அமெரிக்காவில் கறுப்பர்கள், ஆசியர்கள், தென் அமெரிக்காவிலிருந்து குடிபெயர்ந்த ‘ஹிஸ்பெனிக்ஸ்’ எனும் பிரிவினருக்கு தனியார் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் ‘பாகுபாடு’ காட்டாமல், பணி உறுதியாக்கம் (Affirmative Action) செய்யும் சட்டம் நீண்டகாலமாக அமுலில் இருந்து வருகிறது. இப்போது நிறவெறியுடன் நடக்கும் ‘டிரம்ப்’ ஆட்சி வெள்ளை நிறவெறியர்களின் அழுத்தத்தை ஏற்று, ‘பாகுபாடு ஒழிப்பு’ சட்டத்தைக் கைவிடும் முடிவுக்கு வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சி தரும் இந்த அறிவிப்பை டிரம்ப் நிர்வாகம் கடந்த ஜூலை 3ஆம் தேதி அறிவித்துள்ளது. மைனாரிட்டி மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் ‘உறுதியாக்கும் செயல்பாடு’ என்ற பெயரில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கும் சட்டம் 1967ஆம் ஆண்டு முதல் அங்கே அமுலில் இருந்து வருகிறது.

கருப்பின மக்களுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்டு வந்த அநீதியை அகற்றுவதற்காக 1967இல் நியமிக்கப்பட்ட ‘ஜெர்னர் ஆணையம்’ அமெரிக்கா ஒரு தேசமாக உருவெடுக்க வேண்டுமானால் இந்த ‘பாகுபாடுகள்’ ஒழிக்கப்பட்டு, அவர்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதனடிப்படையில் ‘சம வேலை வாய்ப்பு ஆணையம்’ ஒன்றும் உருவாக்கப்பட்டது. ஊடகத் துறைகளில் கறுப்பர்களை உயர் பதவிகளில் அமர்த்து வதற்காகவும் வெள்ளையர் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ‘செய்தி பத்திரிகை ஆசிரியர்களுக்கான அமெரிக்க சங்கம்’ ஒன்றும் உருவாக்கப்பட்டது.

ஒபாமா அதிபராக இருந்தபோது இப்பிரச்சினையில் தீவிரமாக கவலை எடுத்து செயல்பட்டார். குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இன அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை முழுமையாகத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மாணவர் சேர்க்கைக்கான ஏழு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன. ஒபாமா நிர்வாகம் உருவாக்கிய ஏழு நெறிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்றும் கருப்பர்களுக்காக தனி பிரதிநிதித்துவம் வேண்டாம் என்றும் டிரம்ப் நிர்வாகம் கல்வி நிறுவனங்களுக்கு இப்போது சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

“ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வது ஜாதியை வளர்ப்பதாகும்” என்று இங்கே பார்ப்பனர்களும் இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களும் முன் வைக்கும் அதே குதர்க்கவாதத்தையே டிரம்ப் நிர்வாகமும் ‘இனபேதத்தை வளர்க்க வேண்டாம்’ என்று சுற்றறிக்கையில் குறிப்பிட் டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க சட்டப் புத்தகத்தில் உள்ள கறுப்பர்களுக்கு உரிமை வழங்கும் பிரிவுகளை புறக்கணித்து விடுமாறு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்று நீதித் துறையின் அதிகாரி டெவின் ஓ. மெல்லே (Devin O’ Malley) கூறியுள்ளார்.

ஆனால், கல்வித் துறைச் செயலாளர் பெஸ்டி டீ வோஸ் (Besty De Vos)) இதற்கு மாறுபட்ட கருத்தைத் தெரிவித் துள்ளார். “உச்சநீதிமன்றம் ‘உறுதியாக்கும் செயல்பாடு’ (Positive affirmation) என்ற கொள்கையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று தீர்ப்பளித் திருக்கிறது. உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள எழுத்து பூர்வமான தீர்ப்புதான் கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள். இதை சீர்குலைக்கக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.

உலகத்தின் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான ‘ஹார்வார்டு’ பல்கலைக்கழகம் அமெரிக்க குடியுரிமை பெற்ற ஆசியர்களை அனுமதிக்காமல் திட்டமிட்டு புறக்கணித்து வருவதை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் அமெரிக்காவின் கல்வி மற்றும் நீதித் துறையில் உள்ள வெள்ளை நிறவெறி அதிகாரிகள் ‘டிரம்ப்’ நிர்வாகத்துக்கு அழுத்தம் தந்து, இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்ப வைத்துள்ளனர். ‘பார்ப்பனிய இந்துத்துவ’க் கொள்கையை ஆதரிப்பதாகக் கூறிய வெள்ளை நிற வெறி கொண்ட டிரம்ப்பும் இதற்கு உடன்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனநாயகவாதிகளும் சிவில் உரிமை அமைப்புகளும் டிரம்ப் நிர்வாகத்தின் இனவெறிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்காவில் மாநில அரசுகளே இது குறித்து முடிவெடுக்க வேண்டுமே தவிர, ‘டிரம்ப்’ நிர்வாகம் உத்தரவிடக் கூடாது என்பது இவர்களின் வாதம்.

இந்தியாவில் ‘நீட்’ தேர்வை மாநிலங்கள் மீது நடுவண் ஆட்சி திணிப்பது போன்றே அமெரிக்காவிலும் ‘டிரம்ப்’ நிர்வாகம் ‘மைனாரிட்டி’ மக்களுக்கு எதிராக முடிவுகளைத் திணித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்திய பார்ப்பனியமும் ஒரே திசையில்தான் பயணிக்கின்றன. மனுவாதமும் இனவெறியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தானே!

Pin It