370ஆவது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறி வந்தது மோடி ஆட்சி. பார்ப்பன தேசிய ஊடகங்களும் மக்களின் எதிர்ப்பை மூடி மறைத்து வந்தன. பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், காஷ்மீரில் மக்களின் போராட்டத்தை ஒளி பரப்பின. அலைபேசி, இணைய தொடர்புகள் முடக்கப்பட்டன. பிறகு இயல்பு நிலை திரும்பி விட்டதாகக் கூறி தொடர்புகள் தரப்பட்ட நிலையில், மீண்டும் ஒரே நாளில் மீண்டும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன.

இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இராணுவம், துணை இராணுவப் பிரிவுகளைச் சார்ந்த 9.5 இலட்சம் படையினர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளதாக ‘டெக்கான் கிரானிக்கல்’ ஏட்டின் ஸ்ரீநகர் செய்தியாளர் எழுதுகிறார். அங்குலம் அங்குலமாக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் கடைகள் மூடப்பட்டு விட்டன என்றும் அந்த செய்தியாளர் கூறுகிறார். ஏராளமான மருந்து மாத்திரைகளோடு 100 மருத்துவர்கள் இராணுவத்துக்கு மருத்துவ உதவி வழங்க விமானம் வழியாகக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் அந்த செய்தி கூறுகிறது. 

370 ஆவது பிரிவு நீக்கம் செய்த பிறகு 30,000 கூடுதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ‘போர்க் காலம்’ போன்ற சூழல் நிலவுகிறது என்றும் ‘டெக்கான் கிரானிக்கல்’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளத்தாக்கு முழுதும் கல்லெறி சம்பவங்கள் நிகழ்வதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, ‘இந்து’ நாளேடுகள் தவிர்க்கவியலாத நிலையில் செய்தி வெளியிட்டுள்ளன.