மூன்று பேருக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஒருவர் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரர். மற்றொருவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். மூன்றாமவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த மூவருடைய முயற்சியின் காரணமாக இப்போது நல்ல பயன் ஒன்று கிடைத்திருக்கிறது. காஞ்சி சங்கராச்சாரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறபோது எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தார். சுவாமி தியான நிலையில் இருந்தார் என்று அப்போது காரணம் கூறப்பட்டது. இதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இறை வணக்கப் பாடல் தான். அது தேசியகீதம் போல நாட்டு வணக்கப் பாடல் அல்ல. சங்கராச்சாரி போன்ற மிகப் பெரிய மகான்கள் அமர்ந்த நிலையில் இறை வாழ்த்து பாடுகிறபோது தியானத்தில் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கலாம். அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை; சட்டமும் இல்லை என்று ஒரு தீர்ப்பை வழங்கினார்.

அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு அரசாணையை பிறப்பித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இறை வணக்கப் பாடல் அல்ல. அது தமிழ்நாட்டுக்கு உரிய பாடல். தமிழ்நாட்டு அரசு நிகழ்ச்சி அனைத்திலும் துவக்கப் பாடலாக அதைப் பாட வேண்டும். அது மட்டுமின்றி அந்தப் பாடலை பாடும் போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பினிப் பெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவான விளக்கத்தோடு தமிழ்நாடு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு அரசாணை வருவதற்குக் காரணமான காஞ்சி சங்கராச்சாரி, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி சொல்ல வேண்டிய மற்றவர், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் தமிழ்த்தாய் வாழ்த்தில் வெட்டப்பட்ட வரியையும் இணைத்து பாட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். திராவிடம், ஆரியம் என்ற ஒன்று கிடையாது இது பாரத தேசம், நாமெல்லாம் பாரதத்தின் புதல்வர்கள் என்று பாஜக வும் ஆர்.எஸ்.எஸ் யும் பேசிக் கொண்டிருக்கும் வேலையில் இல்லை இல்லை திராவிடத் திருநாடு மிகச்சிறந்த நாடு என்ற வெட்டப்படாத வரியை அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால் அதை நாம் வரவேற்கத் தானே வேண்டும்.

அதே போல் நீக்கப்பட்ட பாடலில் மற்றொரு வரி “ஆரியம் போல் உலகு வழக்கு ஒழிந்து, சிதையாத உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துமே” என்ற வரிகளும் சேர்க்கப் பட வேண்டும் என்று அண்ணாமலை கூறுகிறார். ஆரியம் உலக வழக்கிலிருந்து அழிந்து போய் விட்டது. சமஸ்கிருதம் மடிந்து போய்விட்டது. ஆனால் தமிழ் மொழி இன்றும் இளமையுடன் இருந்து கொண்டிருக்கிறது என்று பாடல் வரிகள் கூறுகின்றன. சமஸ்கிருதமே பாரதிய கலாச்சாரம் என்று பேசிக் கொண்டிருக் கின்றனர் பா.ஜ.கவும், சங்பரிவாரங்களும். அந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கொள்கைகளை நான் ஏற்க மாட்டேன். தமிழ் மொழியைப் போல் இளமையான வேறு மொழி இல்லை. ஆரியம் வழக்கு ஒழிந்து விட்டது என்ற கருத்துக்கும் வலிமையான ஆதரவைத் தந்திருக்கும் அண்ணாமலைக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வரிகளை தமிழக அரசு மீண்டும் இணைத்தால் ஒன்றிய ஆட்சியோ பா.ஜ.க. பரிவாரங்களோ ஒருபோதும் எதிர்க்காது என்று ஒன்றிய அரசு வழியாக அறிவிக்கச் சொல்வாரா அண்ணாமலை என்ற கேள்வியையும் எழுப்ப விரும்புகிறோம்.

ஒரு பெரியாரியல்வாதி பார்வையில் தமிழ்த் தாய் வாழ்த்து, கடவுள் வாழ்த்து என்பவை அர்த்தமற்றவை என்றாலும் தமிழை நீச மொழியாகக் கருதும் பார்ப்பன சங்கராச்சாரிகளின் ஆணவத்துக்கு எதிர்வினை என்ற கண்ணோட்டத்தில் தமிழக அரசின் ஆணையை நாம் வரவேற்கிறோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It