புகளை இப்போதே அறிவிக்கத் தொடங்கிவிட்டன.

இந்து பார்ப்பனியப் பண்டிகைகள் மத சடங்குகளுடன் வணிகப் பண்பாடுகளை இணைத்துக் கொள்கின்றன. ‘புனிதமான மதத்தில் வர்த்தகத்தைப் புகுத்தாதே’ என்று இந்து மதத்தைக் காப்பதற்கு அமைப்புகள் நடத்தும் எந்த ‘முன்னணி’யும் ஏன் கண்டிக்கவில்லை? காரணம் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த கோரிக்கையை முன் வைத்தால் மக்களே இந்த அமைப்புகளை புறந்தள்ளி தனிமைப்படுத்தி விடுவார்கள். மதப் பண்டிகைகள் வழக்கத்தால் ‘செக்கு சுற்றும்’ நிகழ்வுகளாக மாறி, ‘புனிதப் பெருமை’ நீர்த்துப் போய்விட்டது என்பதே உண்மை.

பண்டிகைக்காக வாங்கும் கணிப்பொறியில் சரசுவதி கதையை காட்சிகளாக சித்தரிக்க முடியாது. அது ‘ஆபாச வீடியோ’வாக கருதப்பட்டு, ‘சைபர் கிரைம்’ பிரிவு கைது செய்து விடும்! (சரசுவதியின் அந்த கதையை விளக்கும் பெரியார் கட்டுரையை வேறு பக்கத்தில் வெளியிட்டிருக் கிறோம்)

கல்வியை வணிகமாக்கி மக்களை ‘சுரண்டி கொழுக்கும்’ ‘கல்வி தந்தைகளும்’ சரசுவதிக்கு பூஜை போடுகிற கூத்துகளும் ‘இப்படி கொள்ளையடிக்கிறார்களே’ என்று கொதிக்கும் பெற்றோர்களும் ‘சரசுவதி’க்கு பூஜை போடுவதையும் நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. என்னே விசித்திர முரண்!

‘சரசுவதி’யை உண்மையான கடவுள் என்றும், அவர் ‘கல்விக் கண்ணை’த் திறந்து விட்டவர் என்றும் உண்மையிலேயே இவர்கள் நம்பவில்லை என்பதைத்தான் இவை உணர்த்துகின்றன!

‘பார்ப்பனியத்தை நிலைநாட்டும் இந்தப் பண்டிகை களைக் கொண்டாடாதீர்கள்’ என்று பெரியார் மக்களை சந்தித்துப் பேசினார்; எழுதினார்.

அதற்காக ‘இந்து மத விரோதி’ என்று பார்ப்பனர்களும் பார்ப்பனிய அடிமைகளும் கூக்குரலிட்டனர்.

தமிழ்நாட்டில் பல இலட்சம் ‘சரசுவதிகள்’ பெண் களுக்கான பெயர்களில் மட்டும் இருந்தார்கள். ஆனால், ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’ என்று “சரசுவதி”களையே தற்குறிகளாக வைத்திருந்த நாடு இது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே ‘பெண்கள்’, ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களுக்கான கல்விக் கதவு திறந்தது.

இதைத் திறந்தது சரசுவதிக்காக நடந்த பூஜைகள் அல்ல; சரசுவதியை கொண்டாடச் சொன்ன பார்ப்பனர்களும் அல்ல; அந்த நம்பிக்கைகளுக்கு எதிராக நடந்த போராட்டங்களும் சமூக நீதிக் களங்களும்தான்! இந்த வரலாற்றைப் புரிந்த மான உணர்வாளர்கள் ‘சரசுவதி’யை கொண்டாட மாட்டார்கள்.

சரசுவதிக்கு விழா கொண்டாடுகிறவர்கள், உண்மையாகவே கல்விக் கண் திறந்த காமராசருக்கு விழா நடத்தலாமே!

அந்த விழாவில் ஒருவருக்கொருவர் அறிவார்ந்த நூல்களை பரிசுகளாக வழங்கலாமே!

கல்விக்கு செலவிட இயலாத ஏழை - ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வரலாமே!

சிந்தியுங்கள்!

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Bharath 2016-10-05 15:05
ராமாயணமும் ராமர் வாழ்ந்ததும் உண்மையல்ல என்றார்கள். அதற்கு பதிலடியை ராமர் பாலம் கொடுத்தது.

குமரீக்கண்டம் வெறும் கற்பனை என்றார்கள். அகழ்வாராய்ச்சிய ில் இந்தியா ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்த்திரேலியாவை ஒட்டிய நிலப்பரப்பு இன்றும் தென்னிந்தியக் கடலுக்கடியில் இருப்பதை ஆராய்ச்சியாளர்க ள் உறுதி செய்தார்கள்.

