தமிழ்நாடு நவீனமடைவதற்கும் அறிவியல் மனப்பான்மையோடு வளருவதற்கும் மிக முக்கியக் காரணம் பெரியார். அறிவியலை உள்வாங்கிக் கொண்டு, நவீனங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டுமென்ற சிந்தனை பெரியாரிடம் இருந்தது. திராவிட இயக்கம் ஆட்சியில் அமர்ந்தபோது அந்த சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கிடைத்தது. அதனால்தான் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னே நிற்கிறது தமிழ்நாடு.

வடக்கே உள்ள கான்பூர் ஐஐடி-யிலும் தெற்கே இருக்கிற கிண்டி பொறியியல் கல்லூரியிலும்தான் இந்தியாவில் முதன்முதலாக கணினிப் பயன்பாடு தொடங்கியது. ஐபிஎம் 1620 வகை கணினி அது. 1965ஆம் ஆண்டில் கிண்டி பொறியியல் கல்லூரிக்குச் சென்ற பெரியாரிடம் இப்படியொரு கருவி வந்திருக்கிறது எனச் சொல்கிறார்கள். உடனே அதைப் பார்க்க வேண்டுமென்றார் பெரியார். வயதோ 86. படியேற முடியாமல் இருந்த நிலையில், நாற்காலியில் அமரவைத்து பெரியாரை மாடிக்கு தூக்கிச் சென்று கணினியைக் காட்டினர். அது எப்படிச் செயல்படுகிறது என ஒவ்வொன்றாக விளக்கம் கேட்டுக்கொண்டதுடன், அதன் செயல்பாடுகளை சோதித்தும் பார்த்து வியந்தார் பெரியார். கம்ப்யூட்டருக்கு தமிழில் என்ன பெயர் என பெரியார் கேட்க, அங்கு எவருக்குமே தெரியவில்லை. பேராசிரியர்களே கம்ப்யூட்டரைப் பார்த்திராத அந்த காலத்தில், தமிழில் எப்படி அதற்குள் பெயர் சூட்டியிருப்பார்கள்? அவர்களின் மவுனத்தைப் புரிந்துகொண்ட பெரியார், “நீ கண்டுபிடித்து இருந்தால்தானே பெயர் வைத்திருப்பாய்?” என கூறினாராம்.

இவ்வளவு பின் தங்கியிருந்த தமிழ்நாடு இன்றைக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெங்களூருவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக சென்னையை உருவாக்கியிருக்கிறது. நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னிலை வகிக்கிறது. ஸ்டார்ட் அப் துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. தொழில்நுட்பத் துறைக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான திறமைமிக்க பட்டாதாரிகளை ஆண்டுதோறும் அனுப்பிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் சாத்தியமானதற்கு மிக முக்கியக் காரணம் கல்வி வளர்ச்சியோடு சேர்த்து அறிவியல் வளர்ச்சியையும் கணக்கில்கொண்டு தீட்டப்பட்ட திட்டங்கள்.

எதிர்வரும் உலகை கணினியும் இணையமும்தான் ஆளப்போகிறது என்ற கணிப்புகள் தெரியத் தொடங்கிய 1990-களில் மாநில அரசுக்கு என முதன்முதலாக தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வெளியிட்டார் கலைஞர். வெளியிட்ட ஆண்டு 1997. தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தனி அமைச்சரையும் நியமித்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பூங்காவை நிறுவினார். இந்த அடித்தளம் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சிக்கு பாதை அமைத்ததுடன், பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டியது.

அதன்பிறகு கால் நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட இச்சூழலில் வீட்டுக்கு வீடு ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சி, மடிக்கணினி பயன்பாடு சாதாரணமாகிவிட்டது. தொழில்நுட்பத்துறை வேறொரு புதிய உலகுக்குள் நம்மை இழுத்துச் சென்றிருக்கிறது. 1965-இல் பெரியாரை கம்ப்யூட்டர் வியக்கவைத்தது என்றால், 2024-இல் நம்மை வியக்க வைத்துக் கொண்டிருப்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI). மனிதனுக்கும் இயந்திரங்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால், மனிதன் சிந்தித்துச் செயல்படுவான். இயந்திரங்கள் மனிதர்கள் ஏற்படுத்திய செயல்முறைகளின்படி (program) இயங்கும். ஆனால் இயந்திரங்களும் மனிதர்களைப் போல சிந்தித்துச் செயல்படத் தொடங்கினால் எப்படி இருக்கும்? அந்த முயற்சிதான் செயற்கை நுண்ணறிவு.

எதிர்வரும் உலகின் வேலைவாய்ப்புகளில், அன்றாட வேலைகளில், மனித வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். 2035ஆம் ஆண்டுக்குள் உலகப் பொருளாதாரத்தில் 15.7 டிரில்லியன் டாலர் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பங்களிக்கும் என்றும் சில ஆய்வுகள் சொல்கின்றன. அதில் அமெரிக்காவும் சீனாவும் மட்டுமே 70 விழுக்காடு சந்தை மதிப்பைக் கொண்டிருக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

அத்தகைய பெரும் பொருளாதார வாய்ப்புகளையும், நவீன மாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடிய AI தொழில்நுட்பத்தில் தமிழ்நாடும் சிறந்து விளங்க வேண்டுமென்றால், பள்ளிகளில் கணினியுடன் சேர்த்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். அத்தகைய முயற்சியை இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கியிருக்கிறது நம்முடைய “திராவிட மாடல்” அரசு.

உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் உடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை TEALS (தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றல் ஆதரவு) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம், சாட் ஜி.பி.டி தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுப்பது இத்திட்டத்தின் நோக்கம். முதற்கட்டமாக 3 மாவட்டங்களில் 14 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், படிப்படியாக 100 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. HTML, C++, Python, கேம் டெவலப்மென்ட் மற்றும் AI ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுப் பள்ளி மாணவர்களும் நவீன தொழில்நுட்பங்களை எளிமையாக கற்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதனை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்வதுடன், பாடத்திட்டங்களிலும் இணைக்கப்பட வேண்டும். “அடுத்த 2 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன” என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருக்கிறார். தொழில்நுட்ப ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி தமிழ்நாட்டு மாணவர்கள் நகருவதற்கான வாய்ப்பாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கப் போகிற துறையில் நம்முடைய இருப்பைத் தக்கவைக்கவும் இம்முயற்சிகள் அவசியமானவை. இன்னும் அதிகரிக்க வேண்டிய தேவையுடையவை.

- விடுதலை இராசேந்திரன்

Pin It