பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை

‘விடியல் பதிப்பகம்’, மலிவுப் பதிப்பாக வெளியிட்ட பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட நூல் ‘பெரியார் - இன்றும், என்றும்’. 1000 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை மலிவுப் பதிப்பாக ரூ.300க்கு ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டது. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் இந்த நூலை வாங்கினார்கள். இந்த நூலில் பெரியார் கட்டுரைகளை பார்வையற்றோர் அறியும் நோக்கத்தில் ஒலி வடிவில் பதிவேற்றப்பட்டு ஒலிப் புத்தகமாக (குறுவட்டு) கடந்த ஜூலை 14ஆம் தேதி பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை சார்பில் வெளியிடப் பட்டது. 86 மணி நேரம் பெரியார் எழுத்துகள் குரலாக ஒலிக்கிறது. பெண்கள் பலரும் தாமாக ஆர்வத்துடன் முன் வந்து பெரியார் எழுத்துகளை தங்கள் குரலில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது. சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி அரங்கில் காலை 10 மணியளவில் நடந்த இந்த நிகழ்வில் பார்வையற்ற தோழர்களோடு 300 கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர். கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொண்டனர். ‘ஒலிப்பதிவு குறுவட்டு’வுக்கு ‘ஒலிப் புத்தகம்’ என்று பெயர் சூட்டியிருந்தனர்.

periyar audio book release

ஒலிப் புத்தகத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டு சிறப்புரை யாற்றினார். கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் அரங்க மல்லிகா வரவேற்புரை யாற்றினார். பேராசிரியர் முனைவர் முருகானந்தன், ‘பார்வையற்றோர் இணைய நூலகம்’ நிறுவனர் ரவிக்குமார், மாநிலக் கல்லூரி இணை பேராசிரியர் வே. சிவராமன், புதுச்சேரி பிரஞ்சு மய்ய ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

பார்வையற்றோருக்கான வாசிப்பாளராக தன்னார்வத் தொண்டாற்றி வரும் கோமதி, நூல் உருவாக்கம், அதற்காக எடுக்கப்பட்ட தீவிர முயற்சிகளை விளக்கியும், வாசிப்பாளர்களையும் இந்த அரும்பணியில் பங்கேற்ற செயல்பாட்டாளர் களையும் அறிமுகம் செய்து உரையாற்றினார். பெரியாரின் எழுத்துகளை முதன்முதலாகப் படித்த போது இத்தகைய புரட்சிக் கருத்துகளையெல்லாம் பேசிய ஒரு தலைவர் இருந்திருக்கிறாரே என்று வியந்தும் அதிர்ந்தும் போனேன். இந்த சிந்தனைகளை விரிவாகக் கொண்டு செல்ல வில்லையே என்ற கவலை உணர்வை சக தோழர்களிடம் பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக பெண் விடுதலை, சமுதாயம், ஜாதி, மதம், கடவுள் குறித்து தெரிவித்த கருத்துகள் எனக்கு புதிய வெளிச்சத்தைத் தந்தன. இந்தக் கருத்துகள் ஏற்படுத்திய தாக்கம்தான் எங்கள் குழுவை ஆர்வத்துடன் இப்பணிகளில் ஒப்படைக்கச் செய்து இயங்க வைத்தது. இனி அடுத்து இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் பெரியாரின் கருத்துகளை குரல் பதிவாக்கிடும் முயற்சிகளைத் தொடங்க நாங்கள் முடிவெடுத்து விட்டோம்” என்ற பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் மாணவி பவ்யா. அவரும் வாசிப்பாளர்களில் ஒருவராகப் பங்கேற்று முழுமையுடன் செயல்பட்டவர். இந்தப் பணிக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கிய அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் முனைவர் ப. பூபதி நன்றி கூறினார். இந்த ஒலிப் புத்தகம் வடிவம் பெற முழு பங்காற்றிய பூபதி தனது உரையில், பெரியார் சிந்தனைகள், காலத்தின் தேவையாகியிருப்பதை சுட்டிக் காட்டினார்.

நூலை வெளியிட்டு உரையாற்றிய விடுதலை இராசேந்திரன், “இந்த மகத்தான பணியில் ஈடுபட்ட குழுவினரின் பணி மிகவும் போற்றத்தக்கது. பெரியார் எழுத்து - பேச்சுகள் அச்சு வடிவில் தடையின்றி யார் வேண்டுமானாலும் வெளியிட நீதிமன்றம் வழியாக உரிமையைப் பெற்றுத் தந்த அமைப்பைச் சார்ந்தவன் என்பதால் இந்த நிகழ்வில் பங்கேற்பதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன். பெரியார் எழுத்தும் பேச்சும் அச்சு வடிவம் கடந்து ஒலிவடிவத்திற்கு வந்திருப்பது நாங்கள் பெரியார் எழுத்துகள் வெளியீட்டுக்கான தடைகளை நீக்குவதற்கு எடுத்த முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியின் நீட்சி” என்று குறிப்பிட்டார். “அதிலும் குறிப்பாக பெரியார் எழுத்துகளின் வாசிப்பாளர்களாக பெருமளவில் பெண்களே தங்கள் குரலைத் தர முன் வந்திருப்பது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த சிறப்பு” என்று கூறினார்.