மகாபாரதமும் பகவான் கிருஷ்ணனும் கட்டுக்கதை என்றனர். கிருஷ்ணர் இருந்திருந்தால் துவாரகா இன்று எங்கே .? என கேள்வி கேட்டனர். மகாபாரத ஆதாரத்தோடும் ஆராய்ச்சியாளர்க ளின் ஆதாரத்தோடும் கிருஷ்ணரால் கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட துவாரகை நகரம் தற்போது கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது.

துவாரகாவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கோவில்களும் அரச அரண்மனைகளும் இன்றும் அப்படியே கடலுக்கடியில் இருப்பதும் கண்டுப்பிடிக்கப ்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

நமது முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு கதைகளும் மற்றும் புராண இதிகாசங்களிலும் வேறெந்த மதத்திலுமில்லாத தத்துவங்களும் ஆதாரத்தோடு இருப்பதை உணர்வோம். என்றும் இந்துவாக வாழ்வோம்.
Report to administrator
0 #2 Bharath 2016-10-05 15:59
நாத்திகம், பகுத்தறிவு
பற்றி கவிஞர் கண்ணதாசன்.

ஈ வே ரா சேலத்தில் நடத்தியது
போல் சென்னையிலும்
ஒரு ஆபாச ஊர்வலம்
நடத்த முயன்ற போது
கண்ணதாசன் அவர்களால்
எழுதப்பட்ட கட்டுரை இது.
இதை தொடர்ந்து
அந்த ஆபாச ஊர்வலம்
கைவிடப்பட்டது.
(கவிஞர் கண்ணதாசனின்
எண்ணங்கள் ஆயிரம்
என்ற நூலிலிருந்து!)

நான் ஒரு இந்து.
இந்து என்பதில் நான்
பெருமைப்படுகிறேன்.

நான் எல்லா மதத்தினரையும்
மனமார நேசிக்கிறேன்;
ஆனால் இந்துவாகவே
வாழ விரும்புகிறேன்.

நான் கடவுளை நம்புகிறேன்;
அவனைக் காட்டியவனைப்
போற்றுகிறேன்;

அந்தக் கடவுளைக் கல்லிலும்,
கருத்திலும் கண்டு
வணங்குகிறேன்.

ஆன்மா இறைவனோடு
ஒன்றிவிடும்போது,
அமைதி இருதயத்தை
ஆட்சி செய்கிறது.

நாணயம், சத்தியம்,
தர்மம் இவற்றின் மீது
நம்பிக்கை பிறக்கிறது.

நேரான வாழ்க்கையை
இருதயம் அவாவுகிறது.
பாதகங்களை, பாவங்களை
கண்டு அஞ்சுகிறது.

குறிப்பாக ஒரு இந்துவுக்குத்
தன் மத அமைப்பின்
மூலம் கிடைக்கும் நிம்மதி,
வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.

கடைசி நாத்திகனையும்,
அது ஆத்திகன் என்றே
அரவணைத்துக் கொள்கிறது.

என்னை திட்டுகிறவன்தான்
அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்;
ஆகவே அவன்தான் முதல் பக்தன்”
என்பது இறைவனின் வாக்கு.

இந்து மதத்தைப்போல்
சகிப்புத்தன்மை வாய்ந்த மதம்
உலகில் வேறு எதுவும் இல்லை .

நீ பிள்ளையாரை உடைக்கலாம்;
பெருமாள் நாமத்தை அழிக்கலாம்;
மதச்சின்னங்களை கேலி செய்யலாம்;
எதைச் செய்தாலும் இந்து
சகித்துக் கொள்கிறான்.

ஏதோ பரம்பரையாகவே
பகுத்தறிவாளனாகப் பிறந்தது
போல் எண்ணிக் கொண்டு,

பாத்திரத்தை நிரப்புவதற்காகவே
சாஸ்திரத்தைக் கேலி செய்யும்
பகுத்தறிவுத் தந்தைகள்
இஸ்லாத்தின் மீதோ,
கிறிஸ்துவத்தின் மீதோ
கை வைக்கட்டும் பார்க்கலாம்.

கடந்த நாற்பது வருசங்களில்
ஒரு நாளாவது அதற்கான
துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!

பாவப்பட்ட இந்து மதத்தை
மட்டுமே தாக்கித் தாக்கி,
அதை நம்புகிற அப்பாவிகளிடம்
‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும்
‘பெரிய ‘ மனிதர்களைத்தான்
நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் பேசுகிற நாத்திக வாதம்,
அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’
என்பதை அறியாமல்,
வாழ்கையையே இழந்து நிற்கும்
பல பேரை நான் அறிவேன்.

