‘உயர்ஜாதி ஏழைகள்’ என்ற பிரிவுக்கு 10 சதவித இடஒதுக்கீடு செய்த பார்ப்பன பா.ஜ.க. ஆட்சி இப்போது ‘உயர்ஜாதி’ ஏழைகளுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் வயது வரம்பு சலுகைகளை வழங்க ஆலோசித்து வருகிறதாம். உரிய விண்ணப்பதாரர்கள் இல்லாத பிரிவினருக்குத்தான் வயது வரம்பு சலுகை தேவைப்படுகிறது. ஆனால் ஆதிக்கவாதிகளாக பார்ப்பன உயர் ஜாதியினருக்கு வயது வரம்பு சலுகைகளை வழங்கி ‘கட்ஆப் மதிப்பெண்’ பட்டியல் இனப் பிரிவினரை விட குறைந்து இருந்தாலும், கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க கதவு திறந்து விடப் போகிறார்கள்.
அதேபோல் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் மத்திய அரசுப் பதவிகளில் பாதியளவுகூட இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பெற்றோர் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்கள் மாத வருமானத்தை கிரிமிலேயர் வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறார்களாம். அரசு ஊழியர், பொதுத் துறை ஊழியர் மாத வருமானம், விவசாய வருமானம் 1993ஆம் ஆண்டிலிருந்து ‘கிரிமிலேயர்’ பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இனி தாய், தந்தை மத்திய அரசுப் பதவியில் இருந்தால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் 27 சதவித இடஒதுக்கீட்டில் உரிமை கோர முடியாத நிலை வந்துவிடும்.
ஏற்கனவே பாதியளவுகூட இடஒதுக்கீடு பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஏன் மீண்டும் பிற்படுத்தப்பட்டோரை ‘வடிகட்டி’ அவர்களின் வாய்ப்புகளைத் தடை செய்ய வேண்டும்? மோடி பிற்படுத்தப்பட்டவர் என்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர் ஆட்சி - ஏன் பார்ப்பனியத்துக்கு பல்லக்கு தூக்குகிறது? ஏன் - பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளை தடுத்து மீண்டும் குலத் தொழிலுக்கு திருப்பி விடுகிறது?
பிற்படுத்தப்பட்டோரும் இவர்கள் பார்வையில் ‘இந்து’க்கள்தானே? அவர்களை ஏன் வஞ்சிக்க வேண்டும்? ‘பார்ப்பன - உயர்ஜாதி’ மட்டும் தான் ‘இந்து’, ஏனைய ‘இந்து’ அவர்களுக்கு அடங்கிப் போக வேண்டிய அடிமை இந்து என்று பார்ப்பன மனுதர்ம சிந்தனைதான் பா.ஜ.க. பேசம் ‘இந்து’ அரசியலா?