robert_gunawardenaLSSPயின் அப்போதையப் பாராளுமன்ற உறுப்பினர் ரோபர்ட் குணவர்த்தன (Robert Gunewardena) செப்டம்பர் முதலாம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு புகழ் பெற்ற ஒரு பேச்சு. ‘அமெரிக்கத் தூதரகம் நிதியமைச்சருக்கு வழங்கும் கட்டளையின்படி தான் இந்த அரசு தனது செயற்பாடுகளைத் திட்டமிடுகிறது. இந்த அரசு கேட்டுக் கொண்டபடி 20000 ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் அனுப்பப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. ஆம் இவர்கள் தமது பழக்கதோசமான காரியத்தில் இறங்கிவிட்டார்கள். முன்பு பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு நாட்டை விற்ற குடும்பத்தின் வாரிசுகள் இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு நாட்டை விற்கிறார்கள். இப்படியிருக்க நாமெப்படி இந்த அரசில் நம்பிக்கை வைக்க முடியும்?’ என்று பேசிக்கொண்டிருந்த ரோபர்ட் குணவர்த்தனவை சபாநாயகரும் UNP கட்சியினரும் விடாது தடுத்ததைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி அமர்ந்தாரவர்.
 
இவ்வாறு ஒரு பக்கம் மோதல் நிகழ ஜி.ஜி. பொன்னம்பலம் முதலான தமிழ்த் தலைவர்களும் அவர்தம் பெரும் வியாபார நண்பர்களும் UNPக்கும் ஜே.ஆருக்கும் தமது ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வந்தனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களைச் செய்து வந்தனர். அவர்கள் தாம் எந்த வர்க்கத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை இந்த வேலை நிறுத்தத்தின் போது தெட்டத் தெளிவாக்கிவிட்டிருந்தனர்.
 
12ஆம் திகதி அக்டோபர் 53இல் வேறு வழியின்றி டட்லி சேனநாயக்கா பிரதம மந்திரி பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். தான் சரியாகச் செயற்பட முடியாமைக்குத் தனது சுகவீனத்தைக் காரணஞ் சொல்லி அவர் இராஜினாமா செய்திருந்தாலும் அவர் பதவியிழப்பது தவிர்க்க முடியாததென்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. இதைத் தொடர்ந்து யோன் கொத்தலாவல (John Kotelawala) நாட்டின் மூன்றாவது பிரதம மந்திரியாகப் பதவியேற்றார். தோல்வியை மறைக்க பிரதம மந்திரியைப் பலியாக்கிய அவர்கள் சில சமரசங்களுக்கு முன்வந்தனர். இடதுசாரிகளிடம் தோற்றுவிட்டோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்திருந்த ஆளும் வர்க்கம் எந்தச் சமரசத்தைச் செய்தாவது ஆட்சியைத் தமது கையில் வைத்திருக்க முயன்றனர். அதற்குச் சர்வதேச முதலாளித்துவ சக்திகளும் உதவ முன்வந்தன.
 
அமெரிக்க மேற்கத்தேய அரசுகள் ஆயுத உதவி உட்பட பல உதவிகளை UNPக்கு செய்ய முன்வந்தன. 54ஆம் ஆண்டில் பிரித்தானிய ‘அரசி’ இலங்கைக்கு விஜயம் செய்தார். அவர் தனது 28வது பிறந்தநாளை இலங்கையில் கொண்டாடினார். இருப்பினும் பலமான பொது வேலைநிறுத்தத்தால் மிகவும் பலவீனமடைந்த UNP மீண்டும் நிமிர 20 வருடங்களுக்கும் மேலெடுத்தது. அவர்கள் இவ்வாறு மீண்டும் பலப்பட முக்கிய காரணமாகவிருந்தவர்கள் சமரசம் செய்து கொண்ட ‘இடதுசாரித்’தலைவர்கள்.
 
வேலை நிறுத்தத்தை ஆதரிக்காத S.W.R.D தமக்கு ஆதரவைப் பெருக்க இனவாதத்தை முன்னெடுத்தார். இருப்பினும் தொழிலாளர்களின் கோபத்தைக் கிளறாமல் இருப்பதில் ஆரம்பத்தில் அவர் கவனம் செலுத்தினார். LSSPயின் ஆதரவின்றி பாராளுமன்றத்தில் செயற்பட முடியாத நிலையில் தொழிலாளர்களின் உரிமைகளில் கை வைக்கப் பயப்படும் நிலையிலேயே அவர் இருந்தார். அவ்வாறு ஏதாவது மோட்டுத்தனமான முடிவைத் தான் எடுத்தால் யுஎன்பி க்கு நடந்த கதைதான் தமக்கும் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
 
ஆனால் LSSP தொழிலாளர்களின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டது. பொது வேலை நிறுத்தம் உருவாக்கிய அதிகாரத்தைக் கைப்பற்றும் சூழ்நிலையை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்ற இது தருணமல்ல என்று LSSP தலைவர்கள் அறிவித்தனர். தொழிலாளர்களுக்குத் தனித்துவமான தலைமை வழங்கி ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தைச் சரியானபடி முன்னெடுக்கத் தாம் வக்கற்றவர்கள் என்பதை LSSP தலைவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். இந்த மாபெரும் பொது வேலைநிறுத்தம் பலரது இயலாமைகளையும் வெவ்வேறு கட்சிகளின் வர்க்க சார்புகளையும் கூர்மையாக வெளிக்கொண்டு வந்தது. இந்தப் போராட்டம் தொடர முடியாமற் போனதும் அதைத் தொடர்ந்து LSSP தலைவர்களது சமரசங்களும் இலங்கையின் இனப்பிளவு கூர்மையடைய வித்திட்டன. 
 
