தமிழர் வரிப்பணத்தில் - ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்தக் கோரி 'தமிழர் ஒருங்கிணைப்பு' தமிழகத்தில் வருமான வரி மற்றும் உற்பத்தி வரி உள்ளிட்ட இந்திய அரசு வரி நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. 'இந்திய அரசின் வரி வாங்கும் நிறுவனங்களை இழுத்து மூடுவோம்' என்ற புது முழக்கத்துடன் இந்த முற்றுகைப் போராட்டம் 20.2.2009 வெள்ளிக்கிழமை அன்று சென்னை, கோவை, சேலம், ஈரோடு, மதுரை, தஞ்சை ஆகிய ஊர்களிலும் புதுவையிலும் நடக்கும்.

• இந்திய அரசே! தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்குப் படை உதவி செய்யாதே!
• தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!
• தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு!

என்ற கோரிக்கைகளை முன் வைத்து தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை 'தமிழர் ஒருங்கிணைப்பு' நடத்தும் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட தமிழ் ஈழ விடுதலை ஆதரவு அமைப்புகள் 'தமிழர் ஒருங்கிணைப்பில்' இடம் பெற்றுள்ளன. உடன்பாடுள்ள தமிழின அமைப்புகள் - தமிழின உணர்வாளர்கள் போராட்டத்தில் பங்கேற்க அழைக்கிறோம் என்று கொளத்தூர் மணி, பெ. மணியரசன், தியாகு கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Pin It