'காம்பட் கம்யூனலிசம்' ஆசிரியரும், மதவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் போராளியுமான தோழர் தீஸ்டா செதல்வாட் டிச.11 அன்று 'மதச்சார்பற்றோர் மாமன்றம்' சார்பில் சென்னையில் ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி.

நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் எல்லா ஜனநாயக நாடுகளிலும் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் நமது நீதித்துறைக்கு அதை விட்டுவிட மனசில்லை. ஆனால் அது நிச்சயம் ரத்து செய்யப்படவேண்டியது. அது ஒரு தொன்மையான சட்டம். தவறான தீர்ப்புகளை விமர்சனம் செய்வதிலிருந்து அது நம்மைத் தடுக்கிறது. மக்களின் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எந்த அமைப்பும் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. நீதித்துறை மட்டும் இதற்கு ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்?

நாம் அரசியல்வாதிகளை திட்டுகிறோம். அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மக்களை சந்திக்கச் செல்கின்றனர். ஆனால், ஒரு காவல்துறை ஊழியரை ஒருமுறை நியமனம் செய்துவிட்டால், ஒரு நீதிபதியை ஒருமுறை நியமனம் செய்துவிட்டால், பிறகு அவர் மக்களின் விமர்சனத்துக்குள் எப்போதுமே வருவதில்லை. அவருடைய செயல்பாடுகளில் குறை காண்கின்ற வாய்ப்பு மக்களுக்கு எப்போதுமே கிடைப்பதில்லை. ஆனால் ஒரு நாகரீகமான நேர்மையான தணிக்கை அவசியம். யார் மீதும் சேறு வாரி இறைப்பது நமது நோக்கமல்ல. எந்த அமைப்பையும் குறைத்து மதிப்பிடுவது நமது எண்ணமல்ல.

ஆனால், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பன்வரி தேவி வழக்கில் நடந்தது போன்ற ஒரு தீர்ப்பு கொடுக்கப் படுமானால், உங்களுக்கு அது பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன். பன்வரி தேவி ஒரு துணிச்சலான பெண். ராஜஸ்தானில் பால்ய விவாகத்துக்கு எதிராகப் போராடிய ஒரு தலித் அவர். அவர் ஒரு சதின். சதின் என்றால் சமூக ஊழியர் என்று பொருள். உயர் ஜாதி ஆண்களால் அவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அப்படி குரல் எழுப்பக்கூடாது என்பதற்காக அது ஒரு பாடமாம். ஆனால் அவர் உயர்நீதிமன்றத்துக்கு சென்றார். ஆனால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் என்ன சொன்னது? ஒரு உயர் ஜாதி ஆண் ஒரு தாழ்ந்த ஜாதிப் பெண்ணை கற்பழிப்பது சாத்தியமில்லை என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சொன்னது!

தலித் பெண்கள் இயக்கத்தில் இருக்கும் எனது நண்பர்கள் ஒரு முழக்கத்தை சொல்வார்கள். பகலில் தீண்டத்தகாதவர், இரவில் தீண்டத் தகுபவர். இது சிரிப்பதற்கல்ல. நமது கலாச்சாரத்தின் துயரக் கதை இது. ஒரு நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பு வழங்குவாரென்றால், அவரை விமர்சிக்க நமக்கு உரிமை இல்லையா? அதற்கு எதிராக போராட நமக்கு உரிமை இல்லையா?

நமது உளவுத்துறை பற்றியும் நான் கொஞ்சம் பேசிவிட விரும்புகிறேன். ஐ.பி.மற்றும் ரா. இவை எந்த பாராளுமன்றத்தின் விமர்சனப்பார்வைக்கும் படாமல் இயங்கும் அமைப்புகள். எவ்வளவு நிதி அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது, எப்படி அந்தப் பணத்தை அவர்கள் செலவு செய்கிறார்கள், அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், எந்த இயக்கங்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள் — எதுவுமே ஆராயப்படுவதில்லை. எனவே காவல்துறை, நீதித்துறைக்கு அடுத்தபடியாக, உளவுத்துறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், அதற்காக போராட வேண்டும் என்று மக்கள் தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய உளவுத்துறையில் (அய்.பி.) ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம்களுக்கு மேல் பார்க்க முடியாது. ஒரு பொதுக் கூட்டத்தில் இந்த கருத்தை நான் பிரதம மந்திரிக்கு முன்னால் வைத்தேன். இந்திய உளவுத்துறையில் வலது சாரியை நோக்கிய சித்தாந்த சாய்வு இருக்கிறது. நான் இதை மிகுந்த பொறுப்புணர்வவோடுதான் சொல்கிறேன். ஏனெனில் நான் இது பற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளேன்.

