அரசு சாட்சிகள் தடம் மாறுவது ஏன்? காஞ்சி சங்கராச்சாரி மீதான வழக்கு விசாரணையில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சங்கராச்சாரிக்கு எதிராக அரசு தரப்பில் கொண்டு வரப்பட்ட சாட்சிகளே சங்கராச்சாரிக்கு ஆதரவாக திரும்பி விட்டன. சங்கராச்சாரியை துணிவுடன் கைதுசெய்தது - ஜெயலலிதா என்ற பார்ப்பனர்தான். சங்கர் ராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரிக்கு தொடர்புண்டு என்று செய்திகள் வரத் தொடங்கிய நிலையில் சங்கராச்சாரியை கைது செய்யக் கோரி காஞ்சிபுரத்தில் தி.மு.க.தான் முதலில் போராட்டம் நடத்தியது. ஜெயலலிதா உண்மையிலே துணிவுடன் சங்கராச்சாரியை கைது செய்து விட்டார். தமிழினமே ஜெயலலிதாவின் இந்த துணிவைப் பாராட்டியது.

பாரதிய ஜனதா கட்சி - ஜெயலலிதா ஆட்சியை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டபோது, பெரியார் திராவிடர் கழகம் - அதற்கு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி, இப்பிரச்சினையில் ஜெயலலிதா ஆட்சி நடவடிக்கைகளை உறுதியோடு ஆதரிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. கலைஞர் கருணாநிதியால் இப்படிப்பட்ட துணிவான முடிவை எடுத்திருக்கவே முடியாது என்பதே - அப்போது தமிழின உணர்வாளர்களின் பொதுவான கருத்தாக இருந்தது. ஜெயலலிதா - சங்கராச்சாரியை கைது செய்யவே மாட்டார் என்று உறுதியாக நம்பிய கலைஞர் கருணாநிதி - சங்கராச்சாரியை கைது செய்யக் கோரி போராடினார்.

ஆனால் ஜெயலலிதா கைது செய்தவுடன், வழக்கம் போல் குரலை மாற்றிக் கொண்டு விட்டார். “இந்தக் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று அப்போதும் துரோகக் கருத்தை முன் வைத்தார். ஜெயலலிதா ஆட்சிப் போய் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த வழக்கின் நிலையும் மாறிவிட்டது. அரசு சாட்சிகள் தடம்புரளத் தொடங்கிவிட்டன. பார்ப்பன வட்டாரங்கள் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன. சங்கராச்சாரி வழக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்திய தி.க. தலைவர் கி.வீரமணி, அரசு சாட்சிகள் தடம் புரளுவதை சுட்டிக்காட்டி, எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. - இதுதான் “பெரியார் ஆட்சி”யா?

Pin It