கீற்றில் தேட...

இரயில்வே துறையை தனியார்மய மாக்குவதற்கு முன்னோட்டமாக இரயில் நிலையங்களை தனியார்மய மாக்குவது, ஒன்றிய அரசின் திட்டங்க ளில் ஒன்றாகும். அதாவது, விமான நிலையங் களை 50 ஆண்டுகளுக்கு அதானிக்கு குத்தகை விட்டதுபோல, இந்தியாவின் முக்கியமான இரயில் நிலையங்களை தனியார் முதலாளிகளுக்கு குத்தகைக்கு விடும் வேலையாகும். நாட்டிலேயே முதன்முதலாக போபால் அருகில் உள்ள ஹபீப்கஞ்ச் நகர இரயில் நிலையம் இவ்வாறு தனியாருக்கு கொடுக்கப்பட்டது. இந்த இரயில் நிலையத்தை சர்வதேச தரத்துக்கு மாற்ற பன்சால் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 50 ரயில் நிலையங்கள் அரசு - தனியார் கூட்டுத் திட்டத்தின் (PPP) அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இரயில் நிலையங்களை குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்கள், அந்த இரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், இரயில் நிலையங்களிலேயே ஷாப்பிங் மால், உணவகங்கள், பார்க்கிங், சோலார் எனர்ஜி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவார்கள்; இதற்கு செலவிட்ட தொகையை, இரயில் பயணிகளிடமிருந்தே (நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நடப்பது போல) வசூலித்துக் கொள்வார்கள் என்பதால், 2017ஆம் ஆண்டு இதற்கான வேலைகள் துவங்கிய போதே எதிர்ப்பு எழுந்தது. இது தனியார் மயத்திற்கான திட்டம் என்றும், இரயில் பயணிகளிடம் சட்டப்பூர்வமாக கொள்ளை அடிப்பதற்கான ஏற்பாடு என்றும் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. தற்போது, எதிர்பார்த்தது போலவே, இரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணமாக பயணிகளின் டிக்கெட்டில் ரூ.10 முதல் ரூ. 75 வரை கூடுதலாக வசூலிக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மேம்படுத்தப்பட்ட இரயில் நிலையங்களில் மட்டும்தான் என்றில்லாமல், எதிர் காலத்தில் மேம்படுத்தப்படும் பட்டியலில் உள்ள இரயில் நிலையங்களிலும் பயணிகளிடமும் இந்தக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்துக்கு இரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் (Station Development Fee - SDF) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்படி, ஏசி வகுப்பில் பயணிப்போர் இரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணமாக ரூ. 50ஆம், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிப்போர் ரூ. 25ஆம், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிப்போர் ரூ. 10ஆம் கூடுதல் கட்டண மாக செலுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட இரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு மட்டுமன்றி, மேம் படுத்தப்பட்ட இரயில் நிலையத்தில் இறங்குவதற்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

அதாவது, 2 நிலையங்களுக்கும் தலா 50 ரூபாய் மேம்பாட்டு நிதி என்ற வகையில் இவர்கள் 100 ரூபாய் அனாமத்தாக செலுத்த வேண்டும். ஆனால், ஏனோ இவர்கள் மீது சற்று இரக்கம் காட்டியுள்ள இரயில்வே நிர்வாகம், 2 மடங்கிற்குப் பதில் ஒன்றரை மடங்கு (75 ரூபாய்) செலுத்தினால் மட்டும் போதும் என்று சலுகை வழங்கியுள்ளது. ஒரு பயணி புறப்படும் இரயில் நிலையம் மேம்படுத்தப்படும் பட்டியலில் இல்லாமல், இறங்கும் இரயில் நிலையம் மேம்படுத்தப்படும் பட்டியலில் இருக்கும் பட்சத்தில் அவர்களும் கட்டணம் செலுத்தியாக வேண்டும். சரி இத்துடன் முடிந்து விட்டதா, என்றால் இல்லை... மேம்படுத்தப்பட்ட இரயில் நிலையங்களில் நடைமேடைகளை பயன்படுத்துவதற்கும் தனியாக ஏற்கெனவே உள்ள கட்டணத்துடன் கூடுதலாக ரூ,10 கட்டணம் செலுத்த வேண்டுமென இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- விடுதலை இராசேந்திரன்