UNPயின் அதிகாரத்துக்கான தவிப்பு
 
kotelawalaஅடுத்த தேர்தலில் வெற்றி பெற அனைத்து வலதுசாரிக் கட்சிகளும் இனவாதத்தைக் கையிலெடுத்தன. தமிழ் பேசும் மக்களை எதிர்த்துப் பிரச்சாரங்கள் தொடங்கியது. UNPயுடன் கூட்டுவைத்திருந்த தமிழ் காங்கிரஸ் முதற் பலியானது! தொழிலாளர்கள் வறியோர் மலையக மக்கள் என்று UNP செய்த அனைத்துத் தாக்குதல்களுக்கும் துணை போனது தமிழ்க் காங்கிரஸ். பொது வேலை நிறுத்தத்தின் போது கூட UNPக்காகக் கடுமையாக வாதாடிய பொன்னம்பலத்தை இராஜினாமா செய்ய வைத்தது UNP நிர்வாகம். UNP மீண்டும் தமது பழைய உத்தியைக் கையில் எடுத்து மலையகத் தொழிலாளர்களைத் தாக்கத் தொடங்கியது.
 
மலையக மக்களின் அடிப்படைச் சனநாயக உரிமைகளைப் பறித்தது 18 ஜனவரி 54ல் கைச்சாத்தான நேரு - கொத்தலாவல ஒப்பந்தம். சிங்கள இனவாதத்தைத் தூண்டிப் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகளை வெல்லும் நோக்கத்தின் பின்னணியில் உருவானது இந்த ஒப்பந்தம். நாடற்றவர்களாக்கப்பட்ட மலையக மக்களை இந்தியா பொறுப்பெடுக்கும் என்று பிரச்சாரித்தனர். ஆனால் மேலும் பல மலையக மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதுதான் நிகழ்ந்தது. பல தலைமுறையாக மலையகத்தில் வாழ்ந்து உயிரைப் பிழிந்து வேலை செய்த இத்தொழிலாளர்கள் அவர்தம் குடும்பங்கள் நிர்க்கதியற்றவர்களாக்கப்பட்டார்கள். ஆனால் அன்றைய தமிழ்த் தலைவர்களுக்கு இந்த அநியாயம் பெரிய அநியாயமாகப் படவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மலையகத் தமிழர் மட்டுமின்றி ஏனைய தமிழ்பேசும் மக்கள் கூட நாடற்றவர்களாக ஆக்கப்படலாம் என்பது ஒருசிலரைத் தவிர பெரும்பான்மை தமிழ் வலதுசாரி அரசியல்வாதிகளுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் தமிழ் மொழி ‘இந்திய மொழி’ என்று பிரித்துச் சுட்டப்பட்டதையும் அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை.
 
இந்தியாவில் 1950இல் உருவான புதிய யாப்பு முறைப்படி இந்தி இந்தியாவின் உத்தியோகப்பூர்வ மொழியானது. இருப்பினும் தமிழ் உட்பட இந்தியாவில் பேசப்பட்ட அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாகப் புதிய யாப்பு அங்கீகரித்தது. இதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்தது. UNP அரசு மொழிப் பிரச்சினையை வெளிப்படையாக இத்தருணத்தில் கையிலெடுத்திருக்காத போதும் சிங்கள மொழி இலங்கையின் தேசிய மொழியாக்க வேண்டும் என்ற பிரச்சாரத்துக்கு அவர்கள் தளமேற்படுத்திக் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். இடதுசாரிகளின் பலங் காரணமாக இந்தப் பிரச்சாரத்தை வெளிப்படையாக அவர்களால் செய்ய முடியாமல் இருந்தது. தேசிய மொழியாக இருந்த ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களமும் தமிழும் தேசிய மொழியாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தது LSSP. இதில் முரண்பட்டுச் சிங்களத்தை மட்டும் தேசிய மொழியாக்க வேண்டும் என்று பேசும் தைரியம் வலதுசாரிக் கட்சிகளுக்குக் கூட அன்றிருக்கவில்லை.

நாட்டின் அனைத்துப் பகுதித் தொழிலாளர்கள் மத்தியிலும் LSSP யின் செல்வாக்குப் பலப்பட்டிருப்பது 53ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தத்தின் பின் தெளிவாகியிருந்தது. குறிப்பாக மலையகத் தொழிலாளர் மத்தியில் LSSP யின் பலம் வேகமாக வளர்ந்து வந்தது. மலையகத் தொழிலாளர்களின் உரிமைகளைத் தாக்குவதன் மூலம் LSSPஐ பலவீனப்படுத்தலாம் என்பது வலதுசாரிகளுக்குத் தெரிந்திருந்தது. LSSP எல்லா இன மக்கள் மத்தியிலும் பலம் பெறுவதை உடைக்க இனவாதப் பிரச்சாரம் முதற்கொண்டு எதையும் செய்ய UNP தயாராக இருந்தது. கம்யூனிசத்தை எதிர்க்க நான் சாத்தான் பக்கம் சேரவும் தயார் என்று கொத்தலாவல ஒளிப்பு மறைப்பின்றிப் பொதுவில் தமது வெறுப்பை கக்கியிருந்தார். இருப்பினும் எவ்வளவு தூரத்துக்குச் சிங்கள இனவாதத்தைக் கிளறித் தாம் பயனடைய முடியும் என்பது அவர்களுக்குக் குழப்பமாகவிருந்தது.
 
இத்தருணத்தில் கொத்தலாவலவின் வடக்குப் பயணம் நிலவரத்தைத் தலைகீழாக மாற்றியது.
 
தொடரும்.........

- சேனன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It