தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் தலைவராக வாழ்ந்த அந்தணப்பேட்டை கோபாலசாமி கஸ்தூரிரங்கன் புதன்கிழமை (10.8.2016) மாலை முடிவெய்தினார். 60-களில் இன்றைய நாகப்பட்டினமான அன்றைய கீழத்தஞ்சையில் ஏ.ஜி.கே. அசலான மக்கள் தலைவராக இருந்தார். முதலில் திராவிடர் கழகம், பின்பு இடதுசாரி இயக்கம் என இரண்டின் சாரத்தையும் தன்னுள் ஏந்திய அவர், வெற்றிகரமான மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தார்.

அன்றைய கீழத் தஞ்சை முதலாளிகளுக்கு, நிலவுடைமையாளர்களுக்கு அவர் ஒரு துர்சொப்பனம். ஒடுக்கப்பட்ட மக்களின் கூலி உயர்வுக்காகவும், சுயமரியாதைக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் நிறைய. ஒருமுறை, ஏ.ஜி.கே. தாக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்து மக்கள் கொந்தளித்தனர். அவரைத் தாக்கியதாகச் சொல்லப்பட்ட முதலாளியின் வீட்டுக்குள் புகுந்து வீட்டை உடைத்து நொறுக்கினர். அந்த வீட்டிலிருந்த மூன்று ஆண்கள் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதிப்பு இல்லை. சம்பவம் நிகழ்ந்தபோது, ஏ.ஜி.கே. மருத்துவமனையில் இருந்தார். காயமடைந்திருந்த அவர் சாகட்டும் என போலீஸார் காத்திருக்க, அதற்குள் அந்தணப்பேட்டையில் அந்தக் கொலைச் சம்பவம் நடந்திருந்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஏ.ஜி.கே. சேர்க்கப்பட்டார். அவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

சீர்காழி கிளை நீதிமன்றத்தில் அவர் சரணடைந்த சம்பவம், புனைகதைகளை மிஞ்சக்கூடிய பரபரப்புமிக்கது. கிளைச் சிறைக்கு அவரை அழைத்துச் சென்ற போலீஸார்அவரை அவமானப்படுத்த வேண்டும் என்றே காலிலும் கையிலும் விலங்கு மாட்டித் தெருவில் நடத்திச் சென்றனர். இதையும் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்ட அவர், வழியெங்கும் நின்ற மக்களிடம் பேசத் தொடங்கினார். மதியம் ஒரு மணிக்குக் கிளம்பிய ‘ஊர்வலம்’ மாலை 4.30-க்கு கிளைச் சிறையை அடைந்தது. இத்தனைக்கும் நீதிமன்றத்துக்கும் கிளைச் சிறைக்கும் இடையிலான தூரம் வெறும் ஒன்றேகால் கி.மீ. மாத்திரமே. சிறையின் இரும்புக் கம்பிகளால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

தமிழகச் சிறை வரலாற்றிலேயே சுதந்திர இந்தியாவில் சிறைப்பட்டோர் நல உரிமைச் சங்கம் என்ற இரகசிய அமைப்பை நிறுவிய அவர், தியாகு, லெனின் போன்றோரின் துணையுடன் கட்டுக்கோப்பு மிக்க சிறைப் போராட்டத்தை திருச்சி மத்திய சிறையில் தொடங்கினார். தமிழகச் சிறை வரலாற்றில் அதற்கு முன்னும் பின்னும் அப்படியான ஒரு சிறைப் போராட்டம் இல்லை என தியாகு குறிப்பிடுவார். அந்தப் போராட்டத்தையே 1983இல் மற்ற சிறைகளுக்கு தியாகு போன்றோர் விரிவாக எடுத்துச் சென்றனர். ஏ.ஜி.கே.வை எப்படியாவது தூக்குமரத்தில் ஏற்றிவிட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் மிக ஆர்வமாக இருக்க, 1973இன் இறுதிவாக்கில் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, அவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். அவரது தண்டனைக் குறைப்புக்காக பெரியார், ஈ.வி.கே.சம்பத் போன்றவர்கள் குரல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1984இல் முழு ஆயுள் தண்டனையும் கழிந்து விடுதலையானார் ஏ.ஜி.கே. 52 வயதுக்குப் பின்புதான் திருமணம், குழந்தைகள் என்று எளிய சந்தோஷங்கள் நிகழ்ந்தன. பெரியாரியத்தையும், மார்க்ஸியத்தையும் மிகச் சரியான புள்ளியில் இணைத்தவர் அவர். சமரசமற்ற எளிய வாழ்க்கை அவருடையது. இது போன்ற அரிதான மனிதர்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் எந்த ஏற்பாடும் நம்மிடம் கிடையாது. அவரைப் பற்றி நம்மிடமிருக்கும் சிறந்த சித்திரங்கள்

தியாகுவின் எழுத்து வழி உருவாகும் சித்திரமும், ப.சு.கவுதமன் அவரிடமே உரையாடித் தொகுத்த ‘ஏ.ஜி.கஸ்தூரிரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ எனும் புத்தகமும்தான். அவரது எதிரிகளால்கூடப் பறிக்க முடியாத உயிரை, அவரது 84ஆவது வயதில் இயற்கை பறித்துக் கொண்டது.

நன்றி: தி இந்துதமிழ் நாளேடு

குறிப்பு: ‘ஏ.ஜி.கே.’ இறுதி நிகழ்வில் ஆகஸ்டு 11ஆம்நாள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்கள் பங்கேற்று இறுதிவணக்கம் செலுத்தினர்.

Pin It