தமிழ்நாட்டின் தனித்துவமான சமூகநீதி தத்துவத்துக்கு சாவுமணி அடித்துவிட்டது நடுவண் பா.ஜ.க. ஆட்சி. ஓராண்டுக்கு தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு தருவதாகக் கூறி முன் வந்து, தமிழக அரசிடம் அவசரச் சட்டத்தை தயாரிக்கச் சொல்லி விட்டு, உச்சநீதிமன்றத்தில் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விதி விலக்கு தர முடியாது என்று கூறும் துணிச்சல்  மோடியின் பா.ஜ.க. ஆட்சிக்கு எப்படி வந்தது? தமிழர்கள் அவ்வளவு ஏமாளிகள் என்று கருதி விட்டார்கள்.

மாநில அரசு பாடத் திட்டத்தில் படித்த 85 சதவீத மாணவர்களில் மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெற்றவர்கள் 2224 பேர். 15 சதவீதம் பேர் மட்டுமே படித்த சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் தேர்வு பெற்றிருப்பவர்கள் 1310 பேர். நீட் தேர்வு நடத்தாமல் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெற்ற சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் எண்ணிக்கை 30 மட்டும்தான். சுமார் 45 சதவீதம் இப்போது அதிகரித்திருக்கிறது. இந்த அநீதியை முறைப்படுத்துவதற்கு மாநில அரசு பிறப்பித்த 85 சதவீத இடங்களை மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கே தரவேண்டும் என்ற அரசாணையையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துவிட்டன. தரவரிசைப் பட்டியலில் முதல்

20 இடங்களில் 15 இடங்கள் சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டப் பிரிவினருக்குப்  போய் விட்டது.

இப்போது ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வருகின்றன. தமிழகத்தைச் சாராத பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள் என்ற ((Nativity) பொய்யான சான்றிதழ்களைத் தந்து தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்திருக்கிறார்கள். கேரளா, ஆந்திரா, புதுவை மாநிலங்களைச் சார்ந்த 300 மாணவர்கள் வரை போலி வாழ்விட சான்றிதழ் தந்து இடங்களைப் பிடித்திருக்கிறார்கள் என்று மாநகர காவல்துறை ஆணையருக்கு புகார் வந்துள்ளது. இதுவரை 10 போலி சான்றிதழ்களை அடையாளம் கண்டு உள்ளதாகவும் இது குறித்து சான்றிதழ் வழங்கும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்து வருவதாகவும் கலந்தாய்வை நடத்தும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவரே தனது வாழ்விடச் சான்று, ஜாதிச் சான்று என்ற இரண்டிலுமே மோசடி செய்திருக்கிறார் என்று புகார்கள் வந்திருப்பது அதிர்ச்சி தருகிறது.

தமிழ்நாட்டில் வேறு மாநிலத்துக்காரர்கள் 5 ஆண்டுகளுக்கு கூடுதலாக தங்கியிருந்ததாக சான்றிதழ் தந்தால் தமிழ்நாட்டுக்காரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவவார்கள் என்ற விதி முறையை மோசடிக்குப் பயன்படுத்தியிருக் கிறார்கள்.

இவை மட்டுமா?

இந்தியாவிலேயே மருத்துவ உயர் சிறப்புப் படிப்புக்கான இடங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம். 192 இடங்கள் உள்ளன. பல மாநிலங்களில் இந்த எண்ணிக்கை ஒற்றைப் படை வரிசையில்தான் உள்ளது. இந்த இடங்களை அகில இந்திய அளவிலேயே நிரப்பப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சி பகிரங்கப் போட்டிக்கு உட்படுத்தியதால் வடநாட்டுக்காரர்கள் தமிழகத்தின் இடங்களைப் பிடித்துவிட்டார்கள். உதாரணமாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை களுக்கான உயர் சிறப்புப் படிப்பில் (DM - Neonatology)) 8 இடங்களில் 6 இடங்களையும், கல்லீரல் மருத்துவத்துக்கான ((Hepatology) இரண்டு இடங்களையும் மூட்டுவாத சிகிச்சைக்கான (Rheumatology)) நான்கு இடங்களில் இரண்டு இடங்களையும், இரைப்பை குடல் நோய் மருத்துவத்துக்கான (Medical Gastro Enterology) 14 இடங்களில் 12 இடங்களையும் வேறு மாநிலத்தவர்கள் அபகரித்துக் கொண்டு விட்டார்கள்.

இது தவிர நீட் தேர்வை எழுதுவதற்கு வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் எழுதலாமாம். அது மட்டுமல்ல வெளிநாட்டுக் குடி மக்களே நீட் எழுத கதவு திறந்து விடப்பட்டிருக்கிறது. மருத்துவப் படிப்பு மட்டுமின்றிதமிழகத்தின் மருத்துவ சேவையையும்  சீர்குலைத்துவிட்டார்கள்.

இந்தியாவின் தலைநகரம் டெல்லியாக இருக்கலாம்; ஆனால் சமூகநீதியின் தலைநகர் தமிழ்நாடு என்று பெருமையுடன் கூறினார் முன்னாள் பிரதமர் மாமனிதர் வி.பி.சிங். அந்தத் தலைநகரம் டெல்லி பார்ப்பனிய படையெடுப்பால் தகர்ந்து போய் நிற்கிறது.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

Pin It