குடந்தையருகே எரவாஞ்சேரி என்ற ஊரில் ஒரு ஜோசியர் இருந்தார். அவரிடம் யார் போனாலும் முன்னதாகவே ரூபாய் 10 கொடுத்துவிட வேண்டும். அவர் 1-லிருந்து 9-க்குள் ஏதாவது ஒரு நம்பரையும், ஒரு மலரையும் நினைத்துக் கொள்ளச் சொல்லுவார். சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வதுபோல நடித்து இரண்டு மூன்று தவணைகளில் அந்த நம்பரையும், மலரையும் சொல்லிவிடுவார்.
வந்த நபரும் வியந்து போவார். பிறகு கிளி ஜோசியர்கள் சொல்லுவதுபோல இன்னும் 17 நாட்களுக்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும். உன் வீட்டில் ஒரு தெய்வம் வசித்து வருகிறது. அதற்கு வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வர தனவிருத்தியாகும்... தொழில் முன்னேற்றமடையும்... கஷ்டமெல்லாம் தொலைந்துவிடும் என்று சொல்லி 10 ரூபாயைச் சுருட்டிக் கொள்வார். இது நடந்தது 1980களில்.
அந்தக் காலக்கட்டத்தில் கிளி ஜோசியம் வெறும் 10 பைசாதான். கிளி ஜோசியக்காரன் ஒரே ஒரு சிறிய புத்தகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவிலுள்ள 103 கோடி மக்களுக்கும் ஜோசியம் சொல்லிவிடுவான். அதுவும் அந்தச் சிறிய புத்தகம் 1920... 30... களில் அச்சிடப்பட்டதாக இருக்கும்.
உண்மையிலேயே ஒருவருடைய வாழ்க்கை அமைப்பு இன்னொருவருக்கு இருக்க முடியாது. 103 கோடி மக்களுக்கு 103 கோடி பக்கங்கள் உள்ள புத்தகம்தான் சரியானதாக இருக்கும். இது ஒருபுறம் இருக்க, நமது எரவாஞ்சேரி ஜோசியர் அக்கிரகாரவாசி என்பதால் அவர் இந்தப் புத்தகமெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. அதில் சில பக்கங்களை மட்டும் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டார். அதுபோதும் அவருக்குப் பிழைப்பு நடத்த. 10 பைசா கிளி ஜோசியம் இவரிடம் 10 ரூபாய்.
ஒரு நாள் அதே ஊரைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரர் மாஸ்டர் அரங்கராசன் என்கிற தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் அந்த ஜோசியரைக் கடவுளாக மதித்த 10 பேரை அழைத்துக் கொண்டு போய் ஜோசியரிடம் 10 ரூபாய் கொடுத்து தனக்கு ஜோசியம் பார்க்குமாறு கேட்டார். ஜோசியர் வழக்கம் போல 1-லிருந்து 9-க்குள் ஏதாவது ஒரு எண்ணையும், ஒரு மலரையும் நினைத்துக் கொள்ளச் சொன்னார்.
மாஸ்டர் அரங்கராசன் அவர்களோ ஒரு காகிதம் கொடுங்கள் அதில் நான் நினைத்த இரண்டையும் எழுதி வைத்துவிடுகிறேன். பிறகு நாம் இருவரும் பொய் சொல்ல முடியாது. காகிதத்தில் உள்ள நம்பரையும், மலரையும் நீங்கள் சரியாகச் சொல்லிவிட்டால் உங்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசாகத் தந்து ஜோசியம் உண்மை என்பதை எல்லாரிடமும் விளம்பரம் செய்கிறேன் என்று சொன்னார்.
ஜோசியரோ கண்ணை மூடிக் கொண்டார். வேடிக்கைப் பார்க்க வந்த 10 பேரும் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஜோசியர் : நீங்கள் நினைத்தது... 3 ...?
மாஸ்டர் : இல்லை...
ஜோசியர் : அப்படியானால் .... 1...?
மாஸ்டர் : அதுவும் இல்லை...
ஜோசியர் : ஐந்து ... தானே ...?
மாஸ்டர் : இல்லை...
ஜோசியர் : 9 ... ஆக இருக்குமோ...?
மாஸ்டர் : இல்லவேஇல்லை...
ஜோசியர் : 7.... தான் என்றார் ...
மாஸ்டர் : 7... தான் என்று உறுதியாகச் சொல்கிறீர்களா?
பாவம் அந்த ஜோசியர்... திணறிப் போய் மீதமுள்ள 2, 4, 6, 8 என்ற எல்லா எண்களையும் சொல்லிவிட்டார்.
அப்போதும் மாஸ்டர் இல்லையென்றார். உடனே அந்த ஜோசியருக்கு மிகுந்த கோபம் வந்தவிட்டது. என்னய்யா காலையில் வந்து கலாட்டா செய்கிறார்கள்? உங்களிடம் நான் 1லிருந்து 9க்குள் தானே நினைக்கச் சொன்னேன்! நான் எல்லா எண்களையும் சொல்லிவிட்டேன்! உங்களுக்கு வேறு வேலை கிடையாதா? என்று சாடிக் குதித்தார்.
நமது மாஸ்டர் அவர்களோ மிகவும் பொறுமையாக, தான் எழுதிய நம்பரை மட்டும் காண்பித்தார். அதில் ஒன்றரை என்று எழுதப்பட்டிருந்தது. பிறகு மாஸ்டர் அவர்கள் பூவையாவது சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். உடனே சோதிடர் சினத்துடன், “போயா உன் 10 ரூபாயும் வேண்டாம் உனக்குச் சோதிடமும் சொல்ல மாட்டேன்” என்று கூறி உள்ளே சென்று விட்டார். மாஸ்டர் எழுதிய பூ என்ன தெரியுமா? வாழைப்பூ... உடன் வந்திருந்த 10 பேரும் ஜோசியருடைய பித்தலாட்டத்தைப் புரிந்து கொண்டார்கள். சுயமாகச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.