பா.ஜ.க.-தெலுங்கு தேச அணிகளாகப் பிரிந்து ‘அவாளு’க்குள் மோதல்

கோயிலில் கடவுளிடம் நெருங்க வும் கடவுளுக்கு அர்ச்சனை செய்யவும் ‘பிராமணர்கள்’ மட்டுமே தகுதியும் உரிமையும் படைத்தவர்கள் என்ற ‘ஜாதியப் பாகுபாடு’ இப்போதும் ‘ஆகம விதிகள்’ என்ற பாதுகாப்புக்குள் நடை முறையில் இருந்து வருகிறது. உச்சநீதி மன்றம் ‘பாகுபாட்டை’ உறுதிப்படுத்தும் ‘ஆகமவிதி’களை அடிப்படை உரிமை என்று வியாக்யானம் செய்திருக்கிறது.

ஆகமவிதிகளின்படி பல கோயில் களில் வழிபாடுகள் நடப்பதில்லை என்றும், அர்ச்சகர்கள் ஆகமவிதி களை முறையாகப் பின்பற்றுவதும் இல்லை என்றும் அடுக்கடுக்கான சான்று களுடன் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி மகாராசன் குழு தனது பரிந்துரையில் பட்டியலிட்ட தோடு, உரிய பயிற்சி பெற்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அரசு தொடங்கியது, 203 பேர் அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள் உரிய பயிற்சிப் பெற்றனர். அவர்கள், ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக்க பார்ப்பனர்கள் மறுத்தனர். உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடினர். தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத் தில் நிறை வேற்றிய ஒருமித்த தீர்மானம்; மகாராசன் குழு பரிந்துரை - அதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பிறப்பித்த ஆணை - அர்ச்சகர் பள்ளியில் பெற்ற பயிற்சி; அனைத்தையும் முடக்கிவிட்டனர்.

அர்ச்சகர்கள் புனிதமானவர்கள் என்றும் அதற்கான ஒழுக்க நெறிகளுடன் வாழக் கூடியவர்கள் என்றும் அதற்கான தகுதி பெற்றவர்கள் ‘பிராமண குலத்தில்’ அதிலும் சில குறிப்பிட்ட பிரிவில் பரம்பரை பரம்பரையாக மட்டும் வரக் கூடியவர்கள் என்றும் பார்ப்பனர்கள் வாதிடுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் நிற்கும் அனைவருமே இந்த அர்ச்சகப் பார்ப் பனர்கள் முன் கை கட்டி நிற்கிறார்கள். கருநாடக முதல்வராகப் போகும் குமார சாமி, அவசர அவசரமாக திருவரங்கம் கோயிலுக்கு ஓடி வருகிறார்.

கடவுள்களிலேயே ‘நட்சத்திரச் செல்வாக்குப்’ பெற்றவன் திருப்பதி ஏழுமலையான். இந்தக் கோயில் நிர்வாகம் பெரும் வணிக நிறுவனமாக செயல்படுகிறது. ‘இந்த திருப்பதி ஏழுமலையான் வர்த்தகக் கம்பெனி’ குறித்த செய்திகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கின்றன.

திருப்பதி ஏழுமலையானுக்கு அர்ச்சக ராகும் உரிமை வைகாசண ஆகமப் பரம்பரையைச் சார்ந்த நான்கு குடும்பங் களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. கொலப் பள்ளி குடும்பம், பைடிப் பள்ளி குடும்பம், பெத்திண்ட்டி குடும்பம், திருப்பதி அம்மா குடும்பம் என்று நான்கு வைணவப் பார்ப்பன குடும்பங்கள் இந்த உரிமைகளை காலங்காலமாக தங்கள் வசம் வைத்துள்ளன (இதைக் கேள்விக் கேட்க எவரும் தயாராக இல்லை; ஆனால் குடும்ப வாரிசு அரசியலை மட்டும் கேள்விக்குட்படுத்துகிறார்கள். எந்த வாரிசு அரசியலும் வாரிசுரிமையும் எதிர்க்கப்பட வேண்டியதுதான்)

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர் களுக்கு கட்டாய ஓய்வு வழங்க முடிவு செய்தது. இதனால் அர்ச்சர்கள் ரமண தீட்சலு, நாராயணா தீட்சலு, நரசிம்மா தீட்சலு ஆகியோருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இதை அர்ச்சகர்கள் ஏற்க மறுத்தனர். அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நிலை வந்தால் அதை ஏற்றே தீர வேண்டும். ஆனால் அர்ச்சகர்கள் ‘ஆண்டவன் அடியார்கள்’ என்பதால் ‘அவாள்’ வைத்தது தான் சட்டம்! பணி ஓய்வுக்கான உத்தரவை வாங்க மறுத்ததால் அர்ச்சகர் ரமண தீட்சலு வீட்டுக்குச் சென்று வீட்டின் கதவில் ‘நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட் டுள்ளீர்கள்’ என்ற உத்தரவை ஒட்டினர். எல்லாம் ‘ஏழுமலையான் உத்தரப்படித் தான் நடக்கிறது’ என்று நம்புவதற்கு அர்ச்சகர்கள் தயாராக இல்லை. ஏழுமலையான் நம்பிக்கை என்பது பக்தி வியாபாரத்துக்கான ‘மூலதனம்’ என்பது அர்ச்சகர்களுக்கு நன்றாகவே தெரியும் அல்லவா?

ஏழுமலையானிடம் முறையிடவும் அவர்கள் தயாராக இல்லை. திருப்பதி தேவஸ்தான முடிவை எதிர்த்து தங்கள் ‘அர்ச்சகர் அதிகாரத்தை’ உறுதிபடுத்திக் கொள்ள பாரதிய ஜனதா கட்சியினரைப் பிடித்தார்கள். பா.ஜ.க.வினரும் ஏழுமலை யானின் முடிவு அப்படி இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்று கூறாமல் களத்தில் இறங்கினர். பதவி நீக்கம் செய்யப்பட்ட பார்ப்பன அர்ச்சகர் களுக்கு சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து உதவினர். திருப்பதி தேவஸ்தானம் எடுத்த கட்டாய ஓய்வு உத்தரவுக்கு எதிராகப் பேட்டி அளித்தனர்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் கட்டுப்பாட்டில் திருப்பதி தேவஸ்தானம் செயல்படுகிறது. உடனே தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் களில் ஒருவரும் ‘ஆந்திரா பிராமின் பரிஷத்’ என்ற பார்ப்பன அமைப்பின் தலைவருமான வெமூரி ஆனந்த் சூர்யா என்பவர் கலகம் செய்யும் அர்ச்சகர்களை பாரதிய ஜனதா கட்சி திரைமறைவில் இயங்குகிறது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையே மேலும் 15 அர்ச்சகர் களுக்கு கட்டாய ஓய்வு அளித்து கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. திருப்பதி கோயில் தலைமை அர்ச்சகர் களாக அதே பரம்பரையைச் சார்ந்த அதாவது கொல்லப்பள்ளி குடும்பத்தைச் சார்ந்த வேணுகோபால் தீட்சலு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சகராகும் உரிமையுள்ள அதே பார்ப்பன குடும்பங் களைச் சார்ந்த மேலும் 3 பேர் நியமிக்கப் பட்டுள்ளதோடு ஒப்பந்த அடிப்படை யில் பணியிலிருந்து 32 பார்ப்பனர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பார்ப்பன குடும்ப பரம்பரைக் குள்ளேயே - இப்போது அர்ச்சகர் பதவிக்கு குடுமிபிடி சண்டைகள் நடக் கின்றன. இவர்கள் ‘ஏழுமலையானைத்’ தூக்கி எறிந்து விட்டு அரசியல் அதிகாரத்திடம் சரணமடைந்துள்ளனர். இப்போது ‘தெலுங்கு தேசம் - பாரதிய ஜனதா’ அணிகளில் அடைக்கலம் புகுந்து கொண்டு தங்கள் சண்டைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பிறகும் பார்ப்பன பரம்பரை ஆதிக்கம் மட்டும் அப்படியே நீடிக்கிறது.

கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடக் கூடாது என்று இங்கே இந்து முன்னணி கட்சிகள் கூக்குரலிடுகின்றன. அர்ச்சகர்கள் அரசியலுக்குள் புகுந்து கொண்டு அதிகாரப் போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்களே, இதற்கு என்ன பதில்? இவையெல்லாம் ஆகம விதிகளில் கூறப்பட்டிருக்கிறதா?

இதற்குப் பிறகும் அர்ச்சகர்கள் புனிதமானவர்கள் என்று கூற இவர்களுக்கு தகுதி இருக்கிறதா?

Pin It