மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை:

தமிழக மக்கள் உரிமைக் கழக சார்பில் ஜனவரி 1 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகர் சி.டி.நாயகம் மேல்நிலைப் பள்ளியில் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட் டதைக் கண்டித்து வழக்கறிஞர் பா. புகழேந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு.

பினாயக் சென் என்ற மனித உரிமைப் போராளிக்கு சத்திஸ்கரில் உள்ள ராய்ப்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் டிசம்பர் 24 இல் ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 120(அ), 124(ஆ) மற்றும் சத்தீஸ்கர் மாநில மக்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற காட்டுமிராண்டி சட்டத்தின் பிரிவுகள் 8(1), 8(2), 8(3), 8(5) சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் 39(2) ஆகிய பிரிவுகளின் கீழ், அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

பினாயக்சென் அடிப்படையில் குழந்தைகள் நல மருத்துவர்; தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் தான் 1972 இல் படிப்பை முடித்தார். குழந்தைகள் நல மருத்துவத்தில் மேல் பட்டப் படிப்பும், அதே கல்லூரியில் 1976 இல் முடித்தவர். நேர்மையில்லாத இந்த உலகில், மருத்துவருக்கான தொண்டுக்கு புதிய இலக்கணம் வகுத்து செயல்பட்டார் என்பதற்காக வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி பால் ஹார்ரிசன் என்ற மனித சேவை விருதை 2004 ஆம் ஆண்டு வழங்கி பெருமைப்படுத்தியது. படிப்பை முடித்தவுடன், புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இயங்கும், சமூக மருத்துவம் மற்றும் சுகாதார மேம்பாடு மய்யத்தில் இணைந்து இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார். தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் ஹோஷன்பாட் மாவட்டத் தில் ரசூலியா என்ற பகுதியில் மக்களிடம் நேரடியாகச் சென்று சேவை செய்யும் நண்பர்கள் கிராம மய்யத்தில் இணைந்து பணியாற்றினார். மக்களின் வியாதிகளைக் கண்டறிவதும், காச நோய்க்கு சிகிச்சை செய்வதும், இந்த அமைப்பின் பணிகளாகும்.

உழைக்கும் ஏழை மக்கள் காச நோயில் பெருமளவு பாதிக்கப்படுவதற்குக் காரணம். அவர்களது சமூக பொருளாதார பின்னணியே என்பதை அனுபவத்தில் கண்டறிந்த சென், உருக்காலை அமைந்துள்ள பிலாய் நகரில், சுரங்கத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், காச நோயால் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், அவர் களுக்கு மருத்துவ சேவை செய்ய முன்வந்தார். தள்ளி - ராஜ்ஹரா என்ற பகுதியில் மருத்துவ நண்பர்களுடன் இணைந்து, சிறிய மருத்துவமனை ஒன்றை அமைத்தார். அப்போது சத்திஸ்கர் பகுதி ம.பி. மாநிலத்திலே இருந்தது. அப்பகுதியில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்தத் தொழிற்சங்கத்தில் தொழிலாளர்கள் உரிமைக் காகப் போராடிய தொழிற் சங்கத் தலைவர் சங்கர் குகா நியோகி, தொழிலதிபர்களின் சதியால் 1991 இல் படு கொலை செய்யப்பட்டார். நியோகியுடன் இணைந்து தொழி லாளர்களுக்கு மருத்துவ சேவை வழங்கிய பெருமையும் சென்னுக்கு உண்டு.

பிறகு, தொழிலாளர்களே தங்களுக்கான மருத்துவ மனை ஒன்றை உருவாக்கிக் கொள்ள (ஷாஹீத் மருத்துவ மனை) சென் உதவினார். மிகவும் குறைந்த கட்டணத்தில் தொழிலாளர்களுக்கு, இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னின் இந்த மருத்துவ சேவை மக்களிடையே அவருக்கு பெரும் புகழைக் கொண்டு வந்து சேர்த்து, மக்கள் மருத்துவர் என்று பெயர் பெற்றார். தொழிலாளர்கள் சேவையைத் தொடர்ந்து, பழங்குடியின மக்களின் மருத்துவ சேவையிலும், சென் இறங்கினார். சத்திஸ்கரில் தாம்த்தரி (Dhamtari) மாவட்டத்தில் உள்ள பக்ரும்நாலா கிராமத்தில் பழங்குடி மக்கள் மேம் பாட்டுக்கான சுகாதார சேவைகளில் இறங்கினார்.

பினாயக் சென் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எஸ்.) என்ற மனித உரிமை அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பு 1976 ஆம் ஆண்டு அன்றைய இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, கட்டவிழ்த்துவிட்ட ‘அவசரகால’ அடக்குமுறைக்கு எதிராக மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் தொடங்கப்பட்டதாகும். மருத்துவத்தோடு நின்று விடாது, மனித உரிமைக்கும் மருத்துவ சேவையை பழங்குடி உழைக்கும் மக்களுக்கு கொண்டு செல்வதிலும் அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமைப் போராளியை, ‘இந்தியாவின் பார்ப்பன முதலாளித்துவ ஆளும் வர்க்கம் வழமைபோல் ‘தீவிரவாதி’, ‘தீவிரவாதிகளுக்கு உதவுகிறவர்’ என்ற முத்திரையை குத்தியது. சென் மீது அரசு அடக்குமுறை எந்திரமான காவல்துறை குற்றச்சாட்டுகளைத் தேடத் தொடங்கியது. சென் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் என்ன?

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாராயன்சன்யால் என்ற நக்சலைட் தலைவரிடமிருந்து 3 கடிதங்களைப் பெற்று கல்கத்தாவில்  உள்ள சிலரிடம் கொடுக்கும் ‘கூரியர்’ வேலை செய்தார் என்பதும், இது தேசத் துரோக நடவடிக்கை என்பதும் தான். சென் மீது காவல்துறை ‘புனைந்த’ ‘பயங்கர’ குற்றச்சாட்டு; சிறையில் உள்ள நாராயன் சன்யால், வயது முதிர்ந்தவர்; பி.யு.சி.எல். அமைப்பின் பொறுப்பாளர் என்ற முறையில் மனித உரிமைக் கடமைகளை செயலாற்ற முன் வந்த சென், அவரை சிறைச்சாலைக்கு சென்று அடிக்கடி சந்தித்து, சன்யால் அடிப்படைத் தேவைகளுக்கு உதவிசெய்து வந்தார். ஒவ்வொரு சந்திப்பின் போதும் சென், மனித உரிமை அமைப்பு செயலாளர் என்ற முறையிலேயே சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சந்தித்தார். அவரது சந்திப்பு அதிகாரிகளால், கண்காணிக்கப்பட்டு வந்தது. சந்திப்புக்குப் பிறகு, சோதனைகளுக்கு உட்பட்டே சென் வெளியே வருவார். ஒவ்வொரு சந்திப்பும் சிறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிறை அதிகாரிகளின் பார்வையோடு நிகழ்ந்த சந்திப்பில் அதிகாரிகளுக்கு தெரியாமல் ரகசியமாக, கடிதங்களை கையளிக்கும் வாய்ப்புகள் இல்லை. ஆனால் பழியை எப்படிப் போடலாம் என்று காவல்துறை திட்டமிட்டது.

கல்கத்தாவில் உள்ள தொழிலதிபர் பியுஷ்குகா என்பவரிடம் சிறையிலுள்ள நாராயண் சன்யால் என்ற நக்சலைட் தலைவர் எழுதிய கடிதங்கள் கைப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தை சிறையிலிருந்து ரகசியமாகக் கொண்டு வந்து, பியுஷ்குகாவிடம் சேர்க்கும் ‘தேசத் துரோகத்தை’ செய்தவர் - பினாயக் சென் என்றும், சட்டீஸ்கர் காவல்துறை குற்றம் சாட்டியது.

2007 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்து காவல்துறை டாக்டர் சென்னுக்கு ‘சம்மன்’ அனுப்பியது. காவல்துறை ‘சம்மனை’ ஏற்று டாக்டர் சென் காவல்நிலையம் சென்றார். அங்கே சட்டீஸ்காரின் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டம் (1967), சத்தீஸ்கர், சிறப்பு மக்கள் பாதுகாப்பு சட்டம் (2005) ஆகியவற்றின் கீழ் - பினாயக் சென், கைது செய்யப்பட்டார். சட்டீஸ்கரில் அமுலில் உள்ள இந்தச் சட்டங்கள் மனித உரிமைகளுக்கு எதிரான காட்டுமிராண்டி சட்டங்களாகும். ‘தடா’, ‘பொடா’ சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நீடிக்கப் படாமல் செயலலிழந்து போன நிலையில் அந்த சட்டத்தின் பிரிவுகளை உள்ளடக்கி சத்திகர் மாநில அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது. அத்துடன் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவும் (124ஏ) சேர்க்கப்பட்டு விசாரணைக் கைதியாக, சென் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டு காலம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சென், மாவட்ட நீதிமன்றங்கள் பிணை மறுத்ததைத் தொடர்ந்து உச்சநீதி மன்றம் போனார். 2004 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. சென் கைதைக் கண்டித்து நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்தன. இவர் சிறையிலிருந்த காலத்தில் சுகாதார சேவை மற்றும் மனித உரிமைகளுக்காக வழங்கப்படும் ஜோனாத்தன் மான் என்ற சர்வதேச விருது வழங்கப் பட்டது.  குழந்தைகள் மரண வீதம்; வயிற்றுப் போக்கு நோயால் ஏற்படும் மரண வீதத்தைக் குறைத்த வர்களுக்கு வழங்கப்படும் இந்த சர்வதேச விருதை வாஷிங்டன் நகரில் போய் பெற வேண்டும். இந்த உயரிய விருதைப் பெற பினாயக் சென்னை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற 27 அறிஞர்கள் கூட்டாக வலியுறுத்தியும், இந்திய பார்ப்பன ஆட்சி கோரிக்கையை மறுத்து விட்டது. கைதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா முழுதும் மருத்துவர்கள் ஏழை எளிய மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்களை நடத்தி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். நாடு முழுவதுமிருந்தும் கண்டனங்கள் வெடித்தன.

அமெரிக்க மனித உரிமை சிந்தனையாளர் நோம் கோம்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமர்த்யா சென், மகசேசே விருது பெற்ற அருணாராய், புக்கர் விருது பெற்ற அருந்ததி ராய், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் மற்றும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சென்னின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இப்போது நக்சல் தலைவர் கடிதத்தைப் பெற்று வெளியே ஒருவரிடம் தந்த குற்றம் ‘ராஜ துரோக’ குற்றமாக்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு விட்டது. வழக்கில் முதன்மையான குற்றச்சாட்டே கடிதப் பரிமாற்றம் தான். ஆனால், ஆயுள் தண்டனை வழங்கிய ராய்ப்பூர் அமர்வு நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு உறுதி செய்துள்ளதா? கடிதங்கள் கைப்பற்றப்பட்ட முறையிலேயே காவல்துறை முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே முன் வைத்தது.

(அடுத்த இதழில் முடியும்)

Pin It