newzealand PMபசிபிக் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு - நியுசிலாந்து. 40 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அந்நாட்டின் பிரதமர் பதவிக்கு நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் ஆர்டன் ஜெசிந்தா என்ற 40 வயது  பெண், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகில் கொரானாவை கட்டுப்படுத்தியதில் முதல் இடத்தில் நியுசிலாந்து நாட்டைக் கொண்டு வந்த பெருமைக் குரியவர் ஜெசிந்தா.

கொரானாவைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அடுத்த 102 நாட்களில் பொதுத் தேர்தலை அறிவித்தார். 1996ஆம் ஆண்டு முதல் நியுசிலாந்தில் ‘விகிதாச்சார வாக்களிப்பு முறை’ பின்பற்றப் பட்டு வருகிறது. அது முதல் தனிப் பெரும் பான்மை பெற்று எந்தக் கட்சியும் ஆட்சி அமைத்ததில்லை. முதன்முதலாக ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று சாதனை படைத்துள்ளது.

வெற்றி குறித்து அவர் முன் வைத்துள்ள கருத்து ஆழ்ந்த சிந்தனைக் குரியது. “நாம் வாழும் இன்றைய உலகம் அணிகளாகப் பிரிந்து நிற்கிறது. அந்தப் போக்கு மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மாற்றுக் கருத்துகளைப் பரிசீலிக்கும் ஆற்றல், சிந்தனைத் திறனை மேலும் மேலும் இழந்து கொண்டே இருக்கிறோம். நியுசிலாந்து மக்களாகிய நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்பதை இந்தத் தேர்தல் வழியாகக் காட்டியிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.  

“என்னை ஆதரித்த புதிய வாக்காளர் களுக்காக மட்டும் நான் ஆட்சி செய்யப் போவது இல்லை; அனைத்து நியுசிலாந்து மக்களுக்கானதாக எனது ஆட்சி இருக்கும்” என்று தன்னை வாழ்த்த வந்த தனது ஆதரவாளர்களுக்கு அவர் உறுதி தந்திருக்கிறார். இத்தகைய அணுகுமுறையை இந்திய அரசியலில் பார்க்க முடியுமா?

குடும்பத் தலைவியாகவும் பிரதமராகவும் பொறுப்பை சுமக்கும் ஒரு முன் மாதிரிப் பெண்ணாகவும் - அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நேர் எதிரானவர் - அவரை உலகம் பார்க்கிறது. உலகிலேயே பிரதமராக இருக்கும் போது குழந்தை பெற்றுக் கொண்ட இரண்டாவது பெண்.

கடந்த ஆண்டு கிறிஸ்ட் சர்ச் மசூதியில் தொழுகை நடத்திய 51 முஸ்லிம்களை ஒரு வெள்ளை நிற வெறியன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற போது பதட்டத்தை மிகவும் துணிவோடு எதிர்கொண்டார். தானியங்கி துப்பாக்கியைப் பயன்படுத்து வதற்கு நாடு முழுதும் தடை விதித்தார்.

மதவெறியர்களை ‘மனநோயாளிகள்’ என்று அறிவித்ததோடு மதம் கடந்த மனித நேயத்தை முன் வைத்து ஒரு முழக்கத்தை முன் வைத்தார். “மதவெறி மாய்ப்போம்; மனித நேயம் காப்போம்’ என்று தமிழகத்தில் பெரியாரிஸ்டுகள் முன் வைத்த முழக்கத்தைப் போலவே இது அமைந்தது. 

‘Be Strong; Be Kind’ என்பதே அவர் முன் வைத்த முழக்கம். கடந்த மார்ச் மாதம் கொரானா பரவத் தொடங்கிய வுடனேயே அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கினார். அப்போது அந்த நாட்டில் 100 பேருக்கு மட்டுமே கொரானா பாதிப்பு இருந்தது. நாட்டின் எல்லைகளை உடனடியாக மூடினார். அதிகாரிகளிடம் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

கொரானா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதை விட அதை முற்றாக அழிக்கும் செயல் திட்டங்களை உடனடியாக அறிவித்தார். அப்போது அவர் முன் வைத்த முழக்கம் “Go Hard; Go Early” (“நடவடிக்கைகளில் கடுமை; தொடங்குவதில் அவசரம்”) என்பதே அந்த முழக்கம். பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, சமத்துவம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமூக நீதி என்பது இவரது கொள்கை.

நியுசிலாந்து நாட்டில் 2018 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 37.6 சதவீதம் பிறப்பால் கிறிஸ்துவர்; இந்துக்கள் 2.6 சதவீதம். ஆனால் 10 இந்துக் கோயில்கள் பாதுகாப்புடன் இருக்கின்றன. இங்கே மசூதியை இடிப்பதுபோல் அங்கே கோயில்களை இடிப்பது இல்லை.

ஜெசிந்தா மத நம்பிக்கையற்றவர் என்றாலும் இந்துக் கோயிலுக்கு வெளியே செருப்பை கழற்றி விட்டு உள்ளே சென்று அர்ச்சர்கள் வைக்கும் குங்குமப் பொட்டுக்கு நெற்றியைக் காட்டும் வீடியோக்கள் வெளி வந்திருக்கின்றன. நியுசிலாந்து நாடு பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள் வாழும் நாடு என்பதால் அந்த மதத்தை அரசு மதமாக ஏற்கவில்லை. அரசியல் சட்டத்தில் அரசிடமிருந்து மதம் விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்தில் மதமற்றவர்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லை என்று பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2013இல் 41.9 சதவீதம் பேர் தங்களுக்கு மத நம்பிக்கை இல்லை என்று பதிவு செய்திருந்தனர். 2018இல் இது 48.2 சதவீதமாக அதிகரித் துள்ளது.

அண்மையில் எடுத்த கணக்கெடுப்பில் நம்பிக்கையாளர்களைவிட நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விக்கி ஃபீடியா தகவல் கூறுகிறது. நாட்டை மதவெறிக் காடாக்கி சமூகங் களிடையே வெறுப்பை விதைத்து நாட்டின் வளர்ச்சியைத் தடுத்துக் கொண்டிருக்கும் கட்சிகளோடு நியுசிலாந்து போன்ற நாடுகளை ஒப்பிடும்போது வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It