பிரிட்டனில் குடியேறிய பார்ப்பன உயர் ஜாதி இந்துக்கள், அங்கும் ஜாதியையும் தீண்டாமையையும் பின்பற்றி வரும் அவலம் நீடிக்கிறது. கடந்த மார்ச் 2 ஆம் தேதி இலண்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் களிடையே நிலவும் ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. தெற்காசிய ஒற்றுமைக் குழு ‘ஜாதிய கண்காணிப்பு மய்யம்’ தெற்காசிய புலம் பெயர் சமூகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த கருத்தரங்கினை நடத்தின. பிரிட்டனில் ‘ஜாதிய கண்காணிப்பகம்’ என்ற ஜாதிக்கு எதிரான அமைப்பு அங்கே இப்போதும் ‘இந்து’, ‘சீக்கியர்’ சமூகங்களில் பின்பற்றப்பட்டு வரும் ஜாதி தீண்டாமை பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.
2010ஆம் ஆண்டில் பிரிட்டனில் நிறவெறி பாகுபாடு களுக்கு எதிராக ‘சமத்துவ சட்டம்’ ஒன்றை அந்நாடு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தில் ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான பிரிவையும் இணைக்க வேண்டும் என்று பிரிட் டனில் இந்தியாவிலிருந்து குடியேறிய ஜாதி எதிர்ப்பாளர்கள் - தொடர் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தினர். பிரிட்டிஷ் அரசும், இதற்கு ஒப்புதல் அளித்து, ஜாதி பாகுபாட்டுக்கு எதிரான விதியையும் அதில் இணைத்தது. ஆனால், பிரிட்டனில் வாழும் பார்ப்பனர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த சட்டப் பிரிவை செயல்படுத்த விடாமல் தடுத்து விட்டனர். இந்த சட்டப் பிரிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்ப்பனர் உயர்ஜாதியினர் தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று மிரட்டினார்கள்.
கருத்தரங்கில் பேசிய ‘ஜாதி கண்காணிப்பு மய்ய’த்தைச் சார்ந்த சத்பால் முமன், சி.பி.அய்.எம்.எல். கட்சியைச் சார்ந்த கவிதா கிருஷ்ணன் (இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர்) ஆகி யோர் இந்த உண்மைகளை வெளியிட்டதோடு பிரிட்டனில் நடக்கும் ஜாதிய பாகுபாடுகளையும் சுட்டிக் காட்டினர்.
“பிரிட்டனில் ஒருவருடைய ஜாதி பற்றி பணியிடங் களில், தொழில் நிறுவனங்களில் கேள்விகள் கேட்கப்படு கின்றன. குடிநீர் தனியாக வைக்கப்படுகிறது. கல்வி நிலையங்களில் தலித் - ‘கீழ் ஜாதி’ மாணவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பணியிடங்களில் இவர்களுக்கு பதவி உயர்வுகள் மறுக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்கள்.
இலண்டன் குயின்மேரி பல்கலக்கழகத்தில் சட்டத் துறையைச் சார்ந்த டாக்டர் பிரகாஷ் ஷா என்பவர், ‘அம்பேத்கர் ஒரு முட்டாள்’ என்று பேசியிருக்கிறார். மற்றொரு பேராசிரியரான கவுதம் சென் என்பவர், ‘ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான சட்டத்தை கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை எதிர்ப்போம்’ என்று திமிரோடு பேசியிருக்கிறார்.
கருத்தரங்கில் பேசியவர்கள் இதை சுட்டிக் காட்டிய தோடு கன்யாகுமார் கைது - ரோகித் வெமுலா மரணம் குறித்தும் கண்டித்துப் பேசினர், ‘தேசத் துரோக வழக்குகளை திரும்பப் பெறவேண்டும்’ என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரோகித் வெமுலா படம் அச்சிடப்பட்ட பதாகைகளை மாணவர்கள் கரங்களில் ஏந்தி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஆர்.எஸ்.எஸ்.சுக்கு சில கேள்விகள்
இந்து கோயில்களில் பெண்கள் வழிபாட்டு உரிமைகளைத் தடுக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். அதன் ஆண்டு அறிக்கையில் அறிவித்துள்ள செய்தி, ஏடுகளில் வெளி வந்துள்ளது. மதம், ஆன்மிகம் சார்ந்த பிரச்சினைகளில் ஆண்களும், பெண்களும் சம உரிமை கொண்டவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
வழிபாடுகளில் சம்பிரதாயங்களை மீறக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். ஏற்கெனவே எடுத்திருந்த நிலைப்பாட்டை இப்போது மாற்றிக் கொண்டிருக்கிறது; வரவேற்க வேண்டிய முடிவு. ஆர்.எஸ்.எஸ். இந்த முடிவில் உண்மையாக இருக்குமானால் சில கேள்விகள் இருக்கின்றன.
பெண்களுக்கு சம உரிமை வழங்கக் கூடாது. அவர்கள் ‘தீட்டுக்குரியவர்கள்’ அடிபணிந்து கிடக்க வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்தும் மனுசாஸ்திரம், பகவத்கீதை மற்றும் ஆகமங்களில் வலியுறுத்தப்படும் கருத்துகளும் ஏற்கத் தக்கவை அல்ல என்று ஆர்.எஸ்.எஸ். அறிவிக்குமா? இது முதல் கேள்வி.
ஜாதி - பால் வேறுபாடின்றி அர்ச்சகருக்குரிய கல்வித் தகுதியுள்ள எவரும் அர்ச்சகராகலாம் என்பதை ஆர்.எஸ். எஸ். ஆதரிக்க முன் வருமா? இது இரண்டாவது கேள்வி.
மூன்றாவதாக - ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஆண்கள் மட்டுமே சேர முடியும் என்ற விதியை மாற்றிக் கொள்ள முன் வருவார்களா?
ஆன்மிகத்திலும் மதத்திலும் பெண்களுக்கு சம உரிமை கோரும் ஆர்.எஸ்.எஸ். ‘சுயம்சேவக்கு’களாவதற்கும் பெண்களுக்கு உரிமை வழங்க முன்வர வேண்டுமல்லவா?
வாஸ்து மோசடியை எதிர்த்து நுகர்வோர் கழகத்தில் புகார்
அண்மைக் காலமாக வேகமாகப் பரவி வரும் மூட நம்பிக்கைகளில் ஒன்று ‘வாஸ்து’. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், செல்வந்தர்கள் என்று வசதி படைத்தவர்கள் ‘வாஸ்து’ மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றனர். தெலுங்கானா முதலமைச்சரான சந்திரசேகர ராவ், தனது ஆலோசகராக ‘வாஸ்து’ பண்டிதர் ஒருவரை நியமித் திருக்கிறார். பல தொலைக்காட்சி நிறுவனங்கள், ‘வாஸ்து’ மோசடிக்காரர்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துவது தொலைக்காட்சிகளுக்கான நெறிமுறைகளுக்கே எதிரானது. கருநாடக மாநிலத்தில் ஒரு தொலைக்காட்சியில் ‘சரலா வாஸ்து’ என்ற நிறுவனம் ஒரு விளம்பர நிகழ்ச்சியை நடத்தியது. அதில் பேசிய வாஸ்து ‘குருஜி’ ஒருவர், தனது ‘வாஸ்து’ அறிவுரைப்படி வீடுகளை மாற்றியமைத் தவர்கள் பல்வேறு சிக்கல்கள், பிரச்சினைகளிலிருந்து விடுபட்ட தாகக் கூறினார்.
இதைப் பார்த்து நம்பிய கருநாடகத்தைச் சார்ந்த ஒருவர், இந்த நிறுவனத்தின் ஆலோசனை பெற்று, பல இலட்சம் ரூபாய் செலவு செய்து தனது வீட்டை மாற்றி யமைத்தார்.இந்த ஏமாந்த மனிதரின் பெயர் மகாதேவ் துதிதால். வாஸ்து நிறுவனம், இதற்காக அவரிடம் ரூ.11,600 வசூலித்தது. மாதங்கள் பல ஓடியும், ‘வாஸ்து’ மாற்றங்களால் அவர் பிரச்சினை ஏதும் தீராத நிலையில் இப்போது கருநாடக நுகர்வோர் அமைப்பில் புகார் செய்திருக்கிறார். புகாரை ஏற்றுக் கொண்ட நுகர்வோர் அமைப்பு, வாஸ்து நிறுவனத்துக்கு ‘நோட்டீசு’ அனுப்பியுள்ளது. ‘வாஸ்து’ நிறுவனத்துக்கே இப்போது ‘வாஸ்து’ சரியில்லை போலும்! தங்கள் நிறுவனத்தை வாஸ்து முறைப்படி மாற்றி அமைப்பார்களா என்பது தெரியவில்லை.