“இந்தியாவில் மூடநம்பிக்கை இல்லாத, மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசாத தமிழ்நாடு இருப்பதற்கு இந்த ஈரோட்டில் பிறந்த பெரியார் தான் காரணம் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகள் ஈரோட்டில் நடந்த ஆட்சிமொழிக் கருத்தரங்கில் குறிப்பிட்டார். 25.11.2007 அன்று நடந்தக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:

இந்தியாவிலேயே பன்னாட்டு மொழியாக இருக்கும் தகுதி படைத்த ஒரே மொழி தமிழ்தான். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பலநாடுகளில் ஆட்சிமொழியாகத் திகழ்கிறது. ஆனால், வெளிநாட்டு வானவூர்த்திகளில் தமிழில் அறிவிப்புகள் செய்கிறார்கள். தமிழ்நாட்டுக்குள்ளேயே புறப்பட்டு, தமிழ்நாட்டுக் குள்ளேயே சேரும் விமானங்களிலோ தமிழில் அறிவிப்புகள் கிடையாது. இங்கு கடவுளைவிட சடங்குகளுக்கே மரியாதை அதிகம் கொடுக்கப்படுகிறது.

பாவங்களைத் தீர்க்க மந்திரிப்பதில் பொழுதை கழிக்கிறார்கள். பூசாரிகளும், புரோகிதர்களும் கடவுளையே சற்றுத் தள்ளி இருக்கச் செய்து மந்திரத்தில் இறங்கி விடுகிறார்கள். சுயமரியாதைத் திருமண சட்டத்தை அண்ணாவின் அரசு கொண்டு வரும்வரை தமிழ் வழித் திருமணம் செல்லாததாகத்தான் இருந்தது. அப்போது எல்லாம் அழைப்பிதழ் அச்சடிக்கும்போது “சுயமரியாதைத் திருமணம்” என்றே குறிப்பிட்டு அச்சடிப்பார்கள்.

பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தபோது 4.10.1971 இல் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் சர்.பி.டி. இராஜன் தலைமையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அதிகாரபூர்வமாக தமிழ் அர்ச்சனை செய்யப்பட்டது. ஆனால், அது இன்று வரை செயலாக்கம் ஆகவில்லை. தமிழ் வழிபாட்டுத் தளம் ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்” - என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் 

செய்தி : கதிர்

 3 கேள்விகள்

1) பாலங்கள் எங்குமே கடலுக்கு மேலேதான் இருக்கும். அப்போதுதான் அது பாலம்; கடலுக்கு கீழே யாராவது பாலம் கட்டுவார்களா?

2) ராமன் கட்டிய பாலத்தில் - ராமன் பக்தர்கள் நடந்து போகிறார்களா? பேருந்துகள், வாகனங்கள் போய்க் கொண்டிருக்கின்றனவா?

3) அனுமார் என்ற குரங்குகள் - எப்போதுமே மரக்கிளைகளில் தாவும்; மரங்களில் உயரங்களில்தான் இருக்கும். கடல்களில் குரங்குகள் வேலை செய்யாது; குரங்குகள் கடலில் பாலம் கட்டுமா?

Pin It