புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் - மனித உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் அருந்ததிராய் - அண்மைக்காலம் வரை விடுதலைப் புலிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று எழுதியவர் - இப்போது நியாயத்தை உணர்ந்து குமுறுகிறார்; ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையிலிருந்து:

“ஏன் இந்த மவுனம்? ‘இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயல்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை’ என்று இன்னொரு நேர்காணலில் இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா கூறியிருக்கிறார்.

சமுதாயத்தை ‘அச்சத்தில் உறைய வைக்கிற’ கொலைக் கும்பல்கள், ‘வெள்ளை வேன் கடத்தல்கள்’ பற்றி எல்லாம் சமரவீரா தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உள்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர். படுகொலை செய்யப்படுகின்றனர். பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் இலங்கை அரசு பயன்படுத்துவதாக பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாற்றியுள்ளது.

மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு பொருளுதவியும், ஆய்த உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாது.

Pin It