காசி நகரில் இருந்த சிவன் கோயிலை இடித்துவிட்டுத்தான் முகலாய மன்னர் அவுரங்கசீப் கியான்வாபி பள்ளிவாசலை கட்டினார். எனவே அந்த பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இந்துத்துவ அமைப்புகளின் வாதம். வாரணாசி என்ற காசியில் கியான்வாபி பள்ளிவாசலும் காசி விஸ்வநாதர் கோவிலும் அருகருகே அமைந்துள்ளன. இரண்டிற்குமான இடைவெளி வெறும் பத்து மீட்டர் மட்டுமே. பெரும்பாலும் ஒரே வாசல் வழியாகவே இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றனர். மத ஒற்றுமையின் அடையாளமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு இடத்தை மத மோதலுக்கான காரணியாக இந்துத்துவ சக்திகள் மாற்றுகின்றனர்.

1936இல் அப்பகுதி இந்துக்களுடன் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து பள்ளிவாசல் இடத்தில் தங்களுக்கான உரிமையைக் கோரி பனாரஸ் நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தாக்கல் செய்தனர். முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை நீதிமன்றம் 1937 இல் உறுதிப்படுத்தியது.

1991 இல் இந்த பள்ளிவாசல் இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சோம்நாத் வியாஸ் என்பவர் வழக்கு தொடுத்தார். 1937 தீர்ப்பிற்கும் 1991 வழிபாட்டு தலங்கள் சட்டத்திற்கும் எதிராக இந்த வழக்கு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி முஸ்லிம்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினர். இருபது வருடங்களுக்குப் பிறகு சிவில் நீதிமன்ற விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

 உயர்நீதிமன்றத்தின் தடை இருக்கும் நிலையில் ஏப்ரல் 2021இல் சிவில் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் அகழ்வாராய்ச்சியை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை உயர்நீதிமன்றம் பின்னர் நிறுத்தி வைத்தது. 'இந்த வழக்கில் பாரம்பரிய முறையில் இருந்து விலகி கீழ் நீதிமன்றம் தானாகவே இந்த வழக்கை விசாரிக்க முன்வந்தது வருத்தத்திற்குரியது' என்று உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் படியா தனது உத்தரவில் குறிப்பிட்டார். (செப்டம்பர் 9, 2021)

ஆகஸ்டு 2021 ல் அய்ந்து பெண்கள் இணைந்து வாரணாசி விசாரணை நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர். கியான்வாபி பள்ளிவாசலில் ஷிரிங்கார் கௌரி (பார்வதி), விநாயகர், ஹனுமன் மற்றும் கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத சிலைகள் இருப்பதால் அங்கு வழிபாடு செய்ய தங்களுக்கு அனுமதியளிக்க வெண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த அய்ந்து பெண்களும் இந்துத்துவ குடும்பங்களை சார்ந்தவர்கள்.

வழக்கறிஞர் அஜய் குமார் சர்மா என்பவரை ஆலோசகராக நியமித்த நீதிமன்றம் கோயில் வளாகத்தில் வீடியோ ஆய்வு செய்ய உத்தரவிட்டது. ஆனால் எல்லை மீறிச் சென்றவர்கள் பள்ளிவாசல் பகுதிக்கும் ஆய்வுக்கும் சென்றதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 வழக்கறிஞர் அஜய் குமார் சர்மா ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் முஸ்லிம்கள் தரப்பில் வழக்கு நடத்தி வரும் அன்ஜூமன் இஸ்லாமிய மஸ்ஜித் கமிட்டி குற்றம்சாட்டி அவரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. ஆனால், முஸ்லிம்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ரவி குமார் திவாகர், கூடுதல் ஆலோசகர்களாக விஷ்ணுகுமார் சிங் மற்றும் அஜய் சிங் இருவரையும் நியமித்து உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கை விசாரித்து வருவதால் தனது உயிர் குறித்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிர் குறித்தான அச்சம் இருப்பதாக நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கில் இப்படி தேவையற்ற கருத்துக்களை தெரிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மறுதினம் ஆய்விற்கு சென்ற குழு பள்ளிவாசல் பகுதிகளை வீடியோ ஆய்வு மேற்கொண்டது. அப்போது உளு செய்யும் இடத்தில் உள்ள ஒரு நீரூற்றை, சிவலிங்கம் என்று கூறி வேகமாக அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டனர். ஆய்வு கமிட்டியில் இந்து தரப்பில் சென்ற சோகன்லால் ஆர்யா என்பவர்தான் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி, தெளிவான ஆதாரங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் வெளியில் தெரிவித்தார். நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னர், அது நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் பொதுவெளியில் கருத்து தெரிவித்த இவர் மீது நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆய்வின் முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் உத்தரவு. மேலும் இந்த ஆய்வு அறிவியல் பூர்வமாகவோ அறிவுப்பூர்வமாகவோ மேற்கொள்ளப்பட்ட ஆய்வல்ல. பள்ளிவாசல் மற்றும் கோயில் பகுதிகளை வீடியோ பதிவு செய்துவர வேண்டும் என்பதுதான் நீதிமன்ற உத்தரவு.

அறிக்கையை பெற்றுக் கொண்ட நீதிமன்றமும் அதனை எவ்வித ஆய்விற்கும் உட்படுத்தாமல், ‘உளு’ செய்யும் பகுதியை உடனடியாக சீல் வைக்க வேண்டும். இருபது பேர் மட்டுமே தொழுகைக்கு வர வேண்டும் என்று அநீதியான தீர்ப்பை வழங்கியது. முஸ்லிம்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு எந்த அனுமதியும் வழங்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே பள்ளிவாசலில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து அங்கும் தங்களுக்கு வழிபாடு செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்றும் அய்ந்து பெண்களும் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It