பினாயக்சென் மனைவி இலினாவும் ஒரு மருத்துவர். அவர் மீதும் தேச விரோதக் குற்றச்சாட்டுகளை சட்டிஸ்கர் காவல்துறை போட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் தான் வேடிக்கையானவை.

இலினா. தனது மின்னஞ்சல் வழியாக டெல்லியிலுள்ள சமூக ஆய்வு நிறுவனமான இந்திய சமூக நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஆங்கிலத்தில் Indian Social Institute  என்பது அந்நிறுவனத்தின் பெயர். சுருக்கமாக ISI என்று அழைக்கப்படுகிறது. சட்டிஸ்கர் காவல்துறையோ, பாகிஸ்தான் உளவு நிறுவனமான Inter Service Intelligence (ISI) என்ற நிறுவனத்துக்குத் தான் கடிதம் எழுதினார் என்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

மற்றொரு மின்னஞ்சல் கடிதத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை ‘சிம்பன்சி’ (ஆப்பிரிக்காவில் வால் இல்லாத குரங்கு) என்று இலினா குறிப்பிட்டுள்ளார். இந்த ‘சிம்பன்சி’ என்ற வார்த்தை நக்சலைட்டுகளால் பயன்படுத்தும் ரகசிய மொழி  (Code language) என்று கூறி, காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அந்த வால் இல்லாத குரங்குகளே கூட இந்தக் குற்றச்சாட்டுகளைக் கேட்டு, வாய்விட்டுச் சிரிக்கும். இப்படித்தான் நடக்கிறது, இந்த பார்ப்பன நாயகத்தின் அரசும் காவல்துறையும்!

பினாயக் சென் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்

பினாயக் சென்னை விடுதலை செய்யக் கோரி பெரியார் திராவிடர் கழகம் மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் தோழர்கள் இணைந்து டிசம்பர் 31 ஆம் தேதி காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ் தலைமை தாங்கினார். பேராசிரியர் சரசுவதி, கழகத் தோழர்கள் தமிழ்ச் செல்வன், டேவிட் பெரியார், கேசவன், பார்வேந்தன் (விடுதலை சிறுத்தைகள்), டாக்டர் ராக்காய், பேரறிவாளன், டாக்டர் விமுனா மூர்த்தி, மகேந்திரவர்மா உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர்.

‘தேச விரோதம்’ என்ற சட்டப் பிரிவு நீக்கம்: அமெரிக்க தேசியக் கொடியை எரிப்பதை அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது

இந்தியாவின் தேசப் பற்றை அமெரிக்காவிடம் அடகு வைத்தால் அது சூப்பர் தேசபக்தி. பார்ப்பன நாயகம் அந்த தேசபக்தியை தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுகிறது. இந்தியாவின் அரசியலை, பொருளாதாரத்தை அமெரிக்காவிடம் அடகு வைப்பதில் ஆர்வமும், ஆவேசமும் காட்டும் தேச பக்தியாளர்களைக் கேட்கிறோம்,  அதே அமெரிக்காவில் தேச விரோதம் (Sedition)  எப்படிப் பார்க்கப்படுகிறது?

அமெரிக்காவிலே தேச விரோதக் குற்றச்சாட்டை ஒருவர் மீது எந்த சூழ்நிலையில் பயன்படுத்த முடியும் தெரியுமா? நாட்டில் யுத்தப் பிரகடனம் அமுலில் உள்ள காலத்தில் மட்டும் தான். அமெரிக்க உச்சநீதிமன்றம் ‘தேசவிரோத’ப் பேச்சுகளையும், பேச்சுரிமையாகவே அங்கீகரித்திருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் திருத்தமே ‘தேச விரோதம்’ என்பதற்கான கடுமையான வரையறைகளைத் தகர்த்தது தான்.

அமெரிக்காவின் தேசியக் கொடியை எரிப்பது கூட அந்நாட்டுச் சட்டத்தின் படி ‘தேச விரோத’ நடவடிக்கையாகாது. ஆனால் தமிழ்நாட்டில் அமெரிக்கக் கொடியை எரித்தால், உடனே இங்கே ‘தேச விரோத’ சட்டங்கள் பாய்ந்து விடும். அமெரிக்க உச்சநீதிமன்றம் 1969 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் (brandenberg vs Ohio) தேசத் துரோக சட்டப் பிரிவுகளை முழுமையாக செயலற்றதாக்கி விட்டது. அமெரிக்க தேசியக் கொடியை எரிப்பது குற்றம் என்ற சட்டத்தையாவது கொண்டு வரவேண்டும் என்று பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன, அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டே வந்துள்ளன.

அமெரிக்காவின் சட்டப்படி சுயநிர்ணய உரிமை கோருவதும் பிரிந்து செல்ல விரும்பு வதற்கு குரல் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் அல்ல. அமைதியாக ஜனநாயக வழியில் தேசியக் கொடியை எரிக்கவும், அரசு அங்கீகரித்துள்ள சின்னங்களை அவமதிப்பதும் குற்றமாகாது. கனடா, எத்தியோப்பியா, ஆஸ்திரியா, பிரான்சு போன்ற நாடுகளில் அமைதியாக ஜனநாயக வழிமுறையில் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திப் பேச சட்டம் அனுமதிக்கிறது.

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவின் பாதையில் ஓட விரும்பும் போலி தேச பக்தர்கள் பார்ப்பனர்கள், அங்கே வழங்கப்பட்டிருக்கும், இந்த உரிமைகள், இந்தியாவிலும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த மறுப்பது ஏன்? பதில் சொல்வார்களா?

Pin It