நான்டே வழக்கை நான் புலனாய்வு செய்து கொண்டிருந்த நேரத்தில், பூனாவில் பணி புரிந்து கொண்டிருந்த ஒரு மத்திய புலனாய்வு அதிகாரி ஒரு பஜ்ரங்தள் உறுப் பினருக்கு ஆயுதம் தயாரிக்கும் முறையையும், பயன்படுத்துவதையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். எனவே புலனாய்வுத்துறையும் மக்கள் ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் உட்பட்டதாக வரவேண்டிய அவசியமுள்ளது.

முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரிகள் எழுதிய மூன்று புத்தகங்களை இங்குள்ள அறிஞர் பெருமக்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன். நான் அவற்றைப் படித்துள்ளேன். அவர்கள் சொல்வதையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவருமே ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறார்கள. இந்திய உளவுத்துறை தொழில்ரீதியான திறமைகளில் குறையுள்ளதாக உள்ளது என்பது தான் அது. இந்திய அரசியல் சாசனத்தின்படி உளவுத்துறை சீர்திருத்தத்துக்கும் விமர்சனத்துக்கும் உட்பட்டதுதான். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க, ஒரு முன்னாள் அரசு ஆர்எஸ்எஸ் உதவியை நாடலாமா என்று கூட யோசித்தது என்று ஒரு புத்தகம் கூறுகிறது. இந்தப் போக்கு எவ்வளவு அபாயகரமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான சவால்களைப் பற்றிப் பேசும்போது ஒரு சில ஆலோசனைகளை நான் வழங்க ஆசைப்படுகிறேன். அதில் முக்கியமானது கல்வி. 13 ஆண்டுகள் பள்ளி வாழ்க்கையில் நம் குழந்தைகளுக்கு நாம் தரும் பாடப்புத்தகங்கள், சொல்லித்தரும் வரலாறு, உருவாக்கும் சமூக உணர்வு இதெல்லாம் முக்கியம். தமிழ்நாட்டில் சரியாகத்தான் இருக்கும். ஆனால் குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பாடப்புத்தகங்களில் ஜாதியை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிகக்குறைந்த இடமே அளிக்கப்பட்டுள்ளது. பெயருக்காக. உடல் உழைப்புக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை. சொல்லப்போனால் உடல் உழைப்பை மரியாதைக் குறைவாகப் பார்க்கவே குழந்தைகள் கற்பிக்கப்படுகிறார்கள். மிகவும் ஜாதியம் சார்ந்த அணுகுமுறை. அதிலும் குஜராத்தில் மிகமிக மோசம். பொருளாதார ரீதியாக ஜெர்மனியையும் இத்தாலியையும் சக்தி மிகுந்த நாடுகளாக மாற்றியதற்காக இட்லரும் முசோலினியும் புகழப்படுகிறார்கள். மோடி இன்று குஜராத்தை மாற்றிக் கொண்டிருப்பதைப்போல.

எனவே என்னவிதமான வரலாற்றை நாம் நம் குழந்தைகளுக்குப் போதிக்கிறோம்? நாட்டில் இருந்த ஒவ்வொரு ஜாதியும் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வரலாற்றைச் சொல்கிறோமா? இல்லை. விடுதலைப் போராட்டத்தில் பெண்களுக்கு உறுதியான பங்கிருந்தது என்பதைச் சொல்கிறோமா? இன்னும்கூட அவர்கள் போராடிக்கெண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறோமா? இல்லை. காலனிய சக்திகள் நம் நாட்டுக்குள் வருவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே, கிபி 58ல், மலபார் கடல் பகுதி வழியாக, தூய தாமஸ் என்பவர் மூலமாக, கிறிஸ்தவம் இந்தியாவுக்குள் வந்தது என்று சொல்கிறோமா? இஸ்லாம் வணிகர்கள் மூலமாக வந்தது என்று சொல்கிறோமா? சிந்துப் பகுதி படையெடுக்கப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, 110 ஆண்டுகளுக்கு முன்பே, பெருமாள் சேர்மேன் என்ற அரசன் முஸ்லிமாகிய இஸ்லாத்தைப் பரப்பினான் என்ற வரலாற்றைச் சொல்கிறோமா?

