அயோத்தியில் பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று, பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள். அங்கே தற்காலிகக் கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு ராமன் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அயோத்தியில் “தீவிரவாதிகள்” ராமன் கோயிலைத் தாக்க வந்ததாக பா.ஜ.க.வினரும் பார்ப்பன பத்திரிகைகளும் கூப்பாடு போடுகின்றன! கோயிலே இன்னும் கட்டத் துவங்காத போது கோயிலை எப்படித் தகர்க்க முடியும்? அயோத்தி ராமன் கோயிலைத் “தீவிரவாதிகள்” தகர்க்க வந்ததால் இந்தியா முழுதும் உள்ள கோயில்களில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாம். கடவுள்களுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாம். உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல், குருவாயூர் “கிருஷ்ணனை” வழிபட வந்தபோது பேட்டி இவ்வாறு அளித்திருக்கிறார்.

“தீவிரவாதிகளிடமிருந்து” தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் சக்தி இந்தக் கடவுள்களுக்குக் கிடையாது என்பது அரசுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆண்டவனின் சக்தியை இப்படிக் கேள்விக்குள்ளாக்கலாமா என்று, பா.ஜ.க.வினரோ, பக்தர்களோ, கேட்கத் தயாராக இல்லை. திருப்பதி கோயில் எல்லையில் குண்டு துளைக்கப்படாத கதவுகள் நிறுவப்பட இருக்கிறதாம்!

அரசுகளுக்கு ஒரு யோசனை! இந்த கடவுள்களை ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பாலிசிதாரர்களாக்கி விட்டால் “அவர்கள்” விபத்துக்கோ, தாக்குதலுக்கோ உள்ளானால், கணிசமான இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும் என்ற யோசனையை முன் வைக்கிறோம்! கோயில் நகைகள், சொத்துகளுக்கு ‘இன்சூரன்ஸ்’ செய்யும் கோயில் நிர்வாகம், பாதுகாப்புக் கருதி கடவுள்களுக்கு ஏன் இன்சூரன்ஸ் செய்யக் கூடாது?

அதே போல் கடவுள்கள் தாக்கப்பட்டால், அவர்களுக்கு முதலுதவி செய்வதற்கான அவசர மருத்துவ சேவைகள், நவீன மருத்துவமனைகள் அமைத்து அதில் வேலை செய்வதற்காக பக்தியில் ஊறித் திளைத்துப் போன மருத்துவர்களை நியமித்து, கடவுள்களைக் காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது நமது தாழ்மையான யோசனை!

உலகையும், உலகத்தில் உள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய “கடவுள்களை” தீவிரவாதிகள் தாக்குதலிலிருந்து நாம் காப்பாற்றாவிட்டால், பிறகு, கடவுள்கள் எப்படி உலகைக் காப்பாற்றுவார்கள் என்ற கவலையோடு தான் இந்த ‘இலவச’ ஆலோசனைகளை முன் வைக்கிறோம்.

Pin It