kolathoor mani at pallipalayam meetingபள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி

ஈரோடு மண்டல மாநாடு - பள்ளிப்பாளை யத்தில் எழுச்சியுடன் நடந்தது. நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை விளக்கி 33 தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து மண்டல மாநாடு நடைபெற்றது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக 8 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக 25 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், நாமக்கல் மாவட்டம் சார்பாக 10 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்று முடிந்திருந்தன. தெருமுனைக் கூட்டங்களில், மாவட்ட இயக்க முன்னோடிகளும், திரளான தோழர்களும், தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.

பள்ளிபாளையத்தில் மண்டல மாநாடு : ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாடு 09.05.22 திங்கள் மாலை 5 மணிக்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு திடலில் தொடங்கியது. மாநாட்டையொட்டி பள்ளிபாளையம் நகர் முழுவதும் சுவரொட்டிகளும் , பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே கொடிக் கம்பங்கள் கட்டப்பட்டு, அனைத்திலும் நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத் தலைவர்களின் படங்கள் மற்றும் பொன்மொழிகள் வைக்கப்பட்டிருந்தன.

மாநாட்டிற்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். ஈரோடு மாவட்டத் தலைவர் சென்னிமலை செல்வராசு மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னதாக மேட்டுர் டி.கே.ஆர் இசைக்குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் பிஞ்சுகள் மதிவதினி,பூபதி ஆகியோரின் சிலம்பாட்டம் நடைபெற்றது.

ஆர்.எஸ். பாரதி: கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்ட இந்த மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமாகிய ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தின சாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், திருச்செங்கோடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, பள்ளி பாளையம் நகரச் செயலாளர் ரவி, பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலமுருகன், திராவிட முன்னேற்றக் கழக ஈரோடு மாவட்ட இலக்கியஅணி அமைப்பாளர் சிவகிரி இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்.எஸ் பாரதி  பேசும் போது, “திராவிடம் என்று சொன்னால் ஆரியத்திற்கு எதிரானது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் பார்ப்பனியத்திற்கு எதிரானது. அன்றைக்கெல்லாம் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பெரும்பாலும் பார்ப்பனர்கள் தலையில் டர்பன் கட்டிக் கொண்டு வருவார்கள். ஆனால், இன்றைக்கு அனைத்து சமூகத்தவர்களும் வழக்கறிஞர்களாக உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கம்.

அ.தி.மு.க எங்களுக்கு பங்காளிகள். ஆனால், பி.ஜே.பி நமக்கு பகையாளி, எதிரி. நம் ஊரில் நாம் நமக்கு பிடித்தமான உணவைச் சாப்பிடுகிறோம். மாட்டுக்கறி சாப்பிடுகிறோம். ஆனால், வட மாநிலங் களில் பசுமாட்டின் மீது கையை வைத்தாலே அடிக்கிறார்கள். டெல்லியில் நாடாளுமன்றத்தில் குரங்குத் தொல்லை அதிகம். ஆனால், அவற்றை எதுவும் செய்ய முடியாது. அவற்றின் மீது கை வைத்தால், அவை அனுமார் என்று சொல்லி காவிக்காரன் வரிசை கட்டி வருவான். மத்திய அரசு மீண்டும் நம்மீது இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது. அது போன்ற நிலை வரும்போது மீண்டும் 1938இல், 1965இல் தமிழகத்தில் ஏற்பட்ட நிலை ஏற்படும் என்பதை ஒன்றிய அரசுக்கு எச்சரிக்க விரும்பு கிறோம். இன்று பாராளுமன்றத்திலேயே ஆந்திரா, கேரளா, கர்நாடகத்தை சார்ந்த எம்.பி.க்கள் இந்தி வேண்டாம் என்று பேசுகிறார்கள்.

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் வகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் பார்ப்பனர்களாகவும், ஒரு சில மாணவர்களே பார்ப்பனர் அல்லாதவர் களாக இருப்போம். ஆனால், இன்றைக்கு இந்த நிலை மாறியுள்ளது. அன்றைக்கு கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பட்டமளிப்பு வாங்கியவுடன் அதை புகைப்படம் எடுத்து வீட்டில் மாட்டிக் கொள்வோம். ஏனென்றால், அக்காலத்தில் கல்லூரிப்படிப்பு படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவு. ஆனால், இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி காரணமாக லட்சக்கணக்கானோர் கல்லூரிப் படிப்பை முடிக்கின்ற காரணத்தால், அதுபோன்று அதிசயமாக புகைப்படம் எடுப்பதில்லை” என்று கூறினார்.

வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் பேசும்போது, புராண, இதிகாசங்களால் நாம் எவ்வாறு ஏமாற்றப் படுகிறோம் என்பதை விளக்கிப் பேசினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி பேசும் போது இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியில் நமக்கு என்னவெல்லாம் கிடைத்திருக்கிறது என்று பட்டியலிட்டுப் பேசினார்.

திமுக இலக்கிய அணி அமைப்பாளர் சிவகிரி இளஞ்செழியன் பேசும் போது, சுதேசி மாடல் வேண்டும் என்று சொல்லும் பிரதமர் மோடி பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுமே வெளிநாட்டு விலையுயர்ந்த பொருட்கள் தான் என்று சுட்டிக்காட்டினார். முன்னதாக நாமக்கல் மாவட்டத் தி.வி.க. தலைவர் மு.சாமிநாதன் உரையாற்றினார்.

இறுதியாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஏறத்தாழ இரண்டு மணி நேரங்கள், நீதிக்கட்சி குறித்தும், பார்ப்பனியம் குறித்தும், திராவிட இயக்க வரலாறு குறித்தும் நீண்ட விளக்கத்தை அளித்தார். இரவு 10 மணி வரை கூட்டம் சிறிதும் கலையாமல் அனைவரும் ஆர்வமுடன் அமர்ந்திருந்து கருத்து களைக் கேட்டனர். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும், பொது மக்களுக்கும் சுவையான மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. தோழர்கள் மீனாட்சி, நாகராஜ், பிரகாஷ், தம்பிதுரை ஆகியோர் உணவு பரிமாறினர்.

Pin It