இப்படியெல்லாம் சொல்லித்தராததனால், ஜாதியம் சார்ந்த வரலாறுதான் அவர்கள் மனதில் வேர் விடுகிறது. விடுதலை, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்காகவே பெருமளவில் ஒடுக்கப்பட்ட சாதி இந்தியர்கள் கிறிஸ்தவர் களாகவும், முஸ்லிம்களாகவும் மாறினர் என்ற வரலாற்றைச் சொல்கிறோமா? கேரளாவில் கொத்தடிமைச் சட்டம் ரத்தான போதுதான் அதிக அளவிலான மதமாற்றங்கள் நிகழ்ந்தன என்பதைச் சொல்கிறோமா? ஏனெனில் அடிமைகளாக இருந்த மக்கள் விடுதலை அடைந்தபோது இஸ்லாத்திலோ, கிறிஸ்தவத்திலோ தங்கள் சுயமரியாதையும் கண்ணியமும் காக்கப்படும் என்று நம்பினார்கள்.

தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களுடைய பிரச்சனை இன்று ஒரு அரசியல் பிரச்சனை. இன்றைய காலகட்டம் உரிமை மறுக்கப்படும் காலகட்டமாக உள்ளது. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் எப்படி இந்து மதம் தென் கிழக்கு ஆசியாவில் பரவியது என்றும் நாம் சொல்லித் தருவதில்லை.

டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கரின் உரைகள் பற்றி நம் குழந்தைகளுக்கு நாம் எதுவும் சொல்லித்தருவதில்லை. ஜோதிபா புலே ஏன் பேசினார் என்று விளக்குவதில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே பெரியார் கற்பிக்கப்படுவதில்லை. நமது கல்வி அமைப்பில் உள்ள உள்ளடக்கத்தில் பெரும் மாற்றம் தேவைப்படுகிறது. நாம் சொல்லிக்கொடுக்கும் வரலாற்றில், சமூக சேவையில் எல்லாம் பெண்களையும், சமுதாயத்தையும் நாம் எப்படி பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்? இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் ஒவ்வொரு சமுதாயமும் செய்த பங்களிப்பு என்ன? இதையெல்லாம் மனதில் கொண்டு நமது கல்வி உள்ளடக்கத்தை நாம் சீரமைக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில் கல்விக்கூடங்கள் மூலமாக நமக்கு இருக்கும் பெரிய சவாலும் ஆபத்தும் ஆர்எஸ்எஸ்ஸின் சிஷ{ மந்திர், சரஸ்வதி சிஷ} மந்திர் மற்றும் விஎச்பியின் ஏகல் வித்யாலயா ஆகியவையாகும். குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஒரிஸ்ஸா போன்ற மத்திய இந்தியாவில், அந்த பழங்குடி இனத்தவருக்கு எந்த அரசும் கல்வி கொடுக்காத சூழ்நிலையில், விசுவ இந்து பரிசத் ஒரு இந்து மதக் கல்வியை புகட்டும் ஏகல் வித்யாலயாவைத் திறந்து வைக்குமானால், உங்கள் குழந்தைகள் அந்த பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள் என்று அந்த பழங்குடியினரிடம் சொல்லும் தகுதியோ உரிமையோ நமக்கு எப்படி வரும்? இன்றைக்கு உள்ள பெரிய பிரச்சனை அதுதான்.

நமது நாட்டை ஆக்கிரமிக்கும் சவால்களை எதிர்கொள்ள விரும்பினால், ரூல் ஆப் லா' தொடர்பான இந்த பிரச்சனைகள், மற்றும் கல்விக்கான சமூக மாற்றம் குறித்தான பிரச்சனை — இவையெல்லாம் தேர்தலின்போது நமது அரசியல் கட்சிகளின் பிரச்சனையாக மாற வேண்டும். தீவிரவாதம் நாட்டின் எந்த மூலையில், எந்த சமூகத்தில் இருந்து வந்தாலும், எல்லை தாண்டி வந்தாலும், நாம் அதை எதிர்க்கிறோம். அதுபோல, வெறுப்பை உமிழும், வெறுப்பைத் தூண்டும், வெறுப்பை வளர்க்கும் எல்லாப் பேச்சையும் நாம் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்.

வி.பி.சிங்கை இழிவுபடுத்தும்
'புதிய ஜனநாயக'த்திற்கு பதில் அடுத்த இதழில்

Pin It