“பெரியார் - இன்றும் என்றும்” தொகுப்பில் முதல் கட்டுரையில் முதல் வரியே ஒரு மனிதனுக்கு சுயமரியாதை தான் எல்லாவற்றையும்விட மேலானது என்பதற்கு பெரியார் தந்திருக்கிற ஆழமான விளக்கத்தோடு தொடங்குவதைச் சுட்டிக்காட்டினார். பெரியார் கூறுகிறார்:

“ ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று பெரியோர்கள் சொன்னதாகச் சொல்வார்கள். நான் அதை ஒப்புக் கொள்ளாததற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ‘கொடுமை; கொடுமை மனிதராகப் பிறப்பது மிகக் கொடுமை’ என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்.... மனிதனைத் தவிர மற்ற ஜீவகோடிகள் (உயிரினங்கள்) எவ்வளவோ சந்தோஷத்துடனும் அடிமை உணர்வில்லாம லும் சுதந்திரமாய் வாழ்வதை நாம் பார்க்கிறோம். அவைகளில் சிலவற்றிற்குக் கஷ்டமும், அன்னியரால் கஷ்டப்படத்தக்க நிலைமையும் ஏற்பட்டு இருந்தாலும், மனிதனைப்போல் உணர்ந்து துக்கிக்கிற (அனுபவிக்கக்கூடிய) சக்தியாகிய கொடுமை அவற்றிற்கு இல்லை. ஏனெனில் பகுத்தறிவு என்கிற ஒரு உபத்திரவம் கொடுக்கத்தக்க குணம், அவைகளுக்கு இல்லாததால்தான். உதாரணமாக குதிரைகளை ஜட்கா வண்டியில் பூட்டி, ஒரு முரட்டு நூல் கயிற்றை மடித்துக் கொண்டு ஓட ஓட, அதன் மிக மெல்லியதும் அதிக உபத்திரவம் கொடுக்கத்தக்க இடமுமாகிய மர்ம ஸ்தானத்தில் அடித்தாலும்... அவைகளுக்கு கஷ்டம் மாத்திரம் தோன்றுமேயல்லாது, அதற்குத்தான் பிறப்புரிமை இழந்து இப்படி கஷ்டம் அனுபவிக்கிறோமே என்கிற உணர்ச்சி இருக்காது. தவிர அதற்கு மான அவமானம் என்ற உணர்ச்சி இல்லை. இதோடு நாளைக்கு வேண்டுமே என்கிற கவலையும் இல்லை. எவ்வளவு கிடைத்தாலும் போதும் என்கிற ஆசை என்னும் அடிமைத்தன்மையும் உடைத்தாயிருப்பதால், மனிதத் தன்மையானது பிறவியிலேயே மிகுதியும் இழிவானதும் அடிமைத்தன்மை கொண்டதுமாய் இருக்கிறது என்பது நான் கொண்ட கருத்து.

இப்படிப்பட்ட மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான-அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் ‘மனிதன்’, ‘மானுடன்’ என்ற பதங்கள் (சொற்கள்) மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமை உடையது மானம்தான். அத்தன்மையாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் சுயமரியாதையாகக் கொண் டிருக்கிறான்” என்ற ஆழமான பெரியார் தந்த சுயமரியாதைக்கான விளக்கத்தை எடுத்துக் காட்டினார். (‘குடிஅரசு’ 9.10.27)

தொடர்ந்து பெண்கள் மீது வரலாற்று ரீதியாக மதம் திணித்த கொடுமைகள், பெரியார் - பெண்ணுரிமை என்ற எல்லையைக் கடந்து பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த சிந்தனைகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

குரல் கொடுத்தவர்கள்

பவ்யா குமரேசன், ரவிக்குமார், எப்சி கிளாரா, கௌரி ஷைலேந்திரா, விஜிபாரதி, பிரியங்கா சேகரன், சார்வி, இன்பா சுப்ரமணியம், உமா ஜெயச்சந்திரன், லக்ஷ்மி, ஜெமீமா, சத்தியாதேவி, கோமதி குப்புசாமி

Pin It