1957 நினைவலைகளில் மூழ்கச் செய்த தஞ்சை மாநாடு அரங்கிலிருந்து - வள்ளுவர் திடல் வரை...

சாதி ஒழிக்கச் சட்டம் எரித்த 50வது ஆண்டில், சாதி ஒழிப்பு மாநாட்டை பெரியார் திராவிடர் கழகம் மே 19, 2007, தஞ்சையில் நடத்தி புதிய வரலாறு படைத்தது. இந்தியாவில் சாதி ஒழிப்புக்காக இவ்வளவு பெரும் போராட்டத்தை நடத்திய வரலாற்றுப் பெருமை பெரியார் இயக்கத்துக்கு மட்டுமே உண்டு. 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு தீ வைக்கும் போராட்டத்தை அறிவித்தார்.

நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சையில் பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயம் வழங்கும் நிகழ்ச்சியும் திராவிடர் கழக தனி மாநாடும் சிறப்பாக நடைபெற்றது. எடைக்கு எடை வெள்ளி நாணயம் வழங்கும் நிகழ்ச்சிக்கு தி.பொ. வேதாசலம், பி.ஏ., தலைமை தாங்கினார்.

திராவிடர் கழக தனி மாநாட்டுக்கு தலைவர் தந்தை பெரியார்; மாநாட்டு திறப்பாளர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் குத்தூசி குருசாமி. அன்று காலை 9 மணிக்கு தஞ்சையில் நடந்த ஊர்வலத்தில் 4 லட்சம் மக்கள் திரண்டார்கள் என்று ‘விடுதலை’ நாளேடு கூறுகிறது.

நடிகவேள் எம்.ஆர். ராதா, திருச்சி வீ.அ. பழனி ஆகிய இருவரும் குதிரை மீது அமர்ந்து ஊர்வலத்தை ஒழுங்குபடுத்திவர, பெரியார் இரட்டைக் குதிரைகள் பூட்டிய அலங்கரிக்கப்பட்ட வண்டியில் உணர்ச்சி முழக்கங்களுக்கிடையே அழைத்து வரப்பட்டார். மாநாடு பற்றி ‘விடுதலை’ நாளேடு வெளியிட்ட செய்தி (5.11.1957) இவ்வாறு கூறியது.

“சுயமரியாதை இயக்கக் காலம் முதல் நடைபெற்ற பல பெரிய மாநாடுகளையும்விட இதுவே மிகப் பெரிய மாநாடாக விளங்கியதென பெரியார் தமது உரையில் குறிப்பிட்டார்”.... பெரியார் அவர்களே! என்ன செய்யச் சொல்கிறீர்கள்? அதன் படியே முடிப்பதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறி ஆணை பெற்றுச் செயலாற்றத் துடிக்கும் கடமை வீரர்கள்! போர் முரசு கேட்டதும் ஏன்? என்ன? என்று கேட்காமல் அணி வகுத்து நின்று கடமையாற்றும் செயல்வீரர்கள்!

உயிரைப் பணயம் வைக்கத் துணிந்துவிட்டோம், உத்தரவு தாருங்கள் என்று இலட்சக்கணக்கில் கூடிய இலட்சிய வீரர்கள்! கூடினோம், கலைந்தோம் என்றிராமல், கொள்கைக்காக வாழ்கிறோம் என்று உறுதி பூண்டுள்ள போர் வீரர்கள் நிறைந்த பாடி வீடாக அமைந்தது மாநாடு” என்று எழுதியது விடுதலை. - 79 வயதையும் மறந்து 20 வயது இளைஞரைப் போன்று பெரியார் வீர கர்ச்சனை செய்தார்.

இறுதியில் “நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று மாலையில், இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும், இச் சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது” என்று மாநாட்டில் தீர்மானம் அறிவிக்கப்பட்டது. அடுத்த 8 நாள்களில் அரசியல் சட்டத்தை எரித்தவர்களுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கும் மசோதா உள்துறை அமைச்சர் பக்தவச் சலத்தால் கொண்டு வரப்பட்டு, அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. 10,000 பேர் சட்டத்தைக் கொளுத்தினார்கள்.

‘விடுதலை’யில் வெளியிட்ட பட்டியலின்படி, 3000க்கும் அதிகமாகக் கைது செய்யப்பட்டார்கள். 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை தண்டிக்கப்பட்டார்கள். சிறைக்குள்ளே 5 பேர் பலியானார்கள். விடுதலையானவுடன் அடுத்த சில நாள்களிலே 13 பேர் மரணமடைந்தார்கள். இந்த மகத்தான போராட்டம் இருட்டடிக்கப் பட்டது. போராளிகளின் தியாகங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் பெரியார் திராவிடர் கழகம் இந்தப் போராட்டத்தின் வரலாறுகளை வெளியே கொண்டு வந்து சாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தொடர முடிவெடுத்து, தஞ்சையில் சாதி ஒழிப்பு மாநாட்டைக் கூட்டியது.

சாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்று, சிறையிலேயே மரணமடைந்த போராளி பட்டுக்கோட்டை இராமசாமி நுழைவாயிலில் அமைந்த தமிழரசி திருமண மண்டபத்தை நோக்கி, காலை 9 மணியிலிருந்து, பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள், திரளத் தொடங்கினர். காலை 10 மணியளவில் அரங்கம் முழுதும் நிரம்பி வழிந்தது.

சாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிரிழந்த வாளாடி பெரியசாமி நினைவுப் பந்தலில், உயிரிழந்த மற்றொரு போராளிலால்குடி நன்னிமங்கலம் கணேசன், மேடையில் மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பறை முழக்கத்தோடு நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர். மன்னை தங்கம் குழுவினர் இணைந்து வழங்கிய எழுச்சி இசை நிகழ்ச்சி நடந்தது. கழகச் செயல்வீரர் கா.சு. நாகராசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பால். பிரபாகரன் கழகக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். பெரியார் திராவிடர் கழகத்தின் இந்தப் புதியக் கொடி, 1996 ஆம் ஆண்டிலேயே தாங்கள் உருவாக்கிய பெரியார் பாசறையின் கொடியாக இருந்தது என்பதை பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.

பகல் 12 மணியளவில் சாதி ஒழிப்பு கருத்தரங்கம் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தொடங்கியது. சாதி ஒழிப்பும் புத்தரும் எனும் தலைப்பில் எழுத்தாளர் அழகிய பெரியவன், சாதி ஒழிப்பும் அம்பேத்கரும் எனும் தலைப்பில் வழக்குரைஞர் த. பானுமதி, சாதி ஒழிப்பும் புலேயும் எனும் தலைப்பில் கவிஞர் வெண்ணிலா, சாதி ஒழிப்பும் பெரியாரும் எனும் தலைப்பில் ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன், சாதி ஒழிப்பில் சமகால களப்போராளிகள் எனும் தலைப்பில் தோழர் தலித் சுப்பையா ஆகியோர் கருத்தாழமிக்க உரை நிகழ்த்தினர்.

பகல் 1.30 மணியளவில் சட்ட எரிப்பு வீரர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்ச்சி தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு நடந்த சட்ட எரிப்புப் போரில் சிறைச் சென்ற 40 போராளிகள் - தஞ்சை, பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்தும், ஆனைமலையிலிருந்தும் வந்து பங்கேற்றனர். முதுமை வாட்டிய நிலையிலும், கொள்கை உறுதியில் இளமையும், துடிப்பும் நிறைந்த அந்தப் போராளிகளின் பங்கேற்பும், வெளியிட்ட கருத்துகளும், கூடியிருந்த பெரியாரின் கருஞ்சட்டைத் தோழர்களை உணர்ச்சி வயப்படுத்தி, ‘மின்காந்த வீச்சை’ உருவாக்கியது என்றே கூறலாம்.

உணர்ச்சிப் பிழம்பான அந்த நிகழ்வில் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர். பெரியார் கொள்கைக்காக மகத்தான தியாகங்களைப் புரிந்து விட்டு, விளம்பர வெளிச்சங்களைத் தேடாத, உண்மையான கருப்பு மெழுகுவர்த்திகளை சந்தித்தபோது, ஏற்பட்ட உணர்வுகளை வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லை.

இதுவே, அரங்கம் முழுதுமிருந்தும் நிறைந்திருந்த உணர்வாக இருந்தது. சட்ட எரிப்பில் சிறை சென்று வயது முதிர்ந்த நிலையில் உடல்நலப் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாகை எஸ்.எஸ். பாட்சா, தலைமை ஏற்று, தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து சட்ட எரிப்புப் போராளிகள் அந்தூர் பொன்னுச்சாமி, சோழபுரம் முருகேசன், காளி. மனோகரன், சீர்காழி லாலா, திருமங்கலக்குடி சோவிந்தராசன் ஆகியோர் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

‘பெரியாரை இழிவுபடுத்தும் எவனையும் விடேன்’ என்ற உறுதியோடு களத்தில் தாக்குதல் போராளியாகவே வாழ்ந்த லட்சிய வீரர், திருச்சி தியாகு நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது அனுபவங்களை உள்ளம் திறந்து வெளிப்படுத்தியது, கழகச் செயல்வீரர்களை மிகுந்த உணர்ச்சி வயப்படுத்தியது. உள்ளத்தில் ஆணி அடித்ததுபோல் அவரது உரை வீச்சு ஒவ்வொன்றும் பதிந்துவிட்டது என்றே கூறவேண்டும்.

கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் திருவாரூர் தங்கராசு வரலாறுகளை நினைவுகூர்ந்து, நெகிழ்ச்சியான உரை நிகழ்த்தி, சட்ட எரிப்புப் போராளிகளுக்கு, கழக சார்பில் நினைவுப் பரிசுகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டக் கழக அமைப்பாளர் இலட்சுமணன் நன்றி கூற பகல் 3 மணி அளவில் காலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

தஞ்சையைக் குலுக்கிய பேரணி

பிற்பகல் 4 மணியளவில், ஜூபிடர் திரையரங்கம் அருகிலிருந்து கோவை தெற்கு மாவட்டத் தலைவர் க.கருமலையப்பன் தலைமையில், சாதி ஒழிப்புப் பேரணி புறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டக் கழகத் தலைவர் துரை. தாமோதரன் தொடங்கி வைத்தார். சீருடையுடன் கழகக் கொடி ஏந்தி, பெரியார் திராவிடர் கழகத் தோழியர்களும், தோழர்களும், குழந்தைகளும், சாதி ஒழிப்பு முழக்கங்களை எழுப்பி கட்டுப்பாடாக அணி வகுத்து வந்த நீண்ட பேரணியைக் கண்டு, தஞ்சை நகரமே வியந்தது. “பெரியார் திராவிடர் கழகத்தில் இத்தனை ஆயிரம் இளைஞர்களா?” என்று பார்த்தவர்கள் புருவத்தை உயர்த்தியது பேரணி.

சட்டத்தை எரித்து சிறைச் சென்ற சாதி ஒழிப்புப் போராளிகள் தீரன் சின்னச்சாமி நினைவு ஊர்திகளில் அழைத்து வரப்பட்டனர்.

6.30 மணியளவில் பேரணி திருவள்ளுவர் திடலை (திலகர் திடல்) வந்தடைந்தது. மன்னை தங்கம் மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருப்பூர் தந்தை பெரியார் சிறுவர் கலைக்குழு சார்பில் திருப்பூர் தியாகு ஒருங்கிணைத்த பகுத்தறிவுப் பிரச்சார நாடகம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. தொடர்ந்து, ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் இராம. இளங்கோவன் எழுச்சிமிகு வரவேற்புரையாற்றினார்.

சாதியை ஒழிக்க அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் (வரலாற்று ஆவணம்) நூலை பெரியாரிய எழுத்தாளர் தோழர் சங்கமித்ரா வெளியிட தஞ்சை மருதவாணன் பெற்றுக் கொண்டார். நூலை அறிமுகம் செய்து தஞ்சை குப்பு வீரமணி உரையாற்றினார். தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மைனாரிட்டி சமூகங்களின் பணியாளர் கூட்டமைப்பு என்ற மறைந்த கன்ஷிராம் தொடங்கிய அமைப்பின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் மராட்டியத்தைச் சார்ந்த தனோஜ்மேஷ் ராம் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

விடுதலை இராசேந்திரன் தமிழில் மொழி பெயர்த்தார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் துரைசாமி, திருவரங்கம் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர்வினையாற்றிய கழகத் தோழர்களுக்கு விருது வழங்கி பாராட்டி உரை நிகழ்த்தினார். தொடர்ந்து பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், திருவாரூர் தங்கராசு ஆகியோர் சிறப்புரைக்குப் பிறகு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத்தின் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றினார்.

மாநாட்டின் இறுதியில் பெரியார் இயக்கத்தோடு, பொது வாழ்க்கையில் நுழைந்து, தலித்தியப் போராளிகளின் வரலாறுகளைப் பதிவு செய்த வரலாற்று எழுத்தாளர் தோழர் வள்ளிநாயகம் திடீர் மறைவுக்கு வருந்தி, ஒரு நிமிடம் மவுனம் பின்பற்றப்பட்டது. மாநாடு அலுவலகப் பொறுப்பாளராக பொறுப்பேற்று செயல்பட்ட தோழர் திருப்பூர் இராவணன் நன்றி கூற, 10.45 மணியளவில் மாநாடு நிறைவடைந்தது.

Pin It