பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா (102) 15.11.2023 புதன்கிழமை அன்று விடைபெற்றார். பொது வாழ்க்கை வேறு, தனி வாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்க்காமல் தங்களுடைய வாழ்கையை பொது வாழ்வுக்கு ஒப்படைத்த தலைவர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. அவர்களது வாழ்க்கை தெளிவான நீரோட்டம் போல் அமைந்துள்ள காரணத்தால், அவர்கள் வாழ்நாளிலும் நீண்டகாலம் வாழ்வதற்கு நல் வாய்ப்பாக அமைந்துவிட்டது. தமிழ்நாடு இத்தகைய பண்பாடு மிக்க தலைவர்களைக் கொண்ட மாநிலம் என்பதால் கடந்த காலங்களில் எத்தனை கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் களத்தில் விவாதிக்கப்பட்டாலும் தலைவர்களுக்குள்ளே மதிக்கத்தக்க மாண்பும், மரியாதையும் தமிழ்நாட்டில் பேணிப் பாதுகாக்கப்பட்டது.dvk cadres pay homage to sankarayyaசங்கரய்யாவின் பொதுவாழ்க்கை நுழைவு 1938 ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தொடங்கியது. பின்னர் பொதுவுடமைக் கட்சியில் இணைந்து மாணவர் பருவம் தொட்டே சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டார்.

பொதுவுடமைக் கொள்கையிலும், தொழிலாளர் உரிமையிலும், ஜாதித் தீண்டாமை மறுப்பு கொள்கையிலும் அவர் உறுதியாக வாழ்ந்தார். தனது 95 வயது வரை ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்த அவர், பொதுவுடமைக் கொள்கையும், ஜாதி ஒழிப்பும் இணைந்த இலட்சிய வீரராகத் திகழ்ந்து தமிழ்நாடு அரசின் முதல் தகைசால் தமிழர் விருதைப் பெற்ற பெருமைக்குரிய அவரது இழப்பு என்பது இன்றைய பொது வாழ்க்கைக்கு மிகப்பெரிய இழப்பு தான். தனது குடும்பத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்களையே செய்தார்.

அரசியலுக்கு வரக்கூடிய இலட்சியத் துடிப்புமிக்க இளைஞர்கள் பாடமாக கற்று பொது வாழ்க்கையில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பது தான் சங்கரய்யா போன்ற உண்மையான அப்பழுக்கற்ற கொள்கைவாதிகள் விட்டுச் சென்றிருக்கிற கொள்கை ஆகும். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் சங்கரய்யா அவர்களுக்கு வீர வணக்கம்!

கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு.தனசேகர், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இரவிபாரதி மற்றும் கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்துனர்.

- பெ.மு. செய்தியாளர்

Pin It