பருவ காலத்தில் சருமத்தின்
அழகு மினுமினுப்பதைப் போல்,
ஆரம்ப காலத்தில் இந்த
வாதத்தைக் கேட்டு
ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

நடிகையின் ‘மேக் அப்’ பைக்
கண்டு ஏமாறுகிற சராசரி
மனிதனைப்போல்,
அன்று இந்த வாதத்தைக் கேட்டு
ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

அந்த கவர்ச்சி எனக்கு
குறுகிய காலக் கவர்ச்சியாகவே
இருந்தது இறைவனின் கருணையே!

என்னை அடிமை கொண்ட
கண்ணனும், ராமனும்
இன்று சந்திர மண்டலத்துக்குப்
பயணம் போகும் அமெரிக்காவையே
அடிமைக்கொண்டு,
ஆன்மீக நெறியில் திளைக்க
வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவை விடவா
ஈரோடு பகுத்தறிவில்
முன்னேறிவிட்டது?

வேண்டுமானால்
‘பணத்தறிவில்' முன்னேறிவிட்டது
என்று சொல்லலாம்.

ஆளுங் கட்சியாக
எது வந்தாலும்
ஆதரித்துக் கொண்டு,
தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக்
காட்டிக் கொண்டு,
எது கொடுத்தாலும் வாங்கிக்
கொண்டு வாழ்கையை
சுகமாக நடத்துவதற்கு,
இந்த நாத்திக போலிகள்
போட்டிருக்கும் திரை,
பகுத்தறிவு!

உலகத்தில் நாத்திகம்
பேசியவன் தோற்றதாக
வரலாறு உண்டே தவிர,
வென்றதாக இல்லை.

இதை உலகமெங்கும்
இறைவன் நிரூபித்துக்
கொண்டு வருகிறான்.

அவர்கள் எப்படியோ போகட்டும்.

இந்த சீசனில் வாழ்ந்து
கொண்டிருக்கும் சில மனிதர்கள்
கோவில்களுக்கு முன்னால்
பகுத்தறிவு விளையாட்டு
விளையாடிப் பார்க்கலாம்
என்று கருதுகிறார்கள்.
இதை அனுமதித்தால்,
விளைவு மோசமாக இருக்கும்.

நம்பிக்கை இல்லாதவன்
கோவிலுக்கு போக வேண்டாம்.
நம்புகிறவனை தடுப்பதற்கு
அவன் யார்?

அப்பாவி இந்துக்கள்
பேசாமல் இருக்க இருக்கச்
சமுதாய வியாபாரிகள்
கோவிலுக்கு முன் கடை
வைக்க தொடங்குகிறார்கள்
.
வெள்ளைக்காரனின் கால்களை
கட்டிப்பிடித்துக் கொண்டு
‘போகாதே போகாதே என் கணவா ‘
என்று பாடியவர்களுக்கு
நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?

நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு
தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?

தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு
நாணயம், நேர்மை இவற்றின்
மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?

இந்த நாலரை கோடி (அன்று)
மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து
எடுத்தாலும், நாலாயிரம்
நாத்திகர்களைக் கூட காண முடியாது.

பழைய நாத்திகர்களை
எல்லாம் நான் பழனியிலும்,
திருப்பதியிலும் சந்தித்துக்
கொண்டிருக்கிறேன்!
ஆகவே இந்த காரியங்களுக்கு
யாரும் துணை வர மாட்டார்கள்.
Report to administrator
0 #3 Manikandan 2016-10-06 22:17
இதே விடுதலை இராசேந்திரன் ரம்ஜான் விழா வேண்டாம் அது நம் நாட்டின் விழா அல்ல, அதற்கு பதில் காமராஜர் விழா கொண்டாடுங்கள் என்று சொல்வாரா ? அதற்கு துணிவு இருக்கிறதா ? ஊருக்கு இளிச்சவாயன் ஹிந்து அவன் கொண்டாடும் விழாக்களை எப்படி வேண்டுமானாலும் கொச்சைப்படுத்தல ாம் கேட்பதற்கு யாரும் இல்லை. இதேபோல் இவர்கள் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் இப்படி அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் நடத்து விழாவை கொண்டாட வேண்டாம் என்றால் நடப்பதே வேறாக இருந்து இருக்கும். இது இந்தியா, ஹிந்து மக்கள் சகிப்புதன்மை அதனால் என்ன வேண்டும் பேசலாம்
Report to administrator
0 #4 தாமோதரன் 2017-06-30 11:08
ஈ.வே.ரா பற்றி கண்ணதாசன் எழுதியதாக சொல்வது புரட்டே...
அவர் அவ்வாறு எழுதவில்லை...
Report to administrator

Add comment


Security code
Refresh