muthukrishnan 350பா.ஜ.க.வின் ஆட்சி டெல்லியில் பல்கலை வளாகங்களில் பார்ப்பன ‘இந்துத்துவா’வை திணித்து வருகிறது. ‘இந்துத்துவா’வை ஏற்க மறுக்கும் மதச் சார்பின்மை சமூகநீதி கருத்துடைய மாணவர்களின் கருத்துரிமைகளை மறுத்து அவர்கள் மீது வன்முறை தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் மதவெறி கொள்கைகளை எதிர்த்ததற்காக பழி வாங்கப்பட்ட ரோகித் வெமுலா என்ற தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மரண தண்டனைக்கு எதிராக கருத்து தெரிவித்து, அப்சல்குரு முறைகேடாக தூக்கிலிடப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் அவரது நினைவு நாள் நிகழ்வை நடத்திய கன்யாகுமார் உள்ளிட்ட 5 மாணவர்கள் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர்.

இப்போது அதே ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ‘பிஎச்.டி.’ ஆய்வு நடத்தும் சேலத்தைச் சார்ந்த தமிழ்நாட்டு மாணவர் முத்துகிருட்டிணன், பார்ப்பன இந்துத்துவ அடக்குமுறையால் மன உளைச்சலுக்கு உள்ளாகி மடிந்துள்ளார். இது தற்கொலையாக இருக்க முடியாது என்று அவரது பெற்றோர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

ரோகித் வெமுலாவுக்கு நீதி கேட்டு நடத்தும் சமூகநீதி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர் முத்துகிருட்டிணன். வேறு எந்த மாணவர் அமைப்பிலும் அவர் சேரவில்லை. கடந்த 2016, ஜன.17ஆம் தேதி ரோகித் வெமுலாவின் தாயாருக்கு தனது முகநூல் வழியாக எழுதிய கடிதத்தில், “நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள்; நாங்கள் கடவுள்-மத நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர்கள்; ஆக்கபூர்வமான வளர்ச்சிக்காக சுயமாக சிந்திப்பவர்கள்; அதற்காகவே எங்களுக்கு தேச விரோதிகள் என்ற பட்டத்தை சூட்டுகிறார்கள்” என்று எழுதினார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக தான் எவ்வளவு அவமானங்களை சந்திக்க வேண்டியிருந்தது என்பதை உருக்கமுடன் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

“நான் ‘ஜே.என்.யூ.’க்கு வருவது இது நான்காவது முறை. 3 முறை இதே பல்கலைக்கழகத்துக்கு எம்.ஏ. நுழைவுத் தேர்வு எழுத வந்தேன். 2 முறை நேர்முகத் தேர்வை சந்தித்தேன். முதல் இரண்டு முறை வந்த போது நான் ஆங்கிலத்தை முறையாகப் பேசவில்லை; ஆனாலும் நான் முயற்சியை விடவில்லை. ஒவ்வொரு முறையும் டெல்லிக்குப் போவதற்கு பணம் வேண்டும் என்பதற்காக கூலி வேலை செய்தேன். சில நண்பர் களிடமும் பண உதவி கேட்டேன். இரயில் பயணத்தில் உணவுக்குக்கூட செலவு செய்ய முடியாமல் பட்டினியாகவே பயணிப்பேன். ஆனாலும் நான் முயற்சியை தளரவிடவில்லை. ஒவ்வொரு முறையும் நான் அந்த வளாகத்துக்குள் செல்லும்போது அங்கே உள்ள நேரு சிலையின் கீழே அமர்ந்து அந்த சிலையிடம் பேசுவேன். “நேருஜி, நான் காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவன். உங்களுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் குடும்பமாக வாக்களிக்கிறோம். ஏன், எனக்கு கல்வி தர மறுக்கிறீர்கள்? நேருஜி, உங்களை மன்றாடி கேட்கிறேன்” என்று அந்த சிலையிடம் கெஞ்சுவேன்.

கடைசியாக நான் நேர்முகப் பேட்டிக்கு சென்ற போது 11 நிமிடம் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அப்போது, ‘நீ பேசுவது சாதாரணமான ஆங்கிலம்’ என்று, ஒரு ‘மேடம்’ கூறினார். இந்த ஆண்டு 8 நிமிடம் என்னிடம் கேள்வி கேட்டார்கள். எல்லா கேள்விக்கும் நன்றாகவே பதில் அளித்தேன். மூன்று பேராசிரியர்கள், “நீ நன்றாக ஆங்கிலம் பேசுகிறாய்” என்று பாராட்டினார்கள். அரசு கல்லூரியில் படித்து விட்டு மத்திய பல்கலையில் நுழைந்த ஒரே மாணவன் நான்தான். சேலம் மாவட்டத்திலிருந்து ‘ஜே.என்.யூ.’வில் படிக்க வந்த முதல் மாணவனும் நான்தான். எப்படியோ தேர்வு செய்யப்பட்டேன். என்னுடைய கண்காணிப்பு பேராசிரியர் பி. ஈஸ்வர் பொனோவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அவர் எனக்குள் ஆராய்ச்சிக்கான உந்துதல் இருப்பதை உணர்ந்தார். எனக்கு ஊக்கம் தந்தார். ஆராய்ச்சிக்கான கருது கோள்களை என்னையே தயாரிக்கச் சொன்னார். 38 முறை மீண்டும் மீண்டும் எழுதினேன். நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள். இது எனக்கு ஒரு வரலாற்றுத்  தருணம். ‘ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை நோக்கிய எனது பயணம்’ என்ற நூலை எழுதவிருக்கிறேன் - என்று ஆங்கிலத்தில் எழுதி, கடைசியாக ‘மகிழ்ச்சி’ - என்ற தமிழ்ச் சொல்லோடு முடித்திருந்தார்.

“எம்.ஃபில் - பிஎச்.டி. தேர்வுக்கு இந்த பல்கலையில் சமமான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. நேர்முகத் தேர்விலும் சமத்துவம் இல்லை. சமத்துவம் - சமஉரிமை மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படு கின்றன” என்று தனது இறுதி பதிவில் குறிப்பிட் டிருக்கிறார்.

டெல்லியில் முனிர்க்கா கார் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு உணவுக்கு வந்தார். உணவுக்குப் பிறகு உறங்கச் செல்வதாகக் கூறி அறைக்குச் சென்றார். அங்கே தூக்கிலிட்டுக் கொண்டதாக கூறுகிறார்கள். கதவைத் திறக்காத நிலையில் நண்பர் காவல்துறைக்கு தகவல் தந்ததாகவும், காவல்துறை அதிகாரி கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படு கிறது.

அவரது தந்தை ஜீவானந்தம், சேலத்தில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறார். “எனது மகன் கோழையல்ல; போராளி. அவன் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கவே மாட்டான். இதில் ஏதோ சதி நடந்திருக்கிறது. விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

சேலம் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து கோவை தனியார் கல்லூரியில் ‘பி.எட்.’ முடித்து அய்தராபாத் பல்கலையில் ‘எம்.ஃபில்’ முடித்து கடந்த ஆண்டு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ‘பிஎச்.டி.’ ஆய்வு மாணவராக சேர்ந்தவர் முத்து கிருட்டிணன்.

Pin It