இந்த செய்தியை படித்தவுடனேயே நெஞ்சம் பதறிப்போனது. கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் இது நடந்திருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த சரண்யா நர்சிங் படித்தவர். சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் உடன் பணியாற்றுகிற வேறு ஜாதியைச் சேர்ந்த மோகன் என்பவரைக் காதலித்திருக்கிறார். திருமணத்தை சரண்யா சகோதரர் ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரும், அய்ந்து நாட்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

சரண்யாவின் உடன் பிறந்த அண்ணன் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டது போல் நடித்து, தனது வீட்டிற்கு விருந்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். அண்ணனுடைய பாசத்திற்கு மயங்கி தங்கையும் வந்திருக்கிறார். விருந்து முடிந்து ஊருக்கு கிளம்பும் போது, வீட்டின் வாசலிலேயே வைத்து தங்கையையும், தங்கையின் கணவர் மோகனையும், திருமணமான அய்ந்தே நாட்களில் வெட்டி சாய்த்திருக்கிறான் உடன் பிறந்த சகோதரன். இரண்டு பேருமே இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனாலும், இந்து மதத்தின் ‘ஜாதி வெறி’யும் ஆண் ஆதிக்கத் திமிரும் இவர்களின் இரத்தத்தை பலியாக கேட்டிருக்கிறது.

இந்து கடவுளைக் குறை கூறுகிறார்கள்; இந்து கடவுள் புண்படுத்தப்படுகிறது என்று கூச்சல் போடுகிறார்கள். இந்து சமூகத்தை காப்பாற்றுவதற்கு, அந்த இந்து சமூகத்திலே இருக்கிற இரண்டுபேர் வேறு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள மறுப்பதை ஏன் எதிர்க்க மறுக்கிறார்கள்? சனாதனம் பேசும் ஆளுநர்கள், சன்னிதானங்கள், அண்ணாமலைகள் இது போன்ற கொலைகளைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட கூறாதது ஏன் ?

உலகத்திலேயே இப்படி மனிதாபிமானமற்ற மதம் ஜாதியை சுமந்து கொண்டிருக்கும் போது, இந்துக் கடவுள்களை புண்படுத்துகிறார்கள், இந்துக் கடவுள்களை அவமதிக்கிறார்கள் என்று கூப்பாடு போடுகிறவர்கள், இந்து சமூகத்தில் பிறந்த மக்களையே மனிதாபிமானம் இல்லாமல் கொலை செய்கிறார்களே, இதைக் கண்டிக்காமல் எங்கே போனார்கள் ?

இந்து மதம் ஏன் விமர்சிக்கப்படுகிறது என்பதற்கான காரணம் இங்கே தான் இருக்கிறது. அது தன்னோடு சுமந்து நிற்கும் ஜாதி. அந்த ஜாதியினால் கட்டவிழ்த்து விடப்படுகிற ஜாதி வெறி, சமூக உறவுகளைக குலைத்து விடுகிற ஜாதி வெறி இவைகளைக் கண்டிக்காமல், இந்து மத பெருமையையும், புனிதத்தையும், சனாதன தர்மத்தையும், சகிப்புத் தன்மையையும் பேசிக் கொண்டிருக்கிறவர்கள் இதற்கு என்ன பதிலை கூறப் போகிறார்கள் ?